இரகசிய காதலி

உன் முடியை
நீயே வெட்டிக் கொண்டு
சிகை திருத்துனரை விடுதலை செய்
*
உன் துணியை
நீயே வெளுத்துக் கொண்டு
சலவைக் காரரை
வேறு தொழில் செய்ய விடு
**
உன் குப்பையை
நீயே எடுத்துச் சென்று
உரிய இடத்திலிட்டு
துப்பரவாகு.
**
பிறர் மனை நோக்கல் தவிர்.
பிறர் பொருள் தொடல் தவிர்.
பிறரிடமிருந்து ஒதுங்கி நில்
**
நீ உயர்ந்த சாதி என்று
நான் ஒட்டாமல் விட்டதில்லை
*
அவன் தாழ்ந்த சாதி என்று
நான் அகன்று சென்றதில்லை
**
நான் பொது.
எங்கும் எவரிடமும் செல்ல
எனக்கு அனுமதியுண்டு
*
என்னைப்போல்
நீயும் ஏற்றத் தாழ்வுகளுக்கு
அப்பால் இரு.
**
நான் இருக்கும் இடத்தில்
நீ இருந்தால் போதும்
உன்னைச் சார்ந்தவர்களுக்கும்
என் சமத்துவம் சொல்வேன்
**
நான் உன்னில் என்று
நீ அறிந்து கொள்ளும் தருணத்து
தனிமைப்படுத்தல் முகாம்களில்
நீ பார்க்க நேரலாம்
நான் வளர்த்த சமத்துவம்
**
நேற்றுவரை
சொகுசு மெத்தையில் உறங்கிய
நீயும்
நேற்றுவரை
கட்டாந்தரையில் கிடந்த
அவனும்
அங்கே நோயாளி என்ற
ஒரே இனம்.
**
வலியும் ,பரிதவிப்பும்
உனக்கும் அவனுக்கும் ஒன்றே
**
உயர் குடி என்று
மார் தட்டிக் கொண்ட
உன்னையோ
தாழ்ந்த சாதி என்று
குறுகிக் கிடக்கும்
அவனையோ
நான் குடித்துத் தீர்க்கையில்
உன்னையும் அவனையும்
எரிக்க ஒரே நெருப்பு.
**
விளக்கில் எரிந்தால்
சோதி என்றும்
வீட்டை எரித்தால்
தீ என்றும்
இரண்டு சாதி நெருப்புக்கு.
**
எனக்கு ஒன்றே சாதி
**
வியாதி சாதி என்னை
அழிக்க முன்
நீ வகுத்துவைத்த சாதி
அழித்துச் சாதி.
*
கணவனிடமிருந்து மனைவியையும்
மனைவியிடமிருந்து கணவனையும்
இருவரிடமுமிருந்து
குழந்தையையும் என்று
ஒருவரை விட்டு ஒருவரைப்
பிரித்தபோதும்
நோயாளி என்ற ஒரே குடும்பத்து
அங்கத்தினராய் உன்னை
ஒன்று படுத்திச் சாதித்து விட்டேன்
**
கண்ணுக்குத் தெரியாமல் வந்து
நான் செய்த சாதனைபோல்
கண்ணிருக்கும் நீயும்
ஒரே இனம், ஒரே மதம் என்ற
ஒற்றுமையைச் செய். சாதி.
இனி செய்யாதே சாதி..
இந்த அகிலத்தை விட்டுப் போக
அது போதும் எனக்கு.
**
இப்படிக்கு,
உங்கள் ரகசிய காதலி
கொரோனா
**

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (20-May-20, 12:13 am)
Tanglish : eragasiya kathali
பார்வை : 132

மேலே