பிரதோஷம்
கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி நான் ஒரு நாள் கபாலீஸ்வரர் கோவிலுக்கு எப்பவும்போற மாதிரி ஒரு சனிக்கிழமை போனேன். அங்கே என்னமோ எப்பவும் போலில்லாம அன்னிக்கு ஒரே கும்பல். (இவ்வளவு கும்பலை நான் அறுபத்து மூவரின் போதுதான் பார்த்து இருக்கேன்).
அப்ப ”மிஸ்டர், க்யூலே வாங்க” என்ற மிரட்டலான அசரீரிக்குரல் வந்தது. எல்லாத் திசையிலேயும் தலையைத் திருப்பிப்பாத்தேன். யார்னு தெரியல்லே. அந்தக் கூட்டத்துலே யாரோ ஒருத்தர்தான் தன்உரிமையை நிலைநாட்டி எவனும் அரசியல்வாதி மாதிரி குறுக்குவழியிலே முன்னேறக்கூடாதுங்கற நல்ல எண்ணத்துலே அப்படி ஒரு குரல் கொடுத்தார்னு நெனைக்கிறேன். அப்பத்தான் தெரிஞ்சது நான் நின்ன இடம் ஒரு க்யூவிலே ஏற்பட்ட முடிச்சுன்னு. ஆராஞ்சி பாத்தேன். இவ்வளவு பெரிய க்யூவா இருக்கே? அது அந்தத் தெருவிலிருக்கும் பஜ்ஜிக் கடைக் க்யூவா, விட்ட செருப்பை எடுக்கறதுக்காக நிக்கற க்யூவா இல்லை பூக்கடைக் யூவா? ஒண்ணும் புரியல்லே. ஆனா க்யூ வடக்கு மாட வீதி பக்கமா போறதே, அதனாலே அப்படி எல்லாம் இருக்காது. இருந்தாலும் அந்த க்யூ எதுக்குன்னு தெரிஞ்சிக்கிறது நல்லதுதானேன்னு நெச்சேன்.
ஒரு தரம் நான் ஒரு க்யூவிலே ரொம்ப நேரம் நின்னப்புறம், அது நான் போக வேண்டிய சினிமாவுக்கான க்யூ இல்லே, ரேஷன் க்யூன்னு தெரிஞ்சபோது வெறுத்தே போயிட்டேன். என் சினிமாவுக்கான க்யூ கௌண்டரை எப்பவோ க்ளோஸ் பண்ணிட்டுப் போயிட்டாங்கன்னு கேள்விப்பட்டதை நான் மறக்க முடியுமா? அந்த மாதிரி மறுபடியும் ஆயிடக்கூடாது இல்லையா?
இந்த க்யூ கோவிலுக்குள்ளே இருந்து வடக்குமாட வீதி இந்தியன்பாங்க் வரையிலும் அனுமார் வாலைவிட நீளமா போறதே. நம்மளாலே இவ்வளவு நேரம் நிக்க முடியுமா?ன்னு திகைச்சிப் போயிட்டேன். அதை தெரிஞ்சிக்கறதுக்காக, என்ன விசேஷம்னு அந்த க்யூவிலே இருந்த ஒருத்தரைத்தெரியாம கேட்டுட்டேன். அவர் என்னை ஒரு ஏளனப்பார்வை பார்த்துட்டு முகத்தைத் திருப்பிக்கிட்டு யாரைப்பார்த்தோ சொல்வது போல “இன்னிக்கு சனிப்பிரதோஷம். (அத்தோட நிறுத்தி இருந்தாப்பரவாயில்லையே)இது கூடத் தெரியாம கோயிலுக்கு வந்துட்டீங்களே. உங்களைப்போல நாத்திகப்பயங்களாலேதான் நாடு கெட்டுப்போச்சு” என்று போட்டாரே ஒரு போடு. இத்தனைக்கும் நான் நெத்தியிலே விபூதி வெச்சிருந்தேன் அழிக்காம. ஒரு வேளை “என்னை மாதிரியே விஷயம் தெரியாம வேறே ஒத்தன் என்பக்கத்துலே நின்னு கேட்டதுக்கு அந்த மாதிரி சொல்லி இருப்பார். என்னை இருக்காது” என்று சமாதானப் படுத்திக் கொண்டேன்.
