உயிரோடிருந்தாலும் உற்றசவம் என்றே இகழ்ந்து சிரிக்கும் - கள்ளின் களிப்பு, தருமதீபிகை 607

நேரிசை வெண்பா

உயிரோ டிருந்தாலும் உற்றசவம் என்றே
செயிரோ டிகழ்ந்து சிரிக்கும் - வயிறோடு
கள்ளுடை யானைக் கடல்ஞாலம் ஐயகோ
எள்ளல் இதன்மேல் எது. 607

- கள்ளின் களிப்பு, தருமதீபிகை
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

தினமும் கள்ளுண்டு வயிறு நிரப்புபவனை, கடல் போன்ற உலகத்திலுள்ள மக்கள் மிகக் கேவலமாக இகழ்ந்து பேசுவார்கள்; கள் அருந்துகின்றவன் உயிரோடு இருந்தாலும் அவனைச் செத்த சவம் என்றே உலகம் எள்ளிச் சிரிக்கும்; அந்தோ! இது எவ்வளவு நிந்தை! சிந்தனை செய்து சிறுமை ஒழிக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

உணர்ச்சியோடு இருக்கும் வரையும் மனிதன் உயர்ந்து திகழ்கிறான்; அது ஒழிந்து போனால் இழிந்த மிருகமாய் அழிந்து போகிறான். கள்ளைக் குடித்த பொழுது அறிவு நிலை குலைந்து போதலால் அவன் பெரிய வெறியனாய்ப் பிதற்றிப் பேயாட்டம் ஆட நேர்கின்றான்.

கள்ளுக்குச் ‘சொல்விளம்பி’ என்று ஒரு பெயர். உள்ளத்தில் மறைத்திருப்பதை யெல்லாம் குடித்த போது தன்னை மறந்து குடிகாரன் வெளிப்படுத்தி விடுகிறான். கள் உள்ளதைச் சொல்லி விடும்” என்பது பழமொழி.

களித்தறியேன் என்பது கைவிடுக; நெஞ்சத்(து)
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும். 928 கள்ளுண்ணாமை

குடியை மறைக்க முடியாது என்று இது குறித்துள்ளது. கள் உண்டவன் வெறி மண்டிக் கால் தடுமாறி நடந்து வாய்குழறிப் பேசி நோயுழந்து படுதலால் 'சீ' என்று யாவரும் அவனை எள்ளி இகழ்ந்து ஒதுங்குகின்றார்.

'களித்தோன் அவிநயம் காணும் காலை
ஒளித்தவை ஒளியான் உரைத்தல் இன்மையும்
கவிழ்ந்தும் சோர்ந்தும் தாழ்ந்தும் தளர்ந்தும்
வீழ்ந்த சொல்லொடு மிழற்றிச் சாய்தலும்
களிகைக் கவர்ந்த கடைக்கண்நோக் குடைமையும்
பேரிசை யாளர் பேணினர் கொளலே.” - அவிநயம்

குடிகாரனுடைய செயல் இயல்களையும் மயல் மறுக்கங்களையும் இது விளக்கியுள்ளது.

மது உண்டபோது மதி கேடராய் மனிதர் படுகிற பாடுகள் பரிகாசங்களாய்ப் பெருகியிருக்கின்றன.

உச்சினி மாநகரத்தில் ஒரு முறை நீராட்டு என்னும் பெரிய திருவிழா ஒன்று நடந்தது. நகரம் முழுவதும் அலங்காரங்கள் நிறைந்திருந்தன. உவகைக் காட்சிகள் எங்கணும் ஓங்கி நின்றன. புனித நீராட்டுக்குப் பலரும் போய்க் கொண்டிருந்தனர். அப்பொழுது ஒரு குடிகாரன் தெருவழியே நிலை தடுமாறிப் பிதற்றிச் சென்றதைக் கொங்கு வேளிர் என்னும் புலவர் நன்கு விளக்கி யிருக்கிறார். அயலே வருவது காண்க.

சுழலும் கண்ணினன் சோர்தரு மாலையன்
அழல்நறும் தேறல் ஆர மாந்திக்
காழக மீக்கொண் டாழுந் தானையன்
வாழ்க வாழ்கவெம் மதிலுஞ் சேனை
மட்டுண் மகளிர் சுற்றமொடு பொலிகெனத்
துட்டக் கிளவி பெட்டவை பயிற்றி
முட்டின் றியம்பும் பட்டின மொரீஇத்
துறக்கங் கூடினுந் துறந்திவ ணீங்கும்
பிறப்போ வேண்டேன் யானெனக் கூறி
ஆர்த்த வாய னூர்க்களி மூர்க்கன்
செவ்வழிக் கீதஞ் சிதையப் பாடி
அவ்வழி வருமோ ரந்த ணாளனைச்
செல்ல லாணை நில்லிவ ணீயென
எய்தச் சென்று வைதவண் விலக்கி
வழுத்தினே முண்ணுமிவ் வடிநறுந் தேறலைப்
பழித்துக் கூறுநின் பார்ப்பனக் கணமது
சொல்லா யாயிற் புல்லுவென் யானெனக்
கையலைத் தோடுமோர் களிமகற் காண்மின். - பெருங்கதை, 40

ஒரு குடிகாரன் செயலை இது படி எடுத்துக் காட்டியிருக்கிறது. கவியின் காட்சிகளைக் கருதி உணர்க.

நான் உவந்து குடிக்கிற கள்ளை உன் இனம் இகழ்ந்து சொல்லுகிறது; ஆதலால் உன்னை இன்று விடேன் என ஒரு வேதியனை அவன் வேதனை செய்திருத்தலைக் காணுகிறோம். விபரீதமான செயல்களை யெல்லாம் வெறி விளைத்து விடுகிறது.

வயிறோடு கள் உடையான் உயிரோடு இருந்தாலும் சவம்;

கள் அருந்திய பொழுது அறிவு அழிந்து விடுகிறது, யாதும் அறியாதவனாய்த் தீதுகளைச் செய்து அயர்ந்து கிடக்கிறான். நோக்காடான அக்கிடை சாக்காடு ஆகின்றது.

கள் குடலுள் புகுந்தவுடன் உடல் பிணமாய் விழுகிறது; உயிர் துயருள் புகுந்து உழல்கிறது. வயிறு ஓடு கள் என்றது உயிரைத் துயரில் ஓட்டிச் சாக அடிக்கும் அதன் வேகம் தெரிய வந்தது. நறவால் அறிவு அழிகிறது; ஆவி ஒழிகிறது.

உயிர் இருந்தாலும் மனிதனைச் செத்த சவம் ஆக்கிச் சீரழிக்கும் தீய கள்ளை வாயில் வைப்பது எவ்வளவு தீமை; எத்தனை மடமை; எத்துணை அழிவு! உய்த்துணர்ந்து தெளிய வேண்டும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-May-20, 4:08 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 30

சிறந்த கட்டுரைகள்

மேலே