வயிரம் இருப்பதா

செருக்கு மிகுந்த செல்வர் ஒருவர், திருவாரூர்த் தியாகேசருக்கு ஒரு வைர மாலையினை அணிவித்துத் தம்மைக் குறித்துப் பெருமை பேசிக் கொண்டிருந்தார். அப்போது, காளமேகம் பாடியது இது.

தியாகராயரைப் புலவர் தரிசித்துக் கொண்டிருந்தபோது, அவ்விடமிருந்த ஒருவர், சுவாமிக்குச் சார்த்தியிருந்த வயிரப்பதக்கம் அறவும், பொருந்தவும் பாடுமாறு கேட்டனராம். அப்போது அறப்பாடியது இது என்பர் சிலர். இது பொருந்துமாறு இல்லை. பக்தர்கள் இப்படி ஒருபோதும் கேட்கவே மாட்டார்கள்.

நேரிசை வெண்பா

அன்னவயல் சூழ்ந்திருக்கும் ஆரூரான் நெஞ்சத்தில்
இன்னம் வயிரம் இருப்பதா - முன்னமொரு
தொண்ட(ன்)மக னைக்கொன்றுஞ் சோழ(ன்)மக னைக்கொன்றும்
சண்ட(ன்)மக னைக்கொன்றும் தான்? 117

- கவி காளமேகம்

பொருளுரை:

அன்னங்கள் விளங்குகின்ற வயல்களைச் சுற்றவும் கொண்டதாய் அமைந்திருக்கின்ற திருவாரூர்ப் பெருமாளின் திருமார்பிடத்தே இன்னமும் வயிரம் இருப்பதோ? (வயிரம் - வயிரமாலை; சினம்) முதற்காலத்தே ஒப்பற்ற தொண்டனான சிறுத்தொண்டனின் மகனைக் கொன்றானே! மனுச்சோழனின் மகனையும் கொன்றானே! சண்டேசுரனின் தந்தையையும் கொன்றானே! இனியும் எதற்குத் தான் இந்த வயிரமோ? (சினமோ?) வயிரம் இருப்பதா? என்று புலவர் இருபொருள்படப் பாடவும், அந்த வயிரமாலை தானே அற்று விழுந்த தெனவும் கூறுவர், அதனால் செல்வரின் செருக்கும் அழிந்தது என்று கொள்ளுக.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (31-May-20, 8:23 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 38

சிறந்த கட்டுரைகள்

மேலே