மறதி அணிக

கசடறக் கற்ற நெளிவு சுளிவுகளின்
கசடுகள் கழிய - மறதி அணிக

இன்றையக் கணக்கை இரவில் கரைத்து
நாளைய நாளை புதிதாய்த் திறக்க - மறதி அணிக

மடிந்த சண்டைகள், முடிந்த காதல், முடியாத முகத்திதி
மூன்றும் எதிர் வந்தால் - மறதி அணிக

சாதனையின் கர்வம், சோதனையின் தொய்வு
இரண்டும் வேகத்தடை - மறதி அணிக

எதிரியின் பலத்தை மனதில் பின்வைக்க
பலவீனம் மாற்றி உம் பலத்தை முன்வைக்க
அவ்வப்போது, ஆங்காங்கே - மறதி அணிக

கற்கும் போது கற்ற திமிரும்
கற்பிக்கும் போது கல்லாத துறையும்
தற்கொலையின் தம்பிகள் - மறதி அணிக

பேரின்பப் பயணத்தில் சிற்றின்பச் சாலையையும்
சிற்றின்பச் சாலையில் பேரின்பப் பிரச்சாரத்தையும்
மறந்தும் செய்யாமல் - மறதி அணிக

சிறுதீமைகளாம் புகை மதுவும்
பெருந்தீமைகளாம் பொறாமை புரளியும்
தாண்டிக் கடக்க - மறதி அணிக

பிறர் செய்த தீமையும்
நீர் செய்த நன்மையும்
நீங்காமல் நின்றால் - மறதி அணிக

முடியாது தெரியாது மாறாது என்ற
எதிர்மறைகளை எதிர்கொண்ட மறுநொடியே
- மறதி அணிக

நிறைந்து வழியும் நினைவுகள் மாளிகையின்
ஒற்றைச் சாளரம் மறதி - அதனால் அணிக

மறதி மாணிக்கம் என இனி யாரேனும் ஏசினால்
நன்றி நவின்று இக்கவிதையைக் காட்டுக!

எழுதியவர் : புதுயுகன் (12-Apr-20, 6:25 pm)
சேர்த்தது : pudhuyugan
பார்வை : 132

மேலே