ர்வாடியார் கருவூலம் நூல் ஆசிரியர் கவிஞர் இரா இரவி நூல் விமர்சனம் பேரா G ராமமூர்த்தி

(படித்ததில் பிடித்தது)



ஏர்வாடியார் கருவூலம் !



நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !



நூல் விமர்சனம் : பேரா. G. ராமமூர்த்தி

ஒருங்கிணைப்பாளர் மதுரை வாசகர் வட்டம்






வெளியீடு : வானதி பதிப்பகம், சென்னை – 600 017.
முதற் பதிப்பு : டிசம்பர் 2019

விலை : ரூ.70. பக்கம் : 114


*****

நூலாசிரியர் பற்றி :

கவிஞர் இரா. இரவி, சிறந்த ஹைக்கூ கவிஞர். ஹைக்கூ திலகம் என்றும் பாராட்டப்படுகிறார். தமிழ்நாடு சுற்றுலாத் துறையில் உதவி சுற்றுலா அலுவலராகப் பணிபுரியும் இவர், தமிழார்வம் காரணமாக, கவிஞராக உருவெடுத்தவர். இணையதளத்திலும், தம் ஹைக்கூ கவிதைகளை பதிவேற்றம் செய்து, பல்லாயிரக்கணக்கான, தமிழ் ஆர்வலர்களைத் தன் வசம் ஈர்த்தவர். நம் மதுரை வாசகர் வட்டத்தின் தீவிர ஈடுபாடுள்ள வாசகர் இவர் என்றால் மிகையாகாது. இந்நூல், அவரது 22-வது நூல்.

ஏர்வாடியார் பற்றி இவர் கூறும் போது, நல்லவர், வல்லவர், எழுத்தாளர், பேச்சாளர், நாடக ஆசிரியர், இதழாசிரியர், பன்முக ஆற்றலாளர் எனப் புகழாரம் சூட்டுகிறார். ஏர்வாடியார், தனது ஒவ்வொரு பிறந்த நாள் அன்றும், தான் எழுதிய நூல்களை வெளியிடுவார். பிற நூலாசிரியர்களுக்கு நூல்கள் போட்டி வைத்து, பரிசுகள் வழங்கி ஊக்குவிப்பார். கர்வம் இல்லாத எளிய மனிதர். ஏர்வாடியார் நூல்களுக்கு எழுதிய மதிப்புரை தான் இந்த நூல்.

நூல் பற்றி :

ஏர்வாடியாரின் நூல்களுக்கு (7) மதிப்புரையும், கவிஞர் இரா.இரவியின் நூல்களுக்கு (11) ஏர்வாடியார் எழுதிய மதிப்புரைகள் கொண்டதுமாக இந்நூல் அமைந்துள்ளது. திருநெல்வேலி அருகே உள்ள ஏர்வாடி என்ற ஊரில் பிறந்த எஸ். இராதாகிருஷ்ணன், இலக்கிய உலகில் ஏர்வாடியார் என்றே அழைக்கப்படுகிறார்.
ஒரு நாளும், ஒவ்வொரு நாளும் என்ற நூலில் 38 தலைப்புகளில் மரபுக் கவிதைகளும், புதுக்கவிதைகளும் உள்ளன. யாரும், யாராகவும் என்ற நூல், மனிதன் மனிதனாக வாழ வைக்கும் வாழ்வியல் கருத்து கூறும் விதமாக உள்ளதாக கூறுகிறார். ஏர்வாடியாரின் மனத்தில் பதிந்தவர்கள் என்னும் நூலில்,
19 ஆளுமைகள் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. நல்லவை மட்டுமே அவர் கண்ணில் படும். நூல் மதிப்பீடு பகுதி-1 நூலில், பல நூல்களின் மதிப்புரையாக வெளியாகி உள்ளது. பகுதி-2 நூலில், மதிப்பீடு தரம் உயர்ந்திருக்கும். நூலைப் படிக்க வேண்டும் என்ற ஆவல் மிகும். ஏர்வாடியம் என்ற அணிந்துரைகளையும் தொகுத்து புகழ்மாலையாக்கி அவருக்கு இலக்கியமாலை சூட்டி உள்ளனர். வெளிநாட்டு கவிஞர்கள் பலரும் இவர் கவிதையில் காணப்படுகின்றார்.

