சந்து போனால்

'பெருமான், ஏனப்பா இப்படி ஆடுகின்றார்? திருவாரூர்த் தியாகராசப் பெருமானைத் தொழுது நின்ற காளமேகத்தை ஒருவர் கேட்டு விடுகிறார். “ஒரு பெண்ணினிடத்தில் ஒரு முறை அல்லாமல் இருமுறையும் தூதுபோய் வந்தவாராயிற்றே? அந்தக் களைப்புதான் சரியாக நிற்க முடியாமல் கால் ஆட்டங் கண்டிருக்கிறது போலும்!” என்று, அவருக்கு சொல்லுகிறார் கவிஞர்.

நேரிசை வெண்பா

திருந்தா டரவணியுந் தென்கமலை ஈசர்
இருந்தாடா தென்செய் திடுவார் - பொருந்த
ஒருகாலே யல்லவே யொண்டடிக் காவன்
றிருகாலும் சந்துபோ னால். 115

- கவி காளமேகம்

பொருளுரை:

தென்கமலை என்னும் திருவாரூரில் பாம்பைத் தலையில் அணிந்து கொண்டிருக்கும் ஈசன் தன் தோழன் சுந்தரருக்காக இரு காலாலும் நடந்து தூது போனால் ஆட்டம் போடாமல் வேறு என்ன செய்வார்? சுந்தரர் இரண்டாவது மனைவியாகச் சங்கிலியார் என்பவரைத் திருவொற்றியூரில் திருமணம் செய்து கொண்டார். இந்தச் செயலுக்காக, திருவாரூரில் வாழ்ந்த முதல் மனைவி ஊடினாள். அவளது ஊடலைத் தீர்க்கத் தன் இரண்டு காலாலும் நடந்து தூது போனார். இரண்டு காலும் போனால் (போய்விட்டால்) ஆடாமல் இருக்கமுடியுமா?

ஒள்ளிய தொடியணிந்த பரவையாருக்காக, அவள் சுந்தரரோடு மனம் பொருந்துமாறு, ஒரு தடவையே அல்லாமல், அன்றிரவிலேயே இரு தடவையும் தூது நடந்து சென்றால், நன்றாகப் படமெடுத்து ஆடுகின்ற பாம்பினை அணியும் அழகிய திருவாரூர்ப் பெருமானின் காலோய்ந்து ஆடாமல் என்னதான் செய்வார்?

பெருமான், தொண்டனுக்குத் தூது சென்ற சிறப்பினை உரைத்துப் பெருமானின் திருநடனத்தைச் சிறப்பிக்கின்றார் கவிஞர். 'சந்து போனால் என்பது, ‘சந்து நகர்ந்து போனால்' எனவும் பொருள்படும். சந்து நகர்ந்தால் அசைவின்றி நிற்க முடியாமல் போய்க் கால்கள் தாமாகவே ஆட்டம் கொடுக்கும்; இப்படிக் கூறியதாகவும் நாம் கொள்ளலாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-May-20, 8:12 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
Tanglish : santhu ponaal
பார்வை : 34

சிறந்த கட்டுரைகள்

மேலே