மாற்றம்

நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன். அதிகாலையில் எவ்வளவு முன்னதாக எழுந்தாலும் எப்படியாவது தாமதமாகிவிடுகிறது. இன்றைக்குக் கணித வகுப்பு. இரண்டு நிமிடம் தாமதமாகச் சென்றாலும் அவர் வகுப்பறைக்குள் விடமாட்டார். பரபரப்பு என்னைத் தொற்றிக் கொண்டது உடனடியாகப் புத்தகப் பையும் மதிய உணவுப் பையையும் எடுத்துக்கொண்டு எனக்குப் பிரியமான "லேடி பேர்ட்" சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பினேன்.

திருச்சி டு கோயம்புத்தூர் நெடுஞ்சாலையைத் தாண்டித்தான் பள்ளிக்கூடத்திற்கு வர வேண்டும். காலை ஏழு மணி முதலே வாகனங்கள் விரைந்து கொண்டிருக்கும். சீக்கிரமாக வகுப்பிற்குச் சென்று சேர வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் மன அழுத்தத்துடனும் பயத்துடனும் நெடுஞ்சாலையில் வெகு விரைவாக சைக்கிளில் வருவது மிகவும் ஆபத்தானது.

பேருந்துகளும் லாரிகளும் மிகவும் வேகமாக என்னைக் கடந்து சென்றன.சைக்கிளை மிதித்துக் கொண்டே கைக்கடிகாரத்தை ஒருமுறை பார்த்தேன். இன்னும் நான்கு நிமிடத்திற்குள் சென்று சேர வேண்டும். சைக்கிளின் பெடல்களை மிகவும் வேகமாக அழுத்தினேன்.‌ "டப்" என்ற சத்தம் கேட்டது. எனது சைக்கிள் ஒரு புறமாக இழுத்துச் சென்றது. உடனடியாகப் பிரேக்கைப் பிடித்துச் சைக்கிளை நிறுத்தினேன். டயர் பஞ்சராகி இருந்தது.


கணித ஆசிரியர் நேரம் தவறாமை, ஒழுக்கம் ஆகியவற்றில் எந்தவொரு சமரசமும் செய்து கொள்ளாதவர். மிகவும் கண்டிப்பானவர். கடுமையான தண்டனையும் அளிப்பார்.ஆனால் மிகச் சிறப்பாக பாடம் நடத்துவார். எனவே அனைவருக்கும் பிடித்த ஆசிரியராகவே இருந்தார்.
ஒரு நிமிடம் தாமதமானாலும் வகுப்பறைக்குள் விடமாட்டார். வெளியில் தான் நிற்க வேண்டும்.

இன்னிக்கு சார் அல்ஜீப்ரா ஆரம்பிக்கிறேன் சொன்னாரு. எப்படியாவது சரியான நேரத்துக்கு போயிடலாம்னு பாத்தா இப்படி டயர் பஞ்சர் ஆயிடுச்சே. கோபமும் அழுகையும் வந்தது. ஆனால் எப்படியாவது போயே ஆகவேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. சுற்றும்முற்றும் பார்த்தேன் பக்கத்தில் பஞ்சர் ஒட்டும் கடை எதுவுமே இல்லை. என்ன செய்வது என்று தெரியாமல் நின்றுகொண்டிருந்தேன். அப்பொழுது எங்கள் பள்ளியில் பதினோராம் வகுப்பு படிக்கும் அக்கா என்னருகில் வந்தாள். அவர்களுக்குச் சிறப்பு வகுப்பு இல்லை.

"என்னாச்சு", என்று கேட்டாள். நான் நடந்ததைக் கூறினேன். மேலும் "அக்கா கொஞ்சம் உங்க சைக்கிளைக் கொடுக்கிறீங்களா?" என்று தயக்கத்துடன் கேட்டேன். அக்கா சூழ்நிலைகள் அனைத்தையும் புரிந்துகொண்டு "சரி, இந்தா என்னுடைய சைக்கிளை எடுத்துட்டுப் போ நான் உன்னுடைய சைக்கிளுக்குப் பஞ்சர் ஒட்டி அப்புறமா ஸ்கூலுக்கு எடுத்துட்டு வரேன்". எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. மகிழ்ச்சியாக இருந்தது. கைகூப்பி நன்றி தெரிவித்துவிட்டு உடனடியாக அக்காவின் சைக்கிளை எடுத்துக்கொண்டு விரைந்தேன்.

வகுப்பறை வாசலை அடையும்பொழுது இரண்டு நிமிடம் தாமதமாகி இருந்தது. அவர் என்னை வெளியிலேயே நிற்குமாறு சொன்னார்.உடை முழுதும் வியர்வையால் நனைந்து இருந்தது. முகம் வியர்வையாலும் கண்ணீராலும் நனைந்திருந்தது. அவமானமாகவும் இருந்தது. ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது. விடை தெரியாமல் கனத்த இதயத்துடன் வெளியில் நின்று பாடத்தை கவனித்துக்கொண்டிருந்தேன். வெயில் சுட்டெரித்தது.

ஒரு மணி நேர வகுப்பு முடிந்தவுடன் வெளியில் வந்து "ஏன் தாமதம் ஆயிற்று? என்று கேட்டார்.நான் நடந்தவை அனைத்தையும் கூறினேன். அவர் என்னை பரிதாபமாகப் பார்த்தார்.

அப்பொழுது இன்னொரு மாணவனும், அவனது தந்தையும் வந்து சேர்ந்தனர். "சார் ஊருக்குப் போயிருந்தோம், வர லேட்டாயிடுச்சு அதனால உங்க கிட்ட சொல்லிட்டு விட்டுட்டுப் போகலாம்னு வந்தேன்" என்று சொல்லிவிட்டு ஆசிரியரின் பதிலுக்காக காத்திராமல் அந்த மாணவனின் தந்தை திரும்பிச் சென்று கொண்டிருந்தார். மாணவன் வகுப்பறைக்குள் நுழைந்தான் அவரது அனுமதியை எதிர்பார்க்காமல்.

இப்பொழுது ஆசிரியர் என்னைப் திரும்பிப் பார்த்தார். அவரது கண்ணில் என்மீதான பரிதாபம் மறைந்திருந்தது.என்னைத் தீர்க்கமாக ஆழமாக சிறிது நேரம் உற்றுப் பார்த்ததார். பினபு என்னை வகுப்பறைக்குள் செல்லுமாறு கூறிவிட்டு தளர்வாக நடந்து சென்றார்.

மறுநாளிலிருந்து அவர் கண்டிப்பாக இருப்பதையும் தண்டனை அளிப்பதையும் நிறுத்திவிட்டார். எனக்கு ஏன் என்று தெரியவில்லை?

எழுதியவர் : சூரிய காந்தி (8-Apr-20, 11:29 pm)
சேர்த்தது : சூரிய காந்தி
Tanglish : maatram
பார்வை : 147

மேலே