விரைந்து வந்து சேரடா

சாரல் பட்டால் உள்ளம் சிலிர்த்துச்
சந்தத் தோடு பாடுதே !
தூர வானில் நிலவைக் கண்டால்
துள்ளி மயங்கி யாடுதே!
ஈரக் காற்று தழுவிச் செல்ல
இதயம் உன்னைத் தேடுதே !
ஓர விழியின் பார்வை என்றன்
உயிரை உரசிப் போகுதே !!

காத்தி ருப்ப தறிந்த பின்னும்
கண்ணா மூச்சி ஏனடா ?
பார்த்து விட்டுப் பாரா முகமாய்ப்
பையத் திரும்ப லாகுமா?
பூத்த மலராய் நானி ருக்கப்
போவ தெங்கே கூறடா!
கோத்த ணிந்த மணிச்சரத்தின்
கொதிக்கும் நிலையைப் பாரடா !!

காற்றி லாடும் பூக்க ளெல்லாம்
கண்ணை வெட்டிச் சிரிக்குதே!
ஊற்றெ டுக்கு மன்பி னாலே
உள்ள முன்னு ளுருகுதே!
நேற்று வரையில் நெஞ்சி னித்த
நேச மெங்கே போனதோ?
வீற்றி ருப்பேன் விடியு மட்டும்
விரைந்து வந்து சேரடா !!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (27-Mar-20, 1:51 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 8

மேலே