குமரேச சதகம் - வேளாளர் இயல்பு – பாடல் 5

பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

நல்லதே வாலயம் பூசனை நடப்பதும்,
நாள்தோறும் மழைபொழிவதும்,
நாடிய தபோதனர்கள் மாதவம் புரிவதும்,
நவில்வேத வேதியரெலாம்

சொல்லரிய யாகாதி கருமங்கள் செய்வதும்,
தொல்புவிசெழிக் கும்நலமும்,
சுபசோப னங்களும், கொற்றவர்கள் செங்கோல்
துலங்குமனு நெறிமுறையும்,

வெல்லரிய சுகிர்தமொடு வர்த்தகர் கொள்விலையும்
விற்பனையும், அதிகபுகழும்,
மிக்கஅதி காரமும், தொழிலாளர் சீவனமும்,
வீரரண சூரவலியும்,

வல்லமைகள் சகலமும், வேளாளர் மேழியின்
வாழ்வினால் விளைவ அன்றோ?
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே!

- குருபாததாசர் என்ற முத்துமீனாட்சிக் கவிராயர்

பொருளுரை:

மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு மலைமேவு குமரேசனே!

நன்மையைத் தரும் தெய்வங்களின் கோயில்களில் வழிபாடு நடைபெறுவதும், காலம் தவறாமல் மழை பெய்வதும், தவத்தை நாடியவர்கள் பெரிய தவம் செய்வதும்,

மறையை ஓதும் மறையவர்களெல்லோரும் கூறுதற் கியலாத பெருமை மிக்க வேள்வி முதலிய தொழில்களைப் புரிவதும், பழைமையான உலகம் வளம் பெறுதற்குரிய செயல்களும், நல்ல மங்கலத் தொழில்களும், அரசர்களுடைய நல்ல ஆட்சி விளக்கமுறும் மனுநெறி தவறாமையும்,

கெடாத நன்மையுடன் வணிகர் பொருளை வாங்கி விற்பதும், பெரும் பேரும், பெரிய ஆட்சியும், தொழிலாளர் வாழ்க்கையும், போர்க்களத்திலே பகைவர் அஞ்சிப் போர்புரியும் ஆற்றலும்,

எல்லா வகை வலிமைகளும், வேளாளர்களின் உழவுத் தொழிலால் உண்டாவன அல்லவா?

விளக்கவுரை: தேவ + ஆலயம்: தேவாலயம்: தேவாலயம் (வட) - கடவுள் கோயில்.
தபோதனர்கள் (வட) - தவச் செல்வர். நவிலுதல் - சொல்லுதல், தொன்மை+புவி: தொல்புவி,
தொன்மை - பழைமை, மனு: மானிடரின் முதல்வர்; மனுவின் வழிவந்தவர்கள் மானிடர்.
சுகிர்தம் - நன்மை. இரணம் - புண். புண்படப் போர் செய்யுமிடம் - இரணகளம்.
இரணசூரர் - இரணகளத்திலே அஞ்சாதவர்; சூர் - அச்சம்.

மேழிச் செல்வம் கோழை படாது - ‘உழுவார் உலகத்துக்கு ஆணி' என்பனபோல வருவன வேளாண்மையின் சிறப்பைக் குறிக்கும்.

வேள் - உபகாரம். (கொடை) வேளாளர் - உபகாரிகள், வேளாண்மை - கொடைத்தன்மை.

வேள் என்பதற்கு மண் என்றும் வேளாளர் என்போர் மண்ணை உழுது உண்போர் என உரைப்பதும் உண்டு.

கருத்து: வேளாளரே உலகத்தைக் காப்பவர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Apr-20, 8:11 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 52

சிறந்த கட்டுரைகள்

மேலே