மருத்துவ வெண்பா – அன்னாசிப் பழம் - பாடல் 63

நேரிசை வெண்பா

மேகவெட்டை வாந்திபித்தம் மீறாவாம் மேனியிடுந்
தாகமுமட் டாகுந் தலைவலிபோம் – பாகமுறு
பூந்தாழை யின்பழத்தைப் பூரிப்பு டன்புசிக்க
லாந்தாழ்வும் இல்லை அறி. 63

- பதார்த்த குண விளக்கம்

குணம்:

பூந்தாழம் பழத்தால் பிரமேக வெள்ளை, வமனம், பித்த நோய், தாகம், சிரஸ்தாப ரோகம்,இவைகள் போகும்; அழகுண்டாகும்.

உபயோகிக்கும் முறை:

அன்னாசிப் பழத்தை மேல் தோல் நீக்கிச் சிறு துண்டுகளாக நறுக்கி, சாறு பிழிந்து, அதற்குச் சமனெடை சர்க்கரை கூட்டிச் சர்பத்தாகக் காய்ச்சி வைத்துக் கொள்ளவும். வேண்டும்பொழுது, வேளைக்கு ஒரு தோலா வீதம் தினம் இரண்டு வேளை கொடுத்து வர பிரமேகம், வெள்ளை, வாந்தி, அரோசிகம் முதலியவைகள் நீங்கும். தேகம் அழகு பெறும்.

இதனை மழை, குளிர் காலங்களில் அருந்துவது நன்றன்று.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-May-20, 12:41 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 21

சிறந்த கட்டுரைகள்

மேலே