அம்மான்னா அம்மாதான்

மிகுந்த மகிழ்ச்சியோடு பால்கனியில் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார் மாறன். தோட்டத்துப் பூக்களெல்லாம் அவரைப் பார்த்துச் சிரிப்பது போல் இருந்தது. இந்தியாவில் நள்ளிரவாய் இருந்தால்தான் என்ன? உடனே வீட்டுக்குத் தெரிவித்து விட வேண்டும் . மொபைலை எடுத்து அஞ்சனாவுக்குக் கால் செய்தார்.

தூக்க கலக்கத்தில் இருந்த அஞ்சனா, ‘ என்னங்க இந்த நேரத்துல? என்றாள். “அஞ்சு ! ஒரு குட்நியூஸ்.! கொரோனா வால ஐஸொலேட் பண்ணி வச்சிருந்த அம்பது பேரையும் வீட்டுக்கு அனுப்பிட்டாங்க . யூ.எஸ் லருந்து அடுத்த வாரம் சென்னை அனுப்ப ஆஃபீஸ்-லயே அரேன்ஜ் பண்ணிட்டாங்க . நான் எவ்ளோ ஹாப்பியா இருக்கேன் தெரியுமா ? உங்கள எல்லாம் பாக்க மனசு துடியா துடிக்குது ?” மூச்சு விடாம பேசினார்

“என்னங்க சொல்றீங்க? திடீர்னு குண்டத் தூக்கிப் .போடறீங்க ! இங்க சிச்சுவேஷனே சரியில்ல ! அங்கிருந்து வந்தா இங்க வீட்டுக்கும் விடமாட்டாங்க ! எதுக்கு இப்ப அவசரமா ரிஸ்க் எடுத்து வரீங்க? நம்ம பொண்ணு ஷோபாவுக்கு இது ஆறாவது மாசம் ! வயத்துப் பிள்ளக்காரி நம்ம வீட்டுலதான் இருக்கா ! டிவி, பேஸ்புக் , வாட்ஸப்புன்னு எதுல பார்த்தாலும் கொரோனா பத்திதான் ! வெளிநாட்டுல இருந்து வரவங்களால தான் இது பரவுதாம் . இப்ப நீங்க இங்க வர்றது சரியாப் படல! இந்த பீதி அடங்குற வரைக்கும் நீங்க அங்கயே சேஃபா இருங்க ! ஷோபாவ நான் பாத்துக்குறேன் ! காலைல பேசுறேன் ! குட்நைட்” கட் பண்ணி விட்டாள்.

சந்தோஷமாக இருந்தவர் அப்படியே நொறுங்கிப் போய்விட்டார் . கொலகாரக் கொரோனா படுத்துற பாடு ... ஐயோ ! குடும்பத்தோட சேர விடாதோ ? நொந்து விட்டார் . “அஞ்சனாவா இப்படி பேசிட்டா? வயசான காலத்துல ஒண்ணா ஒருத்தருக் கொருத்தர் ஆதரவா , ஆறுதலா இருக்க முடியலயே ! அப்படி எதுக்குப் பணம் ?” தனக்குத் தானே புலம்பியும் மனம் தேறவில்லை. கண்களில் நீர் பெருகிக் கன்னத்தில் கோலமிட்டது.

தூக்கம் தொண்டையை அடைக்க சோபாவில் விழுந்தார். கண்களை வலுக்கட்டாயமாக மூடிக் கொண்டார். அம்மாவின் முகம் மூடிய விழித்திரையில் நிழலாடியது. மேலும் அழுகை முட்டிக் கொண்டு வந்தது. நினைவுகள் பின்னோக்கிச் சுழல ....காட்சி கண்களில் விரிந்தது.

“என்னங்க! உங்களுக்கு யூ.எஸ் ல வேல கெடச்சிருச்சு! ஷோபா டென்த் படிக்கிறா. நாங்களும் உங்களோட வந்தா நம்ம பொண்ணு படிப்பு வீணாயிடும். நான் இங்கேயே இருந்து வேலைக்கும் போய்ட்டு ஷோபாவையும் பாத்துக்குறேன். நீங்க தைரியமா போயிட்டு வாங்க . இன்னும் ரெண்டு வருஷம் படிப்பு முடிஞ்சதும் காலேஜ் ஹாஸ்டல்ல சேர்த்துட்டு நானும் உங்களோட வந்துடறேன் .”

