கனவிலே வந்தான்

ஒரு பெண்; அவள் கச்சி ஏகாம்பரநாதரின் மேற்காதல் கொண்டாளாம்; அவரைக் கனவிலேயும் கண்டாளாம்; தன் தோழிமாரிடம் தன் கனவுக் காட்சியைக் கூறி, ‘அவனைக் கண்டீரோ பெண்களே! என்றும் கேட்கிறாளாம்! இப்படி ஒரு சிறிய கனவுக் காட்சியைக் கற்பனையிலே பின்னிக் கொண்டு அவள் ஏக்கத்தைப் புலப்படுத்துவது போல ஏகாம்பர நாதனைப் போற்றுகின்றார்.

நேரிசை வெண்பா

நேற்றிராவந் தொருவன் நித்திரையிற் கைப்பிடித்தான்
வேற்றுாரான் என்று விடாயென்றேன் - ஆற்றியே
கஞ்சிகுடி யென்றான் களித்தின்று போவென்றேன்
வஞ்சியரே சென்றான் மறைந்து. 108

பொருளுரை:

வஞ்சிக் கொடிபோன்ற பெண்களே! நேற்றிரவு ஒருவன் வந்து என் உறக்கத்திலே என் கையைப் பற்றினான்: அவனை, அயலூர்க்காரன் என்று முதலிலே நினைந்துக் 'கையைவிடு' என்றேன்; என் சினத்தைத் தணிவித்தவனாகத் தான் காஞ்சியிலே குடியிருப்பவன் என்று அவன் உரிமையுடனே சொன்னான்; அவன் என் காதலனே என்று அறிந்ததும் இன்று என்னுடன் களித்திருந்துவிட்டுப் போவாயாக என்று வேண்டினேன்; அந்த வேளையிலே அவன் மறைந்து போய்விட்டான்; அவனை நீங்கள் யாராவது பார்த்தீர்களோ? என்பது குறிப்பு.

'அவன் கஞ்சியை ஆற்றிக்குடி என்று என்னை ஏளனம் செய்தான்; நான் களி இருக்கிறது தின்று விட்டுப்போ என்று சொன்னேன்’ எனத் தன்னை மறைத்துச் சொல்லினாள் என்று பொருள் கொள்ள வேண்டும்..

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-May-20, 11:14 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
Tanglish : kanavile vanthan
பார்வை : 82

மேலே