மெல்லினப் பாட்டு

முற்றவும் மெல்லின எழுத்துக்களால் அமைந்தது இச்செய்யுள். அங்ங்னம் பாடுமாறு ஒருவர் கேட்கக் கவிஞர் பாடியது இது.

நேரிசை வெண்பா

மானமே நண்ணா மனமென் மனமென்னும்
மானமான் மன்னா நனிநாணும் - ஈனமாம்
ஆனா மினன்மின்னி முன்முன்னே நண்ணினும்
ஆனா மணிமேனி மான். 74

- கவி காளமேகம்

பதவுரை:

மானமே நண்ணா மனம் என் - மானம் உடைய தன்மை யினையே விரும்பாத மனத்தின் இயல்புதான் என்னே? ஆனாமணி மேனி மான் - ஒப்பற்ற செம்மணி போன்ற திருமேனியினை உடையாளான மான்போன்ற ஒரு நங்கை, ஆனா மினல் மின்னி முன் முன்னே நண்ணினும் - தன் அணிகளால் நீங்காத முன்னொளியினைப் பரப்பிக் கொண்டு முன்னாக முன்னாக வந்தாலும், என் மனமென்னும் மானமான் - என் மனம் என்று சொல்லப் படுகின்ற பெரிய யானையானது, மன்னா நாணும் ஈனமாம் - மிகவும் வெட்கப்படும்; அவட்குத் தாழ்ந்தும் இழிவுற்று நீங்கும்.

பொருளுரை:

மானம் உடைய தன்மையினையே விரும்பாத மனத்தின் இயல்புதான் என்னே? ஒப்பற்ற செம்மணி போன்ற திருமேனியினை உடையாளான மான்போன்ற ஒரு நங்கை, தன் அணிகளால் நீங்காத முன்னொளியினைப் பரப்பிக் கொண்டு முன்னாக முன்னாக வந்தாலும், என் மனம் என்று சொல்லப் படுகின்ற பெரிய யானையானது, மிகவும் வெட்கப்படும்; அவட்குத் தாழ்ந்தும் இழிவுற்று நீங்கும்.

கருத்து:

ஆணின் உள்ளத்து எத்துணைத் தற்பெருமை இருப்பினும், அது ஒரு பெண் முன்னே வரக் கண்டதுமே குன்றிப் போய் வெட்கித் தாழ்வுற்று விடும் தன்மை உடையதாகி விடுகிறது என்பது கருத்து.

சொற்களைப் பகுத்து பொருள் காணும் வகையினை அறிந்து அநுபவிக்கவும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (31-Mar-20, 12:18 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 48

மேலே