கவிஞர் இரவி எழுதிய புத்தகங்களுக்கு ஏர்வாடியார் எழுதிய மதிப்புரைகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளது. கவிஞர் இரவி கடலாக நம்முன் விரிந்திருக்கிறார் என்கிறார்.



புவி ஈர்ப்பு சக்தியை

விஞ்சிடும் அவள்

விழி ஈர்ப்பு சக்தி

போன்ற வரிகளால் ஈர்க்கப்பட்டு இருக்கிறார். மதிப்புரைகள் மொத்தமாகி, ஒரு புத்தகமானது, இதுவே முதல்முறை.

முடியாது என்று முடங்காதே ;

முடியும் என்றே

முயன்றிடு

போன்ற எளிய வரிகளை சுட்டுகிறார்.

முடியாது என்று எடிசன் மின்சாரம் கண்டுபிடிக்காவிட்டால் உலகம் முழுவதும் இருட்டாகவே இருந்திருக்கும். பெருந்தலைவர்களை எல்லாம், தமது கவிதை வரிகளால் வாழ்த்தியுள்ளார் இரவி எனக் கூறியுள்ளார்.

ஹைக்கூ முதற்றே உலகு என்னும் நூலில், கலாமைப் பற்றி, அவரது மூச்சு மட்டுமே நின்றது, அவர் பற்றிய பேச்சு நிற்காது அருகே முட்கள், ஆனாலும் மகிழ்வாக ரோஜா. சினம் வரும் நேரம் கவனம், சிறந்தது மவுனம்.

வெளிச்ச விதைகள் நூலில், காதலிக்கு,

“மூன்று பக்கமும் கடலால் சூழ்ந்த்து இந்தியா,

முழுவதும்உன்னால்

சூழப்பட்டவன் நான் !

தாய்க்கு, “உயிரும் உடலும் தந்த வள்ளல், உயிரை வளர்த்தச் செம்மல்”, தந்தைக்கு, “வாடினால் வாட்டம் போக்குபவர் தந்தை, வளங்களை வழங்கி மகிழ்பவர் தந்தை”. திருமணத்தை, “வாழ்வில் மறக்க முடியாத பொன்னாள், வசந்தங்கள் அறிமுகமான நாள்” என்று கவிதை பாடுகிறார்.

ஹைக்கூ உலா நூலில், “முதல் மொழி மட்டுமல்ல, முதன்மையான மொழி தமிழ்”,

“கைரேகையில் இல்லை,

கைகளில் உள்ளது

எதிர்காலம்”,

வருமானம் அல்ல,

அவமானம்

மதுக்கடை”,

ஜல்லிக்கட்டு பற்றி,

“தலைவன் இல்லாத

போராட்டம் அல்ல,

தமிழே தலைவன்”

என்று பாராட்டுகிறார்.

கவிச்சுவை நூலில்,

“குழந்தையைப் போல் உள்ளம் கொண்டால், குவலயத்தில் ஆகலாம் கலாம்”,

“தமிழ் எனக்குச் சரியாக வராது என்போர்,

தடுக்கி விழுந்ததும் அம்மா என்பார்கள்”.

“பயிர் வளர்ந்திட களை எடுத்திட வேண்டும், பைந்தமிழ் வளர்த்திட பிறசொல் நீக்கிடல் வேண்டும்”,

“தமிழ் எங்கள் உயிருக்கு மேல்”,

மனதில் பட்டதை, அச்சமின்றி உரைக்கும் மண்ணில் வாழும் தேவதை குழந்தை

என அன்பு பாராட்டுகிறார்.

