கண்ணன் வேறா

'திருமாலே பரம்பொருள்; சிவன் பரம்பொருள் அல்லன்' என்று சிலர் கூறினர். இது மதுரையை அடுத்த அழகர் கோயிலிலே ஒருசமயம் நிகழ்ந்தது. இதனைக் கேட்ட காளமேகம் நகை கொண்டார். "அவர் வேறு, இவர் வேறா? இப்படி மெய்ப் பொருள் விளங்கப் பாடினார்,

நேரிசை வெண்பா

கடம்பவனச் சொக்கருக்குக் கண்ணன்றான் வேறோ
இடம்பெரிய கண்ணொன்றை ஈந்தான் - உடம்பதனில்
செம்பாதி யானான் சுமக்க எருதானான்
அம்பானான் தேவியுமா னான். 105

- கவி காளமேகம்

பொருளுரை:

கடம்பவனமாகிய மதுரையிலே கோயில் கொண்டிருக்கிற சொக்கநாதப் பெருமானுக்குக் கண்ணன்தான் அயலானவன் ஒருவனோ? ஒருபோதும் இல்லையே!

விசாலமான பெரிய ஒரு கண்ணினையே முன்பு காணிக்கையாகக் கொடுத்த அன்பன் அவனாயிற்றே!

அன்றியும் எம் பெருமானின் திருமேனியிற் சரிபாதியாக விளங்கும் அம்மையும் அவனாயிற்றே!

அவரைச் சுமக்கக்கருதி அந்நாளில் காளையாக ஆகியவனும் அவனல்லனோ;

திரிபுர தகன காலத்தே எய்தற்குரிய அம்பாகி உதவியவனும் அத்திருமாலே அல்லனோ;

மற்று எம்பெருமானின் தேவியும் அவனேயன்றோ?

திருமாலைச் சிவனுடைய சக்தியாகவே கொள்வது சைவ மரபு;. அதனை, இப்படி விளக்கியுள்ளார் கவிஞர்;

சிவவிஷ்ணு பேதங்களைக் கடந்த செறிவான பாடல் இது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-May-20, 7:35 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 21

சிறந்த கட்டுரைகள்

மேலே