“ஓ.கே. அஞ்சு ! நீ சொன்னா சரிதான். ஆனா நான் உங்கள யெல்லாம் ரொம்பவே மிஸ் பண்ணுவேன்”.

“டோன்ட் வொர்ரி . டெய்லி வாட்ஸப்ல பேசலாம். இன்னொரு விஷயம்... நீங்க இல்லாதப்போ அத்தை இங்க இருக்க வேண்டாம். என்னால வேலைக்கும் போயிட்டுத் தனியா அவங்கள கவனிச்சுக்க முடியாது. ஏதாவது குறை சொன்னா எனக்குப் பிடிக்காது!’

“அஞ்சு! என்னாச்சு உனக்கு? ஏன் இப்படிப் பேசறே ? அம்மா இருந்தா உனக்கும் ஷோபாக்கும் துணையா இருக்குமில்ல? பெரியவங்க அப்படி ஏதாவது பேசினாலும் கண்டுக்காதம்மா!’

“சாரி டியர் ! அது மட்டும் என்னால் முடியாது. ஊர்ல இருக்குற வீட்டில அவங்க இருந்துக்கட்டும். லீவ்ன்னா நான் போயி பாத்துட்டு வரேன்.

“ நீ பேசறது உனக்கே நியாயமாப் படுதா அஞ்சு ? அப்பாவும் இல்ல . அம்மாவத் தனியா எப்படி அந்த கிராமத்துல விடறது ?”

“மாமியார் மருமக ரிலேஷன்ஷிப் நல்லா யிருக்கனும்னா கொஞ்சம் தள்ளிதான் இருக்கணும் ! இல்லன்னா நீங்க இங்கேயே இருங்க ... அவங்களப் பாத்துக்குங்க. எனக்கொன்னும் அப்ஜெக்சன் இல்ல ...!”

“சரி...சரி.. இந்த டாபிக்க இத்தோட விடு! நேரம் பாத்து அம்மா கிட்ட நானே பேசறேன். நீ எதுவும் உளறிவைக்க வேண்டாம் .” மனம் வலிக்க உறங்கிப் போனார் மாறன் .

அடுத்த நாள் மதியம் ...ஷோபா ஸ்கூலுக்கு பேரெண்ட் மீட்டுக்காக அஞ்சனா கிளம்பிவிட்டாள்.மாறன் அம்மாவிடம் எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது என்று தயக்கத்துடன் நிலைகொள்ளாமல் தவித்தார்.

“ மாறா !” அம்மாவின் குரல் கேட்டு மெல்லத் திரும்பினார்.

“மாறா ! நீ எப்பய்யா வேலையில சேரணும்? “

“ இன்னும் ஒரு மாசம் இருக்கும்மா! அதுக்குள்ள எல்லாம் ரெடி பண்ணணும்மா!”
. " ஆமாமய்யா! உனக்கும் நிறைய வேலையிருக்கும் .நான் ஒண்ணு சொல்வேன் .நீ தப்பா நினைக்கக் கூடாது. நீ அமெரிக்கா போனப்புறம் எனக்கு இங்க இருக்க சங்கடமா இருக்குமய்யா . அஞ்சனா ஆபீசுக்குப் போய்டுவா. ஷோபாவும் படிச்சுட்டே இருப்பா. நான் தனியாதான் இருந்தாகனும். இவ்ளோ பெரிய வீட்டுல தனியாயிருக்க என்னவோபோல் இருக்கய்யா . அதனால ....’
“அதனால ..?”

நான் நம்ம கிராமத்து வீட்டுல இருந்துக்குறேன் . அப்பாவோட வாழ்ந்த வீடு. தோப்பு துரவுன்னு... சுத்தி வந்தா நேரம் போவதே தெரியாது. இயற்கையோட ஒன்றி வாழரது மனசுக்கே இதமா இருக்குமய்யா.... வருஷம் ஒருக்கா நீ இங்க வரும்போது நான் உங்க எல்லாரையும் வந்து பாத்துக்குறேன் ....இல்லன்னா நீங்கல்லாம் அங்க வாங்க !

