குமரேச சதகம் - அரசர் இயல்பு – பாடல் 3

பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

குடிபடையில் அபிமானம், மந்திரா லோசனை,
குறிப்பறிதல், சத்யவசனம்,
கொடைநித்தம் அவரவர்க் கேற்றமரி யாதைபொறை,
கோடாத சதுருபாயம்

படிவிசா ரணையொடுப்ர தானிதள கர்த்தரைப்
பண்பறிந் தேயமைத்தல்,
பல்லுயி ரெலாந்தன் உயிர்க்குநிக ரென்றே
பரித்தல்,குற் றங்களைதல்,

துடிபெறு தனக்குறுதி யானநட் பகமின்மை,
சுகுணமொடு, கல்வியறிவு,
தோலாத காலமிடம் அறிதல்,வினை வலிகண்டு
துட்டநிக் ரகசௌரியம்,

வடிவுபெறு செங்கோல் நடத்திவரும் அரசர்க்கு
வழுவாத முறைமையிதுகாண்
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே! 3

- குருபாததாசர் என்ற முத்துமீனாட்சிக் கவிராயர்

பொருளுரை:

மயிலில் அமர்ந்து திருவிளையாடல் புரியும் குகனே! திருப்புல் வயலில் உயர்ந்த மலையின்மேல் எழுந்தருளிய குமரக் கடவுளே!

குடிகளிடத்தும் படை வீரரிடத்தும் பற்றும், நுண் கருத்துக்களைத் தானே ஆழ்ந்து ஆராயும் திறமையும், மற்றவர் மனத்திலுள்ளதை முகக் குறிப்பால் அறிதலும், உண்மையான பேச்சும், மனமுவந்து கொடுத்தலும், எப்போதும் அவரவர்கட்குத் தக்கவாறு மதிப்பளித்தலும், பொறுமையும், தவறாத நால்வகைச் சூழ்ச்சிகளும்,

நாட்டின் நிலையை வினவி அறிதலும், தன் கீழ் உள்ள அலுவலாளரையும் படைத்தலைவரையும் அவர்களுடைய தகுதி அறிந்து வேலையில் அமைத்தலும், பலவகை உயிர்களையும் தன்னுடைய உயிர்க்கு ஒப்பாகக் காப்பாற்றுதலும், அரசாட்சியில் நேரும் பிழைகளை உடனே நீக்குதலும்,

தனக்கு நன்மையை நாடும் சுறுசுறுப்பான நட்பைத் தேடிக் கொள்வதும், செருக்கு இல்லாமையும், நல்ல பண்புடன் கற்றுத் தேர்ந்த அறிவும், தோல்வியடையாதவாறு காலத்தையும் இடத்தையும் அறிதலும், இருவருடைய போர்த்தொழிலின் வலிமையையும் அறிந்து தீயவர்களை அழிக்கின்ற திறமையும் இவை போன்றவைகளும் செம்மையான சிறந்த ஆட்சியைப் புரியும் மன்னவர்கட்கு தவறாத நெறிகளாகும்.

விளக்கவுரை:

நால்வகைச் சூழ்ச்சி: இனிமையாகப் பேசுதல் (சாமம்),
வேறுபடுத்தல் (பேதம்), பொருள் கொடுத்தல் (தானம்),
ஒறுத்தல் (தண்டம்); பகைவரை இந்த நால்வகையுள்
ஒன்றால் ஏற்ற வகையில் வெல்வது அரசர் கடமை.

அருஞ்சொற்கள்:

கோடுதல் - மாறுபடுதல். படி - உலகு; இங்கு அவன் ஆளும் நாட்டை மட்டும் குறிக்கிறது. தளம் – படை, கர்த்தர் - தலைவர். அகம் - மனம்; இங்கே தற்பெருமையைக் குறிக்கிறது.
சுகுணம் - நற்பண்பு. துட்டர் - கயவர். நிக்கிரகம் - நீக்குதல். சௌரியம் - வீரம்.

கருத்து:

அரசர்கள் குடிகளிடம் அன்பும், தரம் அறிதலும், குறிப்பறிதலும், நல்ல நட்புடன் செருக்கின்றி யிருத்தலும், காலம் இடம் வலியறிந்து பகைவரை வெல்வதும், கயவரை ஒறுத்தலும் உடையவர்களாக இருத்தல் வேண்டும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Apr-20, 1:33 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 44

சிறந்த கட்டுரைகள்

மேலே