விடைகான வேண்டும்
விடை காண வேண்டும்
=========================
வறுமையை மட்டும் தங்கள்
-வாழ்வினில் பெருக்கிக் கொண்டோர்
வெறுமையைப் போக்க வென்று
-வீட்டினுள் நுழைந்த திந்நோய்
அறுவடை யாக்கி வைக்கும்
-அழகிய வாழ்வை மீண்டும்
பெறுகிற கால மொன்று
-பிறந்திட வேண்டு மிங்கே.
**
தினசரி பெருகும் பிணியால்
-திருடனைப் போல்ப துங்கி
மனத்தொடு துன்ப மேந்தி
-மனைகளில் முடங்கிக் கொண்டு
கனத்திடும் நாட்கள் தன்னைக்
-கடத்திட தவிக்கும் மக்கள்
சினத்துடன் வெறுப்பை யுண்டு
-சிதைவது மாற வேண்டும்
**
பட்டினி மரண மொன்றைப்
-பரிசென வழங்கு தற்கு
சட்டென விரையும் காலம்
-சகலரின் வீட்டை நோக்கி
முட்டிட முன்பே இதற்கோர்
-முடிவினை கட்டி எம்மை
விட்டிது விலகு தற்கோர்
-விடையினைக் காண வேண்டும்
**