கொரொனா…………
கொரொனா…………..
நீ உதித்த நாள் முதலாய்
அஸ்தமத்தில் ஆதவனாய்….
உருவுறாய் கண்ணுக்குள்
உயிருற்றாய் எம் ஊணுக்குள்…
காற்றினில் நீர்க் கோட்டை கட்டி
எம் கனவுகளை நெருப்பு மூட்டி
லட்சுமணன் ரேகையிட்டாய்
எம் வீட்டு வாயிலிலே……
வானரமோ மரக்கிளையில்
பட்சிகளோ வான் வெளியில்
நரம்பறுத்த நினைவுகளில்
நடமாடுதம்மா மனித குலம்…
தொட்டயிடமெல்லாம்
தொடர்வதாய் உன் பந்தம்
நீ விட்ட பாடில்லை எமை வீட்டினுள்
அடைத்த பின்னும்…
நாளும் விரிவுறும்
நின் சாம்ராச்சியத்தால்
எம் வாழ்க்கை வட்டத்தின் ஆரங்கள்
அடங்கி விட்டன சில அங்குலத்தில்….
உன் பெயரை மட்டும்
வார்த்தைகளாய் ஊற்றிக் கொண்ட
செவிகளிரெண்டும்
நிரம்பி வழிகின்றன வலியால்….
கீழ்வானச் சிவப்பு கண்டு
சிலிர்ப்பதாய் எம் மேனி
நீ குடித்த மானுட உதிரத்தை
தெளித்து வைத்த முற்றம் போல்…..
நீ புலம்பெயரும் நாளை எண்ணி
எம் பொழுதுகள்
தங்களை கிழித்துக் கொல்கின்றன
நாட்காட்டியிலிருந்து….
எம் வாழ்வின் வித்துக்கள்
நின் உயிர்த் துளியில் புதையு முன்னே
உன் சுவடுகளின் எச்சமில்லா எம் மண்ணை
மீட்டிடுவோம் எனும் நம்பிக்கையில்…..
நாளும் துளிர்கிறது . . .
எம் புதிய உலகத்தின் கிளைகள்….
சு. உமாதேவி
….