இருந்தாலும் இத்தனை வயதாகியும் பிரதோஷங்கிறது என்னன்னு தெரியாம இருந்துட்டோமேன்னு என் உள் மனசு குத்திச்சு.
கோவிலுக்கு வந்தவனைப்பாத்து நாடு கெட்டுப்போச்சுன்னு சொன்னத்துக்காகக்கூட நான் கவலைப்படல்லே. என்னை ஒரு நாத்திகன்னு அவர் சொன்னதாகத்தான் நினைத்தேன். அப்படிச் சொன்னதுக்காக பெருமைப்படாமல் நான் வருத்தப்படுவதைப் பார்த்து எனக்கே உண்மையிலேயே வருத்தமாப் போச்சு. அவர் சொன்ன அந்த வார்த்தையை இந்த ஜென்மம் மாத்திரமில்லை ஈரேழு ஜென்மத்துக்கும் மறக்க முடியாது. ( ஈரேழு ஜென்மத்துக்கும் எனக்கு விமோசனமில்லை, எப்படியும் இன்னும் 14 ஜென்மம் எடுத்தாக வேண்டி இருக்கும்னு நான் செஞ்ச பாவ புண்ணிய கணக்குகளைப்பாத்த போது தெரிஞ்சது)
இப்படிப்பட்ட அவமானத்தை சுமந்துண்டு, க்யூலே கால்கடுக்க நின்னு சுவாமியைத் தரிசிக்கணுமான்னு நான் எப்போவும் வணங்கற கபாலீஸ்வரரிடமிருந்து டெம்பர்ரியா அன்னிக்கு மாத்திரம் லீவு வாங்கிக்கிட்டு நான் “இன்று போய் நாளை வரேன்” என்று ராமர் ராவணனைப்பாத்து சொன்ன டயலாக்கை சற்எறு மாற்றி மனதுக்குள்ளேயே சொல்லிக்கொண்டு வீட்டுக்குத்திரும்பினேன்.
நான் பிறகு விசாரித்துத் தெரிந்து கொண்டது பிரதோஷம் என்பது சிவன் கோவில்களிலெல்லாம் மாசம் 2 தடவை சதுர்தசியன்று சாயந்திரம் கொண்டாடப்படும் விசேஷம்னு. ஆனா என்னோட அம்பது வயசு சர்வீஸ்லே நான் அதுவரையிலும் கேள்விப்படாதது இந்தப் பிரதோஷ சமாசாரம்தான்.
என் சொந்த ஊர் அந்த நாளிலே ஒரு சின்ன கிராமம். அந்த ஊரின் ஜனத்தொகை 10001 என்னையும் சேத்து. எங்க ஊர் பஞ்சாயத்து நோட்டீஸ் போர்டுலே போட்டிருந்த செய்தியை வெச்சுத்தான் நான் சொல்றேன். ( இப்ப அது பெரிய ஊரா ஒரு மாவட்டத் தலைநகரமா ஆயிடுத்து) நாங்க இருந்தது பெருமாள் கோயில் தெருவிலே. தெருவிலேன்னா தெருவிலே இல்லே. அந்தத் தெருவிலே ஒரு வீட்டிலே. தெரியாதா? ஏன் இப்படிப் பைத்தியக்காரத்தனமா சொல்றீங்கன்னு உங்கள்லே ஒரு அதிபுத்திசாலி கேட்கலாம். ஆனால் அப்படி சொல்ல வேண்டிய அவசியம் எனக்குப் பல வருஷங்களுக்கு முன்னாலே மைலாப்பூர்லே குடி வந்த போது ஏற்பட்டது.
