வாழ் மனிதா வாழ்

வாழ் மனிதா வாழ்
************************************
இது
நன்றி நவிழ்ந்திடும் நேரம்..!

என்னென்ன கொடுத்தது
இந்தப் பிரபஞ்சம்
இந்ந பூமி
இந்த நாடு
இந்த வாழ்வு

எத்தனை சந்தோஷங்கள்
எத்தனை நினைவுகள்
எத்தனை பாடங்கள்

இனியேனும் சிரி
பார்க்கும் மனிதரிடமெல்லாம்
புன்னகை செய்

எதிரில் எதிரி வந்தாலும்
புன்னகை ஆயுதத்தால்
எதிர்கொள்

கொஞ்சம்
அக்கறைக் காற்றால் வருடிக் கொடு

சாதிக் கழிவை
சாக்கடையில்
எறி

அன்புப் பள்ளம் தோண்டி
அதில்
கோபப் பிணத்தை புதைத்து விடு

காலையின்
இளம்காற்றுக்கு
கதகதப்பாய்
இதழ் தேநீர் தொட
பால் ஊற்றிச் செல்லும்
"பால்கார"னிடம்
இனி பெயர் கேள்..!
நலம் விசாரி..!

வசதியோ..
வர்க்கமோ..
பார்த்தல்ல
இனி வயதுக்கு
மரியாதை
செய்

அமர்ந்து பேசு
அன்னையிடம்
தள்ளி நிற்காதே
தந்தையிடம்

உயிரெழுத்து ஊட்டியோருக்கு
சொல்லிக்கொடு
உலக நவீனத்தை
பொறுமையாய்..!

ஓய்வு பெற்ற உன்
ஒன்றாம் வகுப்பு ஆசிரியரை
தேடிப்பிடித்து
சுருங்கிய கரத்தை
அழுத்தி ஆறுதல் கூட்டு..!
உன் பட்டம் பற்றி தம்பட்டம் அடி
சத்தத்தில் அடிப்படை கற்பித்தவர்
பெருமை வழியட்டும்..!

செலவளி..
பிள்ளைகளிடம்
நேரத்தை
மனைவியிடம்
காதலை

கையேந்தி
நின்றால்
முடிந்தால் உதவு
இல்லையேல் விலகு
வார்த்தை முள்ளால்
குத்தி விடாதே..!

செருப்பு அறுந்தால்
தைக்கப் பழகு
தைப்பவரிடம்
கையால் எடுத்துக் கொடு

சட்டையோடு
கிழிந்த மானுடத்தையும்
தைத்திடு
தையல்காரரின்
திறனை பாராட்ட
2 விநாடி எடுத்துக்கொள்..!

தவறித் தூங்கும்
காவல் காரரைக்
காண நேர்ந்தால்
சுடு சொல் வீசாது
சுடு தேநீர் கொடு..!

மனிதனை அழிக்க
மனிதனே செய்த
குடி தொட்டு குடி கெடுக்காதே..!
அந்தக் காசில்
ஆசை மகளு/னுக்கு
தின்பண்டம் வாங்கு..!

பணத்தின் பின்
பயணப்படாதே
பிரியத்தின் பின்
பிரியத்தோடு பயணப்படு..!

நிரந்தரமற்ற உயிருக்கு
உணர்வுச் சட்டை மாட்டு..!

நானெனும் நினைவொழித்து
உன்னுள் உன்னை
நீயாய் உணர்ந்து
உன்னை இனம் காண்..!

சாதித் தீ பற்ற வை
அச்சாதிக்கு
மனிதமென பெயரிடு..!

மனிதனாய் வாழ்ந்து
புனிதனாய் மறைந்திடு..!

-முத்து மீனாட்சி

எழுதியவர் : முத்து மீனாட்சி (28-Apr-20, 1:06 am)
சேர்த்தது : முத்து மீனாட்சி
Tanglish : vaal manithaa vaal
பார்வை : 1119

மேலே