“ அம்மா! நீங்க இங்கயே இருங்கம்மா . அஞ்சுவும் , ஷோபாவும் உங்களப் பாத்துப்பாங்கம்மா ...!”

“ கொஞ்சம் நான் சொல்றதக் கேளய்யா... அங்க இருந்தா உடம்பு மட்டுமல்ல மனசுக்கும் நல்லாயிருக்கும். கிராமத்து ஜனங்க வெள்ளந்தியா பழகுவாங்க. நமக்கு ஒன்னுன்னா ஓடிவருவாங்க.... நீ பயப்படவே வேணாம் ...தயவுசெஞ்சு மறுக்காதய்யா ..”

அரைகுறை மனசோடு சரியென்றார். ஆனாலும் உள்ளுக்குள் உறுத்தல். அஞ்சனாவின் மனசைப் புரிந்து கொண்டு அம்மா எடுத்த முடிவு என்பது விளங்காமலில்லை.

ஊருக்குக் கிளம்புகையில் ஷோபாவக் கட்டியணைத்து, உச்சி முகர்ந்து, முத்தமிட்டு, விழிகசியும் போது மாறனுக்கு இதயம் கசிந்தது. கிராமத்து வீட்டில் விட்டுவிட்டு வரும்போது மனம் உடைந்தது. ஒருகணம் இப்படி ஒரு வேலை தேவையோ... இருப்பதை வைத்துக் கொண்டு சந்தோஷமாய் ஒன்றாய் இருந்திருக்கலாமோ என்று எண்ணத் தொடங்கியது. ஆயினும் மனதைக் கல்லாக்கி கொண்டார்.

“ மாறா ! உடம்ப நல்லாப் பாத்துக்கய்யா ! நேரம் கெடச்சா போன் பேசய்யா ! வருசத்துக்கு ஒருதடவ கண்டிப்பா வந்துரு. அதுக்குமேல என்னால தாங்க முடியாது” கட்டியணைத்து விடைகொடுத்தாள்.
நினைவுகள் துண்டிக்கப்பட மெல்ல கண் விழித்தார் . காலம்தான் எவ்வளவு வேகமாக ஓடுகிறது ! யாருக்காகவும் காத்திருப்பதில்லையே .இடைப்பட்ட பத்தாண்டுகளில் ஷோபா படித்துமுடித்துத் திருமணமாகி இதோ குழந்தைக்குத் தாயாகப்போகிறாள் .அவர்களைப் பார்க்கத்துடித்த மனம் அஞ்சனாவின் பதிலால் தரையில் விழுந்த கண்ணாடித்தட்டு போல் உடைத்துவிட்டது. கொரோனா படுத்தும் பாடு ....!! உயிர்ப்பயமா... பணத்துக்கு இருக்குற மதிப்புக்கூட மனுஷனுக்கில்லை . சே! என்ன உலகமிது ? நேரம் ஓடிக்கொண்டிருந்தது.

பக்கத்திலிருத்த மொபைலை எடுத்து அம்மாவுக்குப் வாட்ஸப்கால் பண்ணினார் .மறுமுனையில் உற்சாகக் குரல். “ மாறா! யய்யா ! எப்படிய்யா இருக்கே !ரொம்ப நாளா போனைக் காணோம் ...! பதறிட்டேன். ஊரெல்லாம் என்னவோ பரவுதாம்ல! சனங்க கொத்துக் கொத்தா சாகுதாம்ல! மடியில நெருப்ப கட்டிட்டு இருந்தேன் .உன் குரல கேட்டதும்தான் உசுரே வந்துச்சு. முதல்ல மாரியாத்தாவுக்குப் பொங்கல் வைக்கணும் . உன்னைப் பாக்காம என் கட்ட வேகாதய்யா ! நீ இப்ப எங்க இருக்க ?உன் முகத்த எனக்கு கொஞ்சம் காட்டு சாமி! நம்மூருக்கு எல்லாரும் வந்துருங்க ..இங்க எந்த பயமுமில்ல ..எல்லாத்தையும் மாரியாத்தா பாத்துப்பா ... “மூச்சு விடாம பேசியவளிடம்