நான் மொத மொதல்லை மைலாப்பூரிலே செட்டில் ஆன உடனே ஒருத்தர், பெரியவர், அவர் ரெண்டு தடவையாவது அத்தி வரதரைப் பாத்திருப்பார்னு இப்ப தோணறது, கேட்டார், எங்கே குடி இருக்கேன்னு. நானும் யதார்த்தமா நடுத் தெருவிலே இருக்கேன்னேன். கேட்டவருக்குக் கோபம் வந்துடுத்து. என்ன நான் கேக்கறேன், மரியாதை இல்லாம இப்படிக் கிறுத்திமமா ( அதாவது கிறுக்குத்தனமா) பதில் சொன்னா எப்படின்னு. அப்புறம் அவர் கிட்டே “இல்லே. நான் நெஜமாவே மைலாப்பூர்லே கிழக்குமாட வீதி கட்டிங்கிலே கோவில் கோபுரத்துக்கு நேர் எதிர்த்தாப்பல இருக்கிற நடுத்தெருங்கிற பேருலே இருக்கிற தெருவிலே ஒரு போர்ஷன்லே குடியிருக்கேன்னு விளக்கமா சொன்னப்புறம்தான் அவருக்கு என் மேலே இருந்த கோபம் அடங்கித்து. அப்போ என்கிட்டே இப்ப இருக்கிற மாதிரி செல்.ஃபோன் ஃபோட்டோ எதுவும் எடுத்து டக்னு காண்பிக்கிற மாதிரி எதுவும் கிடையாது. அதனாலேதான் முன்னெச்சரிக்கையா அதுக்கப்புறம் யார் கேட்டாலும் இந்த மாதிரி இந்தத் தெருவில இருக்கேன்னு சொல்லும்போதே அதுக்கான விளக்க உரையையும் சேர்த்துச்சொல்ற பழக்கம் வத்துடுத்து.
அந்தக் காலத்துலே எங்க ஊர்லே கோவிலைச்சுத்தி எங்க சொந்தக்காரங்க குடும்பங்கள் சுமார் 30 இருக்கும். எங்க தெருவிலிருந்து மூணு தெரு தள்ளி ஒரு சிவன் கோயில் ஒண்ணு இருந்தது . ஆனா அந்தக் காலத்துலேயே பராமரிப்பு இல்லாமல் அந்தக் கோயில் சிதிலமடைஞ்சி இருந்தது. அந்தக்கோவிலுக்கு எங்க குடும்பங்களிலிருந்து யாரும் சாதாரணமா போகமாட்டோம். போக பயப்படுவோம்னு கூட சொல்லலாம். கோவிலைப்பாத்து பயந்து இல்லே. அங்கே பறக்கிற வௌவால்களைப் பார்த்து. எனக்குத்தெரிஞ்சி அந்தக்கோவில்லே நடந்த ஒரே விசேஷம் திருவாதிரைதான். வருஷத்துக்கு ஒரு நாள்தான் திருவாதிரை வரதாலே நாங்களும் அந்தக்கோயிலுக்கு வருஷத்துக்கு அந்த ஒரு நாள்தான் போவோம். அந்தக்கோவில்லே வேறே எந்த விசேஷமும் நடக்காத தாலே என்னை மாதிரி அப்ப அங்கே இருந்த சின்னப் பசங்களுக்கு எல்லாம் சிவன் கோவிலைப்பத்தின வேறு எந்த விசேஷமும் தெரியறதுக்கு வாய்ப்பில்லாம போயிட்டது. அதுலே இந்தப் பிரதோஷமும் ஒண்ணு.( ஆனா இப்ப அந்தக் கோவில் எப்படி இருக்கோ? யானறியேன் பராபரமே)
அதுமாத்திரமில்லே. நானும் 30 வருஷமா கபாலீஸ்வரர்கோவிலுக்கு வந்து வாரத்துக்கு ஒருநாள் தப்பாமல் கபாலீஸ்வரருக்கு அட்டெண்டன்ஸ் கொடுத்து வந்திருக்கேன். ஆனா எங்கிட்டே மறந்து போயும் ஒருத்தரும் இந்த பிரதோஷ விசேஷத்தைப் பத்திச்சொன்னது கிடையாது. இப்படிப்பட்ட க்யூவை நான் அந்தக்கோவில்லே பார்த்ததும் கிடையாது. இன்னும் சொல்லப்போனா ஒரு நாப்பது வருஷத்துக்கு முன்னாடி என்னை மாதிரி ரொம்ப பேருக்கு பிரதோஷம்னா என்னன்னே தெரியாது. அதுலே நானும் ஒருத்தன். ( ஏதோ ஒரு சில பேருக்குத் தெரிஞ்சிருக்கலாம். அவங்க யாரும் சண்டைக்கு வரவேண்டாம். பொதுவா அன்னிக்கு இருந்த நிலையைச் சொல்றேன்)
சில கோவில்கள் இருக்கிற இடமே தெரியாது. திடீர்னு ஒரு நாள் பிரபலம் ஆயிடும் மருதமலைக்கோவில் போல. ஏன்? இன்னும் பல கோவில்கள் சிலர் பத்திரிகையிலே எழுதறதைப்பாத்து ஃபேமஸ் ஆகல்லியா என்ன? அந்த மாதிரி பிரதோஷத்துக்கும் ஒரு நல்ல நேரம் வரவேண்டி இருந்தது போல இருக்கு. அது இப்ப வந்திருக்குன்னு ஒரு விதமா என்னை நான் சமாதானப் படுத்திக்கொண்டேன். ( இப்ப எந்த ஊர்லே பாத்தாலும் சிவன் கோவில்னு ஒண்ணு இருந்தா அங்கே இந்தப் பிரதோஷ விசேஷம் அமர்க்களப்படறது.)
