மாணவ மணியே

மாணவ மணியே கொஞ்சம்நில் - உன்
மனதில் சொல்வதை நிறுத்திக்கொள்
ஆணவம் இல்லா நெஞ்சம்கொள் - அதில்
அறத்தையும் நிலையாய் நிறுத்திகொள்

கல்வியை கற்கும் காலத்தில் - உன்
கவனத்தை எதிலும் செலுத்தாதே!
செல்வம் அதுபோல் பிறிதில்லை - அதை
செறிவாய் கற்க மலைக்காதே!

விழுந்திடும் எழுந்திடும் கடலைகள் - உனை
அழுத்திட துடிக்கும் பலதடைகள்
உறுதியும் திடமும் மனம்கொண்டு - நீ
சறுக்கி விழாமல் பாடுபடு

கேடுகள் செய்திடும் உறவுகளை - நீ
கிள்ளி எறிந்திட தயங்காதே!
வாடிடும் ஏழையின் முகம்கண்டால் - அவர்
வாட்டம் போக்கிட மயங்காதே!

உயர்ந்தே நிற்கும் இமயமலை - இங்கு
உயரட்டும் அதைவிட உனதுதலை
அயர்ந்தே கிடக்கும் நிலைவிடுத்து - உன்
ஆற்றலில் காட்டிடு மாறுதலை

நெளியும் புழுவாய் நீகிடந்தால் - சிறு
நெருஞ்சியும் உன்னை பதம்பார்கும்
எரியும் மலையாய் நீஎழுந்தால் - எந்த
எதிர்ப்பும் மறைந்து வளம்சேர்க்கும்

பாவலர். சொ. பாஸ்கரன்

எழுதியவர் : சொ. பாஸ்கரன் (19-May-20, 11:24 am)
சேர்த்தது : சொ பாஸ்கரன்
பார்வை : 43

மேலே