குமரேச சதகம் - குறிப்பு அறிதல் - பாடல் 38

பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

மனத்தில் கடும்பகை முகத்தினால் அறியலாம்
மாநிலப் பூடுகளெலாம்
மழையினால் அறியலாம் நல்லார்பொ லார்தமை
மக்களால் அறியலாம்

கனம்மருவு சூரரைச் சமரினால் அறியலாம்
கற்றவொரு வித்துவானைக்
கல்விப்ர சங்கத்தி னாலறிய லாம்குணங்
களைநடையி னாலறியலாம்

தனதகம் அடுத்தது பளிங்கினால் அறியலாம்
சாதிசொல் லால்அறியலாம்
தருநீதி கேள்வியால் அறியலாம் பிணிகளைத்
தாதுக்க ளாலறியலாம்

வனசவிக சிதவதன பரிபூர ணானந்த
வாலவடி வானவேலா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே. 38

- குருபாததாசர் என்ற முத்துமீனாட்சிக் கவிராயர்

பொருளுரை:

தாமரை மலரென ஒளிரும் முகத்தவனே! எங்கும் நிறைந்த இன்பமான இளமைக் கோலமுடைய வேலவனே! மயிலேறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலைமேவு குமரேசனே!

உள்ளத்தில் ஊறிய கொடிய பகைமையை முகக்குறிப்பால் உணரலாம்; பெருநிலத்தில் உண்டாகும் புற்பூண்டுகளின் நிலையை மழை பெய்தால் அறியலாம்; நல்லவர் பொல்லாதவர் என்பதை மக்கட் பேற்றால் அறியலாம்.

பெருமை பொருந்திய வீரரைப் போர்க்களத்திலே பார்க்கலாம்; கற்றறிந்த புலவனென்பதை அவையிலே செய்யுஞ் சொற்பொழிவினால் தெரிந்து கொள்ளலாம்; நல்ல பண்பை ஒழுக்கத்தினால் உணரலாம்;

பளிங்கினாலே அதனுள்ளேயிருக்கும் பொருளைப் பார்க்கலாம்; பிறப்பின் சிறப்பைச் சொல்லாலே தெரிந்து கொள்ளலாம்; அறநூல்களைக் கேட்பதனாலே அறங்களை அறிந்து கொள்ளலாம்; நோய்களை நாடிகளால் உணரலாம்.

அருஞ்சொற்கள்:

வசனம் - தாமரை, விகசிதம் – ஒளி, வதனம் – முகம், பரிபூரணம் - எங்கும் நிறைவு, ஆனந்தம் – இன்பம், பளிங்கு – தன்னுள்ளேயிருக்கும் பொருள்களைத் தெளிவாகக் காட்டும். ‘அடுத்தது காட்டும் பளிங்கு' என்றார் வள்ளுவர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் . (23-May-20, 7:46 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 195

மேலே