அதுவரையிலும் எனக்குத் தெரிஞ்ச தோஷம் ரெண்டே ரெண்டுதான். ஒண்ணு எனக்கு அடிக்கடி பிடிக்கிற ஜலதோஷம். இன்னொண்ணு, கல்யாணம் ஆகவேண்டிய நம்ம வீட்டுப்பெண்களை எல்லாம் பாடாப் படுத்தற செவ்வாய் தோஷம். ஆனா இதுலே எனக்குப் புரியாத சமாசாரம் என்னன்னா தோஷங்கிறதே ஒரு தோஷமான அதாவது அவ்வளவு நல்லதா இல்லாத சமாசாரமா இருக்கும்போது ஒரு தோஷத்தை மாத்திரம் எல்லாரும் வேணும், வேணுங்கிறாளே. அது ஏன்? புரியல்லையா? புஷ்பேஷு ஜாதி, புருஷேஷு விஷ்ணு, நாரீஷு ரம்பா, நகரேஷு காஞ்சிங்கற மாதிரி தோஷேஷு சந்தோஷம், அதாவது தோஷத்தில் சிறந்தது சந்தோஷம்னு சொல்லலாம். அதுக்காகத்தானே நாம எல்லாம் பறவா பறக்கிறோம்.
அதை ஏன் சந்தோஷம்னு சொல்றான்னு சம்ஸ்கிருத பண்டிதர்கள்தான் சொல்லணும். நான் கேட்டப்போ ஒருத்தர் அது சந்தோஷம் (sandhosham) இல்லே, சந்தோஷம் (santhosham)னு அதுக்கான சம்ஸ்கிருத லக்ஷணங்களை எல்லாம் விலா வாரியா சொல்ல ஆரம்பிச்சார். அட. நான் பிரதோஷ சமாசாரத்துலேதான் அரைகுறைன்னா, என்னோட சம்ஸ்கிருத நாலெட்ஜ்ஜும் அரை குறைதான்னு அவர் கண்டுபிடிச்சிட்டா என்ன பண்றதுன்னு அங்கிருந்து நகந்தேன். பண்டிதர்கள் என்ன சொன்னா என்ன?
நாம பேசும்போது சொல்றது என்னவோ சந்தோஷம் ( sandhosham) னு தான்.
ஆனா ஜலதோஷம் மாதிரியோ மாசக்கணக்காகவோ இல்லே வருஷக் கணக்காகவோ, இல்லே செவ்வாய் தோஷம்மாதிரி ஆயுள் பூராவுமோ இந்த சந்தோஷம் மட்டும் யார்கிட்டேயும் சேந்தாப்போல ரொம்ப நாள் இருக்கறதில்லையே. அது ஏன்னு ஆராய்ச்சி பண்ணணும்.?
ஆனா ஒருத்தர் மாத்திரம் எங்கிட்டே சொன்னார்” பிற தோஷங்களை ஒழிக்கக்கூடியது இந்தப் பிரதோஷம்” னு. விடாமல் என்னை வாட்டும் என் ஜலதோஷத்தை ஒழிச்சாப்போதும் அதுவும் இப்ப நாடு இருக்கிற நிலையிலே. இத்தனை நாளா ஜலதோஷம் வந்தா நான் கவலைப்படாம சந்தோஷமா இருமிண்டு இருந்தேன். ஆனா இண்ணிக்கு அந்த மாதிரி இரும பயமா இருக்கு, கொரோனா கேஸ்ஸுன்னு ஒதுக்கிவெச்சுட்டா என்ன பண்றதுங்கற பயத்துலே.