ஹைக்கூ 500 நூலில்,

“நாட்டின் முதுகெலும்பு

முறிவது முறையோ,

உழவன் தற்கொலை”,

“இருக்கலாம் சேலையில் அழுக்கு,

இல்லை மனத்தில் அழுக்கு,

நாற்று நடும் பெண்கள்”,

“கடவுளுக்காக இல்லாவிடினும்,

இவருக்காக வாங்குங்கள்

மண் விளக்கு”,

“அடுப்பில் முடங்கியது போதும்,

அகிலம் காண வா”,

“யாராக இருந்தாலும்,

தலைவணங்க வேண்டும்,

ஏழையின் குடிசை”,

இறையன்பு கருவூலம் நூலுக்காக, “இன்றைய இளைஞர்களுக்கு, கலாம் அவர்களுக்கு அடுத்த இடத்தில், இறையன்பு மதிப்பிற்குரியவர் ஆவார். நம் மூளை, இதயம் ஆகியவையே கோயில்கள், கருணையே தத்துவம் என்னும் கலாம் கோட்பாட்டை நிரூபணமாக்குகிறார். உண்மையான சுயமரியாதை உள்ளவன் எந்த இடத்திலும் யார் முன்பும் அசிங்கப்பட தயாராக இருக்க மாட்டான். அவனுடைய பண்புகள் அவனைத் தூக்கிப் பிடிக்கும்.

இலக்கிய இணையர் நூலுக்கு, இலக்கிய உலகில் அவர்களது மாணவராகவும், வளர்ப்புப் பிள்ளையாகவும் விளங்குகிறார் இரவி. இந்நூலில், பேராசிரியர் மோகன், பேரா. நிர்மலா மோகன் இணையருக்கு, கவிஞர் இரவி போர்த்திச் சிறப்பித்துள்ள பொன்னாடை இந்நூல் என்கிறார்.

மனத்தில் பதிந்தவர்கள் நூலுக்கு, ஹைக்கூ கவிதைக்கு, அவற்றை அறிமுகப்படுத்திய தமிழன்பன், அப்துல் ரகுமான் போன்றோரை குறிப்பிடும் போது, கவிஞர் இரவியையும் குறிப்பிட்டாக வேண்டும் என்று கூறுகிறார்.

அவரது படைப்புகள், பல்கலையில் பட்டம் பெற, ஆய்வுப்பொருளானது பெருமையான ஒன்று. தன்னைப் பற்றி மட்டுமே தகவல் பரப்பிக் கொள்ளாமல், மற்றவர்கெல்லாம் கொள்கை பரப்புச் செயலாளராக இயங்கிக் கொண்டிருக்கிறார் என்று கூறுகிறார். அவர் அமைத்த கவிமலர் டாட் காம் இணையதளத்தை, உலகம் முழுவதும் ஏறத்தாழ 5 இலட்சம் பேர் பார்த்திருக்கின்றனர்.

இலக்கியத்தில் மட்டுமல்லாது, சமூகப் பணிகளிலும் இணைத்துக் கொண்டுள்ளார். பல குருதிக் கொடை முகாம்களில் கலந்து கொண்டு, “குருதிக் கொடை” வழங்கி உள்ளார். அமெரிக்க, மெரிலாண்ட் பல்கலைக்கழகம், அவருக்கு “முனைவர்” பட்டம் வழங்கி உள்ளது. கவிஞர் இரா .இரவியின் சிறப்பான ஹைக்கூ கவிதைகள் சில :

“மூட நம்பிக்கைகளில்

ஒன்றானது

தேர்தல்”



“தொகை கூடக் கூட,

துணி குறைவானது

நடிகைக்கு”



“ஆரம்பமானது

பகல் கொள்ளை

கல்வி நிறுவனங்கள்”



“குஞ்சுகள் மிதித்து

கோழிகள் காயம்

முதியோர் இல்லம்”



“சுனாமிகள் வருவதாய்

மருமகள்கள் பேச்சு

மாமியார் வருகை”

வாழ்க்கையை வெற்றிகரமாக ஆக்கிக் கொண்ட வித்தகக் கவிஞர், வியத்தகு மனிதர் இரவி. கவிஞர் இரவியை, இன்னும் 100 ஆண்டுகள் வாழ, வாழ்த்தி முடிக்கிறார் ஏர்வாடியார்.



.

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (8-Apr-20, 4:24 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 52

மேலே