குமரேச சதகம் - கயவர் குணம் என்றும் மாறாது - பாடல் 39

பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

குணமிலாத் துட்டமிரு கங்களையும் நயகுணம்
கொண்டுட் படுத்திவிடலாம்
கொடியபல விடநோய்கள் யாவும்ஒள டதமது
கொடுத்துத் திருப்பிவிடலாம்

உணர்விலாப் பிரமராட் சசுமுதல் பேய்களை
உகந்துகூத் தாட்டிவிடலாம்
உபாயத்தி னால்பெரும் பறவைக்கு நற்புத்தி
உண்டாக்க லா முயிர்பெறப்

பிணமதை எழுப்பலாம் அக்கினி சுடாமற்
பெரும்புனல் எனச்செய்யலாம்
பிணியையும் அகற்றலாம் காலதூ துவரையும்
பின்புவரு கென்றுசொலலாம்

மணலையும் கயிறாத் திரிக்கலாம் கயவர்குணம்
மட்டும் திருப்பவசமோ
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே. 39

- குருபாததாசர் என்ற முத்துமீனாட்சிக் கவிராயர்

பொருளுரை:

மயிலேறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலைமேவு குமரேசனே!

நல்ல குணம் இல்லாத கொடிய விலங்குகளையும் இனிய பண்பினாலே வசப்படுத்தி விடலாம், கொடுமையான பல நச்சு நோய்களையெல்லாம் மருந்தைக் கொடுத்து மாற்றி விடலாம்;

அறிவில்லாத பிரமராட்சசு முதலான பேய்களை விரும்பு முறையிலே கூத்தாடச் செய்து நீக்கி விடலாம்; கிளி முதலிய பெரிய பறவைகளுக்குத் தந்திரத்தினாலே நல்லறிவைத் தரலாம்; பிணத்தை உயிர்பெறச் செய்துவிடலாம்;

நெருப்பைச் சுடாமற் குளிர்ந்த மிகுதியான நீரைப் போலாக்கி விடலாம்; நோயையும் நீக்கலாம்; காலனுடைய தூதுவர்களையும் பிற்காலத்தில் வருக என்று கூறலாம்; மணலைக் கயிறாக்கலாம்; கடைப்பட்டவரின் பண்பை மட்டும் மாற்ற இயலாது.

கருத்து:

இங்குக் கூறப்பட்ட கொடுவிலங்கு முதலானவற்றைத் திருத்தினாலும், கீழ் மக்களை நன்முறையிலே திருப்ப முடியாது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-May-20, 7:00 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 13

மேலே