குமரேச சதகம் - திருத்தினாலும் திருந்தாதவன் - பாடல் 37

பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

கட்டியெரு இட்டுச் செழுந்தேனை வார்க்கினும்
காஞ்சிரம் கைப்புவிடுமோ
கழுதையைக் கட்டிவைத் தோமம் வளர்க்கினும்
கதிபெறும் குதிரையாமோ

குட்டியர வுக்கமு தளித்தே வளர்க்கினும்
கொடுவிடம் அலாதுதருமோ
குக்கல்நெடு வாலுக்கு மட்டையைக் கட்டினும்
கோணாம லேநிற்குமோ

ஒட்டியே குறுணிமை இட்டாலும் நயமிலா
யோனிகண் ஆகிவிடுமோ
உலவுகன கர்ப்பூர வாடைபல கூட்டினும்
உள்ளியின் குணம்மாறுமோ

மட்டிகட் காயிரம் புத்திசொன் னாலும்அதில்
மார்க்கமரி யாதைவருமோ
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே. 37

- குருபாததாசர் என்ற முத்துமீனாட்சிக் கவிராயர்

பொருளுரை:

மயிலேறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலைமேவு குமரேசனே!

வெல்லக் கட்டியாகிய எருவை விட்டு நல்ல தேனாகிய நீரை வார்த்தாலும் எட்டியின் கசப்பு நீங்குமோ? கழுதையைக் கட்டி வைத்து வேள்வி செய்தாலும் பல கதிகளிலுஞ் செல்லும் குதிரையாகுமோ?,

பாம்புக் குட்டிக்குப் பால் வார்த்து வளர்த்தாலும் கொடிய நஞ்சையல்லாது வேறொரு நன்மையைத் தருமா?, நாயின் நீண்ட வாலுக்கு மட்டை வைத்துக் கட்டினாலும் கோணல் நிமிருமா?,

மிகுதியான மையை நன்றாகப் பூசி இட்டாலும் நயமில்லாத பெண்குறி அழகுள்ள கண் ஆகுமோ?, இனிய மணம்வீசும் கர்ப்பூரம் முதலான நறுமணப் பொருள்களைச் சேர்த்தாலும் பூண்டின் மணம் மாறுமா?

அது போல, அறிவில்லாத பேதைகளுக்குப் பலமுறை அறிவு புகட்டினாலும் அதனால் ஒழுங்கான மரியாதை உண்டாகுமோ? உண்டாகாது.

அருஞ்சொற்கள்:

கட்டி - வெல்லக்கட்டி, காஞ்சிரம் - எட்டி, கதி - குதிரைசெல்லும் நிலை,
குக்கல் - நாய், வாடை - மணம், உள்ளி - பூண்டு.

கருத்து:

கீழ்மக்கட்கு நல்லறிவு புகட்டமுடியாது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-May-20, 7:46 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 96

மேலே