சின்னக் கண்ணா இங்கேவா

சின்னக் கண்ணா இங்கேவா!

சின்னக் கண்ணா இங்கேவா - நீ
சிரித்து மகிழ்ந்து அன்பைதா
உலகம் முழுதும் உன்சொந்தம் - உன்
உள்ளத்தில் வேண்டாம் தீப்பந்தம்

சாக்கடை புழுவாய் கிடக்காமல் - ஒரு
சரித்திரம் படைக்க புறப்படுவாய்
மாக்கடல் அலைகளும் உன்முன்னே - வந்து
மண்டி இடும்படி செய்திடுவாய்

கைகால் முடக்கி கிடந்தாலே - எந்த
காரியம் நீயும் சாதிப்பாய்
காலடி எடுத்து முன்வைத்தால் - உன்
கோலம் மாறிடும் கவனிப்பாய்

எறும்பும் ஈயும் சிறியவைதான் - அதன்
சுறுசுறுப்பை நீ பார்க்கலையா?
காக்கையும் கோழியும் பறவைதன் - அது
காலையில் கூவிடும் கேட்கலையா?

அதிகாலை விழித்து எழுவதுதான் - இந்த
அகிலத்தில் உயர்ந்தோர் முதல்கொள்கை
விதிமேல் குற்றம் கூறுவது - பல
வீணர்கள் கொண்ட மனக்கொள்கை

செய்கையில் மாற்றம் இல்லாமல் - நீ
சரித்திரம் படைக்க முடியாது
புத்தியின் பலத்தை பெருக்காமல் - உன்
பூலோக வாழ்க்கை விடியாது

துடிப்புடன் கடமை நீயாற்று - மன
பிடிப்புடன் அதனை நிறைவேற்று
எங்கே போய்விடும் உன்வெற்றி - அது
சங்கமம் ஆகிடும் உனைப்பற்றி.

பாவலர். சொ. பாஸ்கரன்

எழுதியவர் : சொ. பாஸ்கரன் (14-Apr-20, 12:06 pm)
சேர்த்தது : சொ பாஸ்கரன்
பார்வை : 47

மேலே