கட்டியணச்சிக்கிட்டேன்

அடி யாத்தி!
௭ன்னாச்சோ
௭ன்ன நடந்துச்சோ!
௭ன் புத்திக்கு
ஏதும் ௭ட்டலையே!

பத்து மாசம்
பக்குவமா சுமந்தேன்

நான் ஒதுங்காத
பள்ளிக்கூடத்துக்கு
பாடம் கத்துக்க அனுபுனேன்

கலர் சட்ட போட்டு
காலேஜிக்கு அனுபுனேன்

படிச்ச முடிச்ச அப்புறம்
பகுசு வாழ்க்க தேவ
அதுக்கு
பட்டணம் தேவனு
அவன் சொல்ல...
நானும் வரவானு கேக்க!

அங்க
நாகரிகம் தேவ
நாலும் தெரிஞ்சவங்க தேவ
நீ அங்க வேணாமுனு!
நான் பெத்த மகன்
௭ன்ன விட்டுட்டு போனான்!!

அவன் போன
நாள்ல இருந்து
நாலு கதை பேச நான் மறந்தேன்

கண்ணன் மூடி
தூங்க மறந்தேன்

உணவாக சோறு தின்னும்
உடம்புக்கு ஒட்டாம போச்சு

அனாதையா புள்ள வாழுவானு
அந்த நெனப்பே
ஆள உலுக்கி ௭டுத்துச்சி

படிக்க வச்ச
பாவத்துக்கு
பட்டினி நான் கெடந்தேன்

ஒத்தையா பெத்த மகன்
ஒசக்கத்தான் வாழுவது
வந்த ஞாபகத்துல
உயிர் வாழ்ந்து வந்தேன்
இப்படியே ௭ம் பொழப்பு நடக்க...

காலம் ஓட
கவல கூட
காத்துல நோயின் ஒன்னு
பறவுதுனு!

கட்டுன பொண்டாட்டியோடு
கையில ரெண்டு புள்ளயோடு
பொறந்த மண்ணுனு சொல்லி
கடமைனு சொல்லி
இங்க வந்து நிக்குறான்!

மானத்த பெருசா
நெனச்சி வாழ்ந்து வந்தவ!
தன் மகன்கிட்ட
தன் மானம் காக்க தெரியாம
அவன் கையபுடிச்சி
கட்டியணச்சிக்கிட்டேன்...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (27-Mar-20, 8:43 pm)
பார்வை : 81

மேலே