“ அம்மா ! நான் நல்லா இருக்கேன்மா . அடுத்த வாரம் உங்களைப் பாக்க வரேன் . எனக்கு இங்க வேலை முடிஞ்சிருச்சி . உங்க கூட கிராமத்துல ஒரு மாசம் தங்கலாம்னு இருக்கேன் . ஷோபா மாசமா இருக்கிறதால அஞ்சனா வரமுடியாது .அவ ரெஸ்ட்டா இருக்கணும்னு டாக்டர் சொல்லியிருக்காங்க . அதனால நான் மட்டும் வாரேன். எனக்கும் வெளிநாட்டு வாழ்க்கை சலிச்சுப் போச்சும்மா .உங்க கையால கம்பங்கூழும், கேப்பை தோசையும் சாப்பிடணும் . கழனியெல்லாம் சுத்திவரனும் . வேப்பமரத்துக் காத்து வாங்கிக்கிட்டே கயத்துக் கட்டில்ல படுத்து கெடக்கணும் .அந்த காலத்து கதையெல்லாம் பேசணும்மா !”

“ என்னப் பெத்த ராசா ! வாய்யா ! தாராளமா வா ! உனக்கு என்னென்ன வேணுமோ அத்தனையும் செஞ்சித் தாரேன் . அம்மா நல்ல கெதியாத்தான் இருக்கேன் ! இதவிட எனக்கு என்ன சந்தோசம் இருக்க முடியும் ? இங்க இருந்தா எந்த நோயும் அண்டாதய்யா ! என்ன அது ? காக்கானாவா ? காரானாவா எதுவும் நம்ம எல்லைய தொடமுடியாது. மாமரமும், வேப்பமரமும் வீட்டுக்கு வீடு இருக்கு. இயற்கை வெவசாயம், சுத்தமான காத்து , நிம்மதியா இருக்கலாம் . எனக்கு மனசெல்லாம் துடிக்குது ...சீக்கிரமே வந்துடய்யா! சின்ன வயசுல உனக்குப் புடிச்ச பொருவிளங்கா, சீடை எல்லாமே செஞ்சி வைக்கிறேன். அம்மியில வத்தல வறுத்து அரச்சி .மண்சட்டியில அயிர மீன் குழம்பு வச்சுத்தாறேன். எட்டூருக்கு மணக்கும் ! “

“ அம்மா , அம்மா ! இருங்க இப்பவே நாக்குல நீரூறுது. இன்னும் ஒருவாரத்துல வந்துருவேன் . ஒரு மாசம் உங்க கூடதான் இருக்கப் போறேன் . ஆசைதீர சமச்சுத்தாங்க ... வச்சிடவாம்மா !

“சரிய்யா! தூக்கமே வராது. வாசலயே பாத்துட்டிருப்பேன் !”

மனம் லேசாகிக் காற்றில் மிதப்பதுபோல் இருந்தது மாறனுக்கு ! அம்மான்னா அம்மாதான் ...சின்னப் பிள்ளையாய்த் துள்ளி குதிக்கத் தோன்றியது . சட்டென்று ஒரு பொறி ! “அஞ்சனாவும் ஷோபா மேலுள்ள தாய்ப்பாசத்தால்தான் என்னை இப்போது வரவேண்டாம் என்று சொல்லியிருப்பாளோ ?ஆம் . அவளே இரண்டு வருஷம் கழிச்சி இப்போதுதான் மாசமா இருக்கா !”. மன இறுக்கம் முற்றிலும் மறைந்து விட்டது ..

“நேரா அம்மாகிட்ட போய் ஒருமாசம் இருந்துட்டு கொரோனா பீதி ஓய்ந்த பிறகு அம்மாவையும் அழைத்துக்கொண்டு வீட்டுக்குப் போகணும்” தனக்குத் தானே சொல்லிக் கொண்டார் .

சியாமளா ராஜசேகர்


( படைப்பு சிறுகதைப் போட்டிக்காக எழுதியது)

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (29-Mar-20, 12:26 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 179

மேலே