மாலன் நாமம் சொல்ல சொல்ல

மாலன் நாமம் சொல்ல சொல்ல
மாயத் தொற்று மறைந்திடும் !
காலன் ஓலை வந்த போதும்
காத்து நிற்கும் மந்திரம் !
ஆலை யிற்பி ழிந்த கன்ன
லாக நெஞ்சம் வாடுதோ !
காலை மாலை இரவி லென்றும்
கண்கள் மூடிச் சொல்லுவீர் !!

வீட்டி னுள்ளி ருப்ப தென்ன
வேம்பா கக்க சக்குதோ ?
கூட்டை விட்டுன் னாவிப் போகும்
கூட்டங் கூடிப் பேசினால்
சேட்டைக் காரன் போல்கொ ரோனா
சீட்டு கிழிக்கச் சுற்றுதே!
கேட்டுக் கேட்டி ராமநாமம்
கெஞ்சிக் கொஞ்சிப் பாடுவீர் !!

அச்சு றுத்தும் செய்தி கண்டால்
ஆடிப் போகு தோவுளம் ?
துச்ச மென்றே எண்ண லாமோ
தொற்றுத் தொற்றிக் கொள்ளுமே!
நச்சுக் கிருமி போடு மாட்டம்
நாட்டை யுலுக்கி எடுக்குதே !
பச்சை வண்ணன் பாதம் தன்னைப்
பற்றிக் கொள்வாய் நெஞ்சமே !!

பந்த மென்றும் சொந்த மென்றும்
பாவம் பார்க்கு மோவது ?
கந்து வட்டிக் காரன் போலும்
கருணை யின்றிப் பறித்திடும் !
வந்த வேலை முடியுமட்டும்
வாரிச் சுருட்டிப் போய்விடும் !!
வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சி
வேடிக் கைதான் பார்த்திடும் !!

சுற்ற வெளிக்கி ளம்பி டாமல்
சுத்தந் தன்னைப் பேணுவோம்!
தொற்றை எதிர்த்துத் தனித்தி ருந்து
தோற்க டித்துக் காட்டுவோம்!
நற்ற வத்தோர் வாழு மிந்த
நாட்டை விட்டே ஓட்டுவோம் !
சற்று மேதுங் குழப்ப மின்றிச்
சரித்திரத்தை மாற்றுவோம் !!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (30-Mar-20, 1:30 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 13

மேலே