544 உலகுடல் உறுப்புழைப்பு உதவினோன் கடவுள் – தெய்வத்தன்மையும் வாழ்த்தும் 2

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

மன்னுயிர்க் கிசைந்த பூத
..வகைகளும் அவைக்கி சைந்த
கொன்னுட லமுமவ் வங்கங்
..குனிந்திட நிமிரச் செல்லத்
துன்னுபு தங்க வோடத்
..தொழில்பல இயற்றத் தக்க
தென்னுறுப் புகளுஞ் செய்தோன்
..தேவனோ யாவ னேயோ.

– தெய்வத்தன்மையும் வாழ்த்தும் 2
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

அழிவில்லாத உயிர்கள் அருள்பெற்றுய்ந்து வாழ்தற்பொருட்டுப் பொருத்தமான ஐம்பூதமும், அவற்றின் தொடர்பான வலிவுள்ள உடலும், குனியவும் நிமிரவும், செல்லவும் தங்கவும், ஓடவும் உழைக்கவும், வாய்ப்பான அழகிய உறுப்புகளும் படைத்தருளினவன் எல்லா வாற்றலும் இயல்பாகவே வாய்ந்த இறைவனே ஆவன்.

மன் - நிலைபேறு; அழிவின்மை. பூதம் - பருப்பொருள். ஐம்பூதம் - நிலம், நீர், நெருப்பு, காற்று, விசும்பு என்பன. தென் - அழகு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-May-20, 8:48 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 29

சிறந்த கட்டுரைகள்

மேலே