சம்பள உயர்வு

மத்திய அரசாங்கம் தன் ஊழியர்களுக்கும், பென்ஷன்தாரர்களுக்கும் 7வது பே கமிஷன் அறிக்கைப்படி சம்பளத்தை உயர்த்த முடிவு செய்து இருக்கிறது. இதை அடிப்படையாகக் கொண்டு அது அமல் படுத்தப்படுவதற்கு முன்பாக என் கற்பனைக் குதிரையை ஓட விட்டதன் விளைவு
************************************************************************************************
“அரசங்கத்தின் அடிமட்ட ஊழியர்கள் இனிமேல் அலுவலகத்திற்குக் காரில் தான் வருவார்கள். சாலைகளில் ஓடும் வாகனங்களின் எண்ணிக்கை மிக மிக அதிகரித்து விட்டதால், அங்கு பாதசாரிகளுக்கு “சாரி, இடமில்லை” என்று சொல்லும் நிலைமை வந்துவிட்டது. அதனால் பாதசாரிகளின் எண்ணிக்கையும் பெருமளவு குறைந்து விட்டது உண்மையே. ஆனால் கார்களைப் பார்க் செய்ய இடம் கிடைக்காமல், கிடைத்த இடத்தில், பிளாட்பாரம் என்று ஒன்று இருந்தால், அங்கும் பார்க் செய்யவே நகரில் டிராஃபிக் ஜாம் ஜாம், ஜாமென்று அதிகரித்து நகரையே ஸ்தம்பிக்கச் செய்தது. ரயில்களில் இரண்டாம் வகுப்புப் பெட்டிகள் நீக்கப் பட்டன. எல்லாப் பெட்டிகளும் முதல் வகுப்புப் பெட்டிகளாக மாற்றப் பட்டன. விபத்தில் இறப்பவர்களுக்கு குறைந்த பட்சம் 15/- லட்சம் நஷ்ட ஈடு தருவதாகச் சொல்லி ரயில் பயணிகளுக்கு ரயில்வே ஆசை காட்டியது. பஸ்களில் கும்பல் இல்லாததால் அவைகளெல்லாம் லாரிகளாகவும், டிரக்குகளாகவும் மாற்றப் பட்டன.
பல அரசாங்க உழியர்களும் ஆகாய விமானங்களில் பறக்க ஆரம்பித்தனர். இதனால் நாட்டிலுள்ள ஒவ்வொரு ஏர் போர்ட்டும் சென்ட்ரல் ஸ்டேஷன் ஆகியது.

அன்றாட அத்தியாவசியப் பொருள்களின் விலை ஆகாயத்தை முட்டியது. ஒரு இட்டிலியின் விலை 50/- ரூ. ரோட்டோரக்கடைகளிலும், கையேந்தி பவன்களிலும் ஒரு இட்லியின் விலை 20 ரூபாயிலிருந்து 25/- ரூபாய். இருந்தாலும் எல்லா 3,4,5 நட்சத்திர ஓட்டல்களிலெல்லாம் இடம் கிடைக்காமல் பெரிய பெரிய க்யூ வரிசையில் மக்கள் நின்று கொண்டு இருந்தனர்.

அரசாங்க அடிமட்ட ஊழியர் வேலைக்கு ஏராளமான முதுகலைப் பட்டப்படிப்பு படித்தோரும், டாக்டரேட் பட்டம் பெற்றோரும் விண்ணப்பித்து இருந்தனர். அரசு வேலைக்கு நாட்டில் மிகப் பலத்த போட்டி ஏற்பட்டது. பியூன் வேலைக்கு ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்துத்தான் பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இதர வேலைகளுக்கு சம்பளத்திற்கு ஏற்றாற்போல் லஞ்சம் 5 லட்சத்திலிருந்து ஒரு கோடி வரை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அரசாங்க ஊழியர்களுக்குப் பலர் போட்டி போட்டுக் கொண்டு பெண் கொடுக்க முன்வந்தனர். வரதட்சிணையும் லஞ்சத்தை விடப் பல மடங்கு அதிகம் கொடுக்கப் பலரும் தயாராயினர். முன்பு 100 பவுன் கேட்ட பையனைப் பெற்றோர் இன்று 1000 பவுன் அன்பளிப்பு என்ற பெயரில் கேட்டனர்.

குழந்தைகளை LKG, மற்றும் UKGயில் சேர்க்க 5 லட்சத்திலிருந்து 10 லட்சம் வரை ஆவதால் பல பெற்றோர்களும் குழந்தைகளை சிங்கப்பூர், மலேசியா என்றும் ஒரு சிலர் அமெரிக்காவிலும் சேர்க்க ஆரம்பித்தனர். வீதிக்கு வீதி குழந்தைகள் காப்பகங்கள் நிறையத் தோன்ற ஆரம்பித்தன. இதனால் பல தாய்மார்கள் தாராளமாக சம்பாதிக்க முடிந்தது.

