இதமாயருகிருப்பேன்

புளிமாங்கனி யவள்பாடலில் பொலிவாயிடம் பிடிக்கும்
எளிதாயொரு கருகூடிட எழிலாய்க்கவி பிறக்கும்
வளிவீசிடு மதிகாலையில் மனம்காதலை நினைக்கும்
வளையாடிடு மொலிகாதினில் மதுபோதையை விதைக்கும் !!

அலைபேசிடும் மொழியாயவ ளழகாய்நகை புரிவாள்
மலைமேனியில் முகில்போலவள் மழையாயுடல் நனைப்பாள்
கலங்காதிரு மனமேயெனக் கனிவாயெனை யணைப்பாள்
இலையோவெனு மிடையாளுட னிணைவேனொரு தினமே!

கனவோவிலை நனவோவிது கதையோவென வறியேன்
எனைப்பாடிடு முயிர்த்தோழியி னிசையோடுளம் நெகிழ்வேன்
வனைவேனொரு கவிநானதில் வளர்காதலை யுரைப்பேன்
இனியாளுடன் மணநாளினி லிதமாயரு கிருப்பேன் !!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (27-Mar-20, 2:04 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 16

மேலே