ஆனின் கழல்

திருவாரூரிலே தியாகேசரின் ரிஷபவாகன உற்சவம் உள்ளத்தைக் கவரக் காளமேகம் மெய்ம்மறந்து நிற்கிறார். அப்போது பெருமானுடைய திருப்பாதங்களின் சிறப்பினை வியந்து இப்படிப் பாடுகிறார்.

நேரிசை வெண்பா

பாரளக்குந் தூதுசெல்லும் பையரவின் மேனடிக்கும்
சீரகலி சாபத்தைத் தீர்க்குமே - ஊரருகில்
சண்டச் சகடுதைக்குந் தையலாய் கார்நீல
கண்டத்தா ரூரான் கழல், 112

- கவி காளமேகம்

பொருளுரை:

பெண்மணியே! கருநீல கண்டத்தையுடைய ஆரூரான் ஊர்ந்து செல்லுகின்ற ஆனேற்றின் பாதங்கள், மாவலி தந்த உலகை எல்லாம் அளக்கும்; பாண்டவர்க்காகத் தூது செல்லும்; படமுடைய பாம்பான காளிங்கனின் தலை மேலேயும் நடனமிடும்; அழகிய அகலிகையின் சாபத்தையும் போக்கும்; தன் ஊரின் அருகிலே பகைத்து வந்த சகடாசுரனையும் உதைத்துக் கொல்லும்; அத்தகைய சிறப்பினை உடையவை அவை.

‘மாயனே எருதாகிப் பெருமானைத் தாங்கிச் செல்பவன்' என்பது புராண மரபு. அதனை உளங்கொண்டு மாயனின் திருவிளையாடலை யெல்லாம் இப்படிக் கூறுகின்றார். ஆனின் திருவடிகளே இப்படிச் சிறந்தவையானால், அதனை ஏறிச் செலுத்துவோனின் பாதங்களை பற்றிச் சொல்லுதலும் வேண்டுமா? என்பது உட்கருத்தாகும். அதனை அடைவதே உய்திக்கு வழி என்பதும் முடிபாகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-May-20, 7:39 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 15

மேலே