குமரேச சதகம் - மக்களில் தீய கோள்கள் – பாடல் 42

பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

அன்னைதந் தையர்புத்தி கேளாத பிள்ளையோ
அட்டமச் சனியாகுவான்
அஞ்சாமல் எதிர்பேசி நிற்குமனை யாள்வாக்கில்
அங்கார கச்சன்மமாம்

தன்னைமிஞ் சிச்சொன்ன வார்த்தைகே ளாஅடிமை
சந்திராட் டகமென்னலாம்
தன்பங்கு தாவென்று சபையேறு தம்பியோ
சார்ந்தசன் மச்சூரியன்

நன்னயமி லாதவஞ் சனைசெய்த தமையன்மூன்
றாமிடத் தேவியாழம்
நாடொறும் விரோ தமிடு கொண்டோன் கொடுத்துளோன்
ராகுகே துக்களெனலாம்

மன்னயனை அன்றுசிறை தனிலிட்டு நம்பற்கு
மந்திரம் உரைத்தகுருவே
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே. 42

- குருபாத தாசர் என்ற முத்துமீனாட்சிக் கவிராயர்

பொருளுரை:

முற்காலத்தில் நிலை பெற்ற நான்முகனைச் சிறையில் வைத்துச் சிவபெருமானுக்குப் பிரணவப் பொருளை உரைத்த ஆசிரியனே! மயிலேறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலைமேவு குமரேசனே!

பெற்றோர் சொல்லைக் கேளாத சிறுவன் அவர்களுக்கு எட்டாமிடச் சனி போன்றவன்; அச்சமின்றி எதிர்த்துப் பேசி நிற்கும் இல்லாள் வாக்கிலேயிருக்கும் செவ்வாய் எனப் பிறந்தவள்;

தனக்கு மீறியவனாகிக் கூறியமொழி கொள்ளா வேலைக்காரன் எட்டாமிடத் திங்கள் என்று கூறலாம்; தன்னுடைய பங்கைக் கொடுக்கச் சொல்லி மன்றில் வழக்கிடுந் தம்பி பிறப்பிடத்திலே கதிரவன் ஆவான்;

நல்ல இனிமையில்லாமல், வஞ்சனைசெய்த மூத்தோன் மூன்றாம் வீட்டிலே வியாழன் ஆவான்; எப்போதும் பகைமை பாராட்டுங் கொண்டானுங் கொடுத்தானும் ஒருவர்க்கொருவர் இராகுவையுங் கேதுவையும் போன்றவர்.

விளக்கவுரை:

பிறந்த ஓரைக்கு (இலக்கினத்திற்கு) எட்டாம் வீட்டிற் சனியும், சந்திரனும்,

வாக்குக்குரிய வீட்டில் உள்ள செவ்வாயும்

பிறந்த வீட்டிற் சூரியனும்,

மூன்றாம் வீட்டில் வியாழனும், இராகு கேதுக்களும் கொடிய கோள்கள்.

கருத்து:

பெற்றோர் சொல்லை மக்கள் தட்டி நடத்தலாகாது.
கணவனை எதிர்த்துப் பேசுவது மனைவிக்குத் தகாது.

பணிசெய்வோன் தலைவன் சொற்படி நடத்தல்வேண்டும்.
தம்பி தமையனுடன் பங்குக்காக வழக்கிடுதல் நன்மையன்று.

தமையனுந் தம்பியை ஏமாற்றல் கூடாது.
கொண்டானுங் கொடுத்தானும் எப்போதும் பகைத்துக் கொள்ளல் நன்றன்று.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-May-20, 7:45 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 52

சிறந்த கட்டுரைகள்

மேலே