வாயிற்படி ஆனாரிலையே

திருவாரூர்த் தியாகேசப் பெருமான் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்காகப் பரவையாரிடத்தே தூது சென்றனர். அந்தத் திருவருளைப் போற்ற நினைக்கிறார் கவிஞர். அடிமுடி தேடியும் காணாத மாலும் அயனும் அந்தப் பரவை வீட்டின் வாயிற்படிகளாக உருக்கொண்டு கிடந்திருந்தால், அவற்றைக் கண்டிருக்கலாம் அல்லவோ? என்று, அவர்களை நினைத்து இரங்குவது போலப் பாடுகிறார்.

நேரிசை வெண்பா

ஆனா ரிலையே அயனும் திருமாலும்
கானா ரடிமுடிமுன் காண்பதற்கு - மேனாள்
இரவுதிரு வாரூரி லெந்தைபிரான் சென்ற
பரவைதிரு வாயில் படி. 113

பொருளுரை:

“பிரமனும் திருமாலும், முன்னாளிலே காட்டில் தோன்றிய சிவபெருமானது அடியையும் முடியையும் காண்பதற்கு முடியாமற் போயினார்களே! திருவாரூரில், ஓர் இரவில், எம் தந்தையாகிய அச் சிவபெருமான் தூது நடந்து சென்ற பரவைநாச்சியாரின் வீட்டுவாயிற்படிகளாக அவர்கள் ஆனார்கள் இல்லையே? அங்ஙனம் ஆகியிருந்தால் அவர்கள் கண்டிருப்பார்கள் அல்லவோ?’ என்பது குறிப்பு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-May-20, 6:52 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 15

மேலே