தள்ளாடும் பூமி

================
எல்லோருக்குள்ளும்
ஒரு தள்ளாட்டம்
தள்ளாடாமல் இருக்கிறது
**
வெளியே தெரியாத
தள்ளாட்டத்தில்
விழுந்து விடாதிருகக்கப் பழகிய
நம்மைப் பார்க்கும் தள்ளாட்டம்
வியப்பில் தனக்குள்ளே தள்ளாடலாம்
**
தத்தித்தத்தி நடைபோடப் பழகும்
தள்ளாட்டத்துடன் ஆரம்பமாகும் வாழ்க்கை
வயதான காலத்துத் தள்ளாட்டத்துடன்
முடிவுக்கு வருகிறது.
**
எழுதிய பரீட்சையின் முடிவு
இப்படியிருக்குமோ அப்படியிருக்குமோ
என்று எண்ண ஆரம்பிக்கும்
கல்லாதவனின் நெஞ்சுக்குள்
முளைக்கும் கால்கள்
அவநம்பிக்கை இசையைக் கேட்டுத்
தள்ளாட்டத்தை ஆரம்பிகிறது
**
வெற்றியை நோக்கிய
போராட்டங்களின் முன்னெடுப்பு
தோல்வியின் பள்ளத்தாக்கில்
துரதிர்ஷ்டவசமாக விழுகையில்
வாழ்க்கை மைதானத்தில்
அந்தரங்கமாக
ஆடத் தொடங்குகிறது
இந்தத் தள்ளாட்டம்.
**
ஒரு செயலின்
தொடக்கத்தில் இருக்கும்
உத்வேக வண்டி
தடங்கல்கள் என்னும்
வேகத்தடைகளில் மோதித்
தடம்புரளும் சந்தர்ப்பங்களில்
உற்பத்தியாகிறது தள்ளாட்டம்
**
நிலையற்ற மனிதரின் வாழ்வை
நிலையாக தள்ளாட்டத்திற்குள் தள்ளி
நிலை தடுமாறவிடும் தள்ளாட்டங்கள்
கழுத்துவரை மது நிறைந்திருந்தும்
தள்ளாடாக் குப்பியையைப் போன்றவை
**
குறுகிய இன்பத்துக்காக
குடித்துத் தள்ளாடும்
குடும்பஸ்த்தர் கால்கள் தங்கள்
குடும்பத்தையும்
தள்ளாட விடுகின்றன
**
பாதையில் தள்ளாடியவனும்
போதையில் தள்ளடியவனும்
பேதையிடம் தள்ளாடியவனும்
வாதையில் தள்ளாடும் வையத்தில்
தள்ளாடாமல் வாழ்ந்தவன் என்று
ஒருவன் இருந்தால் போதும்
அந்த சுகபோதையில்
இந்த பூமியே தள்ளாடும்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (22-May-20, 5:32 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : thalladum poomi
பார்வை : 54

மேலே