சிற்றிடைச்சி காண்

சிதம்பரத்திலே திருக்கோயில்கொண்டு வீற்றிருக்கும் அம்மையின் பெயர் சிவகாமி. அம்மையைப் போற்ற நினைக்கிறார் காளமேகம். அவள் குடும்பம் இடையர் குடும்பம் என்கிறார். அவள் ஒரு சிற்றிடைச்சி, மாட்டுக்காரக் கோனாருடைய தங்கை; ஆட்டுக்கோனானுக்குப் பெண்டானாள்,குட்டி மறிக்க ஒரு கோட்டானையும் பெற்றாள்; இப்படிச் சொல்வது போலத் தோன்றுவது பாடல்.

நேரிசை வெண்பா

மாட்டுக்கோன் தங்கை மதுரைவிட்டுத் தில்லைநகர்
ஆட்டுக்கோ னுக்குப்பெண் டாயினாள் - கேட்டிலையோ
குட்டி மறிக்கவொரு கோட்டானை யும்பெற்றாள்
கட்டிமணிச் சிற்றிடைச்சி காண். 104

- கவி காளமேகம்

பொருளுரை:

பெண்ணே! நீ இதனையும் கேட்ட தில்லையோ? மாடுகளைக் காப்போனாக விளங்கிய கோபாலனின் தங்கையான இந்தப் பார்வதிதேவி தான் பிறந்த மதுராபுரியை விட்டு வந்து தில்லைப் பதியாகிய இச் சிதம்பரத்தே நடனமாடுகின்ற ஆட்டுக் கோனுக்கு (கூத்தப் பெருமானுக்கு) மனைவியானாள்;

மேகலை கட்டிய அழகிய இடைச்சியடி அவள்; (சிறிதான இடையினை உடையவள் அவள்); ஆட்டுக் குட்டிகளை மறிப்பதற்காக (நம் தலையிலே குட்டிக்கொண்டு வணங்குமாறு) கோட்டானைப் போன்ற ஒருபிள்ளையையும் (ஒற்றைக் கொம்பனான ஆனைமுகனையும்) பெற்றாளடீ!

சிற்றிடைச்சி - கன்னிப் பருவத்து இடைப் பெண் எனவும், குட்டி மறித்தல் - ஆட்டுக் குட்டிகளை மறித்தல் எனவும், ஆட்டுக் கோன் - ஆட்டிடையன் எனவும் பொருள் படுதலை அறிக;

அவற்றின் உண்மையான பொருளையும் அறிந்து இன்புறுக. இது நிந்தாஸ்துதி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-May-20, 7:51 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 36

மேலே