குமரேச சதகம் - அற்பருக்கு வாழ்வு வந்தால் குணம் வேறுபடும் – பாடல் 41

பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

அற்பர்க்கு வாழ்வுசற் றதிகமா னால்விழிக்
கியாவருரு வும்தோற்றிடா(து)
அண்டிநின் றேநல்ல வார்த்தைகள் உரைத்தாலும்
அவர்செவிக் கேறிடாது

முற்பட்சம் ஆனபேர் வருகினும் வாருமென
மொழியவும் வாய்வராது
மோதியே வாதப் பிடிப்புவந் ததுபோல
முன்காலை அகலவைப்பார்

விற்பனம் மிகுந்தபெரி யோர்செய்தி சொன்னாலும்
வெடுவெடுத் தேசிநிற்பார்
விருதா மகத்துவப் பேயது சவுக்கடி
விழும்போது தீருமென்பார்

மற்புயந் தனில்நீப மாலையணி லோலனே
மார்பனே வடிவேலவா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே. 41

- குருபாத தாசர் என்ற முத்துமீனாட்சிக் கவிராயர்

பொருளுரை:

மல்லுக்குரிய வலிய தோளிலே கடப்பமாலை அணிந்த இனியனே! அழகிய மார்பனே! கூரிய வேற்படையை யேந்தியவனே! மயிலேறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலைமேவு குமரேசனே!

இழிந்த குணமுடையவர்க்குச் செல்வாக்குச் சிறிது மிகுதியானால் யாருருவமும் கண்களுக்குத் தெரியாது; நெருங்கி நின்று இன்மொழி இயம்பினாலும் அவர்களுடைய செவியில் செல்லாது;

முன்நாளிலே அன்பாக இருந்தவர்கள் வந்தாலும் வாருங்கள் என்று கூறவும் வாய் எழாது; வாதநோய் வந்தவர்கள் போல முன்காலை விரைந்து நீட்டி வைத்து நடப்பார், (நடையிலே இறுமாப்புக் காணப்படும்);

அறிவிற் சிறந்த பெரியோர்கள் ஏதாவது சொன்னாலும் கடுகடுத்து வைதிடுவார்கள்; (அவர்களைப் பிடித்த) வீண்பெருமைப் பேய் சவுக்கடி விழுந்தால் நீங்கும் என்று (பெரியோர்) கூறுவர்; (தண்டனைக்கல்லது) வேறெதற்கும் அஞ்சமாட்டார்.

அருஞ்சொற்கள்:

நீபம் – கடம்பு, லோலன் - இனியன். விற்பனம் - அறிவு.

கருத்து:

கீழோர்க்குச் செல்வம் வந்தால் எவரையும் அன்புடன் நோக்கார்.
இன்மொழிகளை ஏற்கமாட்டார்.
செல்வம் வருமுன் அன்பாயிருந்தவரையும் வரவேற்க மாட்டார்.
இறுமாப்புடன் நடந்து கொள்வார்.
பெரியோர் மொழியை ஏற்க மாட்டார். உதைப்போர்க்கே அஞ்சுவர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-May-20, 8:16 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 8

மேலே