ஒற்றி யாச்சே

திருவாரூரிலே ஒரு சமயம் காளமேகப் புலவர் தியாகேசப் பெருமானைத் தரிசனம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது அவருடைய திருநடனத்தைக் கண்ட அவருக்குப் பெருமானைத் துதித்துப் பாடவேண்டும் போலிருந்தது. அந்த ஆட்டத்தைக் கேலி செய்வது போல வியந்து பாடுகின்றார்.

நேரிசை வெண்பா

ஆடும் தியாகரே ஆட்டமேன் தானுமக்கு
வீடும் சமுசார மேலிட்டுக் - கூடிச்
செருக்கிவிளை யாடச் சிறுவரிரண் டாச்சே
இருக்குமூ ரொற்றியாச் சே? 116

- கவி காளமேகம்

பொருளுரை;

திரு நடனம் செய்யும் தியாகராயப் பெருமானே! உமக்கு ஏனய்யா இந்த வேண்டாத ஆட்டம் எல்லாம்? வீடும் சமுசார பந்தமும் அதிகமாகச் சேர்ந்து போய்விட்டதே! கர்வத்தோடு விளையாடிக் கொண்டிருக்க ஆண் மக்களும் இருவர் பிறந்து ஆய்விட்டதே! நீர் இருக்கின்ற ஊரும் ஒற்றியூராயிற்றே (ஒத்திக்கு வைக்கப்பட்டிருப்பதாயிற்றே)

ஆட்டம் ஆடம்பர வாழ்வு எனவும், ஒற்றி கடனுக்கு ஈடாக போக்கியம் வைக்கப்படுவது எனவும் பொருள்பட்டு நிந்தையாக அமைவதும் காண்க. "வளமானவர் ஆட்டமிடுவதிலே பொரு ளிருக்கிறது: உமக்கு எதற்கு ஐயனே ஆட்ட மெல்லாம்?" என்று உரிமையோடு கேட்கின்றார் கவிஞர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-May-20, 7:34 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 12

மேலே