குமரேச சதகம் - நல்லினஞ் சேர்தல் – பாடல் 43

பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

சந்தன விருட்சத்தை அண்டிநிற் கின்றபல
தருவும்அவ் வாசனைதரும்
தங்கமக மேருவை அடுத்திடும் காக்கையும்
சாயல்பொன் மயமேதரும்

பந்தம்மிகு பாலுடன்வ ளாவியத ணீரெலாம்
பால்போல் நிறங்கொடுக்கும்
படிகமணி கட்குளே நிற்கின்ற வடமுமப்
படியே குணங்கொடுக்கும்

அந்தமிகு மரகதக் கல்லைத் தரித்திடில்
அடுத்ததும் பசுமையாகும்
ஆனபெரி யோர்களொடு சகவாசம் அதுசெயின்
அவர்கள் குணம் வருமென்பர்காண்

மந்தர நெடுங்கிரியின் முன்கடல் கடைந்தஅரி
மருகமெய்ஞ் ஞானமுருகா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே. 43

- குருபாத தாசர் என்ற முத்துமீனாட்சிக் கவிராயர்

பொருளுரை:

முற்காலத்தில் மந்தரம் எனும் பெரிய மலையினாலே கடலைக்கடைந்த திருமாலின் மருமகனே! உண்மை யறிவான முருகனே! மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு மலைமேவு குமரேசனே!

சந்தனமரத்தைச் சார்ந்து நிற்கின்ற பல மரங்களும் சந்தன மணமே தரும்; பொன்மயமான மாமேருவைச் சார்ந்த காக்கையும் பொன்நிறச் சாயல் கொடுக்கும்;

பாலுடன் பொருந்துகின்ற தண்ணீரைக் கலந்தால் அந்த நீர் முழுதும் பால் போலவே தெரியும்; படிகமணியிற் கோத்த நூலும் படிகம் போலவே நிறம் தரும்;

அழகுமிக்க பச்சைக்கல்லை அணிந்தால் அதனைச் சார்ந்ததும் பசுமையாகவே இருக்கும்; ஆக்கமுடைய பெரியோர்களை நட்புக்கொண்டால் அவர்களுடைய குணம் வரும் என்பர் (அறிஞர்).

கருத்து:

உலகப்பொருள்கள் சார்ந்ததன் வண்ணமாகவே இருத்தல் இயல்பு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (31-May-20, 8:35 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 23

மேலே