முறையுணர்வோர் பாட்டின் குற்றம் கருதாது பயன் கொள்வர் – அவையடக்கம் 4

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடங்களில் மாங்காய்ச்சீர் வரலாம்)

பயன்கொள்வோ ரதனை நல்கும்
..பசுவுரு விலதென் றோரார்
வியன்சினை வளைவு நோக்கார்
..விளைந்ததீங் கனிப றிப்போர்
கயங்கொள்சே றகற்றித் தெண்ணீர்
..கைக்கொள்வா ரென்ன நூலின்
நயன்கொள்வ தன்றிப் பாவி
..நவையைநோக் கார்மே லோரே. 4

- அவையடக்கம்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”பாலின் பயனைக் கருதுபவர் பால் தருகின்ற இனிமையான பசுவின் உருவதைப் போல நிறம் இல்லையே என்று கருதமாட்டார். விளைந்த கனியைப் பறிப்பவர் மரக் கிளைகளின் வளைவுகளைப் பார்க்க மாட்டார்.

குளத்திலுள்ள சேறை விடுத்து தெளிந்த நீரை எடுத்துக் கொள்வது போல முறையுணர்வோர் பாட்டின் குற்றம் கருதாது பயன் கொள்வர்” என்றும் இப்பாடலாசிரியர் கூறுகிறார்.

கயம் - குளம். நயன் - முறை, பயன். நவை - குற்றம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Mar-20, 10:28 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 14

மேலே