பிறக்கப் போகும் குழந்தைகள் IT யில் சேரவேண்டும் என்று பல கோவில்களிலும் விசேஷ பூஜைகளும் அபிஷேகங்களும் செய்யப்பட்டன. பல ஜோசியர்களும் ஒரு கேள்விக்கு 1000/- ரூபாய் என்று தங்கள் ரேட்டை எந்தப் பே கமிஷனின் தயவையும் எதிர்பாராது தீர்மானித்தனர். கஷ்டப்பட்டு உழைக்கும் தொழில்களுக்கு பலரும் முன்வராததால், இது ஓரளவு படித்த வேலை இல்லாப் பட்ட தாரிகளின் பிரச்சினையைத் தீர்க்க உதவியது.

அரசாங்க பென்ஷன் பெறுவோருக்கு அவர்களின் குழந்தைகளின் கவனிப்பு அதிகமாகியது. இதனால் இவர்கள் அனைவரும் முதியோர் பாதுகாப்பு இல்லத்திற்குச் செல்லாமல் தப்பினர்.
கூலி வேலை மற்றும் வீட்டு வேலை செய்வோர் தங்கள் தினக்கூலியையும் மாதச் சம்பளத்தையும் பலமடங்கு உயர்த்தினர். வீட்டு வேலை செய்வோர் குறைந்த பட்ச மாத சம்பளமாக 25,000/- ரூபாய் கேட்க ஆரம்பித்தனர். இவர்களில் பலரும் வீட்டு வேலை செய்ய ஸ்கூட்டரிலோ, பைக்கிலோ வர ஆரம்பித்தனர்.

பல நடுத்தர மற்றும்பணக்கார வர்க்கத்தினரும் வீட்டு வேலைக்கு ஆள் வைத்துக் கொள்வது கட்டுப்படி ஆகாததால் தங்கள் தங்கள் வேலையை அமெரிக்காவில் நடப்பது போல் தாங்களே செய்துகொண்டு தங்கள் தலையெழுத்தை நொந்து கொள்ள ஆரம்பித்தனர். இதனால் வீட்டு உபகரணங்கள் பலவற்றிற்கும் டிமாண்ட் கூடின. எல்லா வீடுகளிலும் டிஷ் வாஷர் எனப்படும் பாத்திரம் கழுவும் யந்திரங்களை உபயோகிக்க ஆரம்பித்தனர். இதனால் வீட்டுக்குப் பயன்படும் பொருள்களின் வியாபாரம் ஓகோ என்று பெருகியது. அரசாங்கமும் ஏழைகளுக்கு இவற்றை இனாமாக வழங்க ஆரம்பித்தது.

பணத்தின் வீங்கும் சக்தியையும் தாண்டி மக்களின் வாங்கும்சக்தி அதிகரித்ததால் வியாபாரம் செழித்தது. புதிய வீடுகளின் விலையும் சரசரவென்று ஏறி ஆகாயத்தைத் தொட்டது. இருந்தாலும் வாங்குவோர் தொகை அதிகரித்ததே ஒழிய குறையவில்லை. ப்ளாட்டுகளின் விலையோ சொல்லவே வேண்டாம். ஒரு பெட்ரூம் ஃப்ளாட் ஊர்க் கோடியிலிருந்து ஐம்பது அறுபது கிலோமீட்டர் தள்ளி இருக்கும் ஒரு பொட்டலில் ஒரு கோடியைத் தாண்டியது.

பிச்சைக்காரர்கள் பத்து ரூபாய்க்குக் குறைவாகப் பிச்சை இட்டால் அப்பணத்தை நம் மூஞ்சியில் விட்டு எறிந்தார்கள். ஒரு சிலர் தங்கள் தட்டிலிருந்த பணத்தையும் நம்மிடம் விட்டெறிந்து “வெச்சுக்கோ” என்றார்கள்.

அரசாங்கமும் ஏழைகளின் நலனைக் கருதி வீட்டுக்கு ஒரு ஏர்கண்டிஷனரை இனாமாகத் தந்ததால் ஏர்கண்டிஷன் இல்லாத ஏழைகளின் வீடே இல்லை என்றாயிற்று. இதனால் வெயிலில் வேலை செய்வோர் ஏராளமான கூலியும், சம்பளமும் கேட்க ஆரம்பித்தனர்.

விவசாயிகள் அனைவரும் தங்கள் குழந்தைகளை இஞ்சினீரிங், மற்றும் டாக்டருக்குப் படிக்க வைப்பதால் விவசாயம் செய்ய ஆட்களில்லாமல் விவசாயம் படுக்க ஆரம்பித்து விட்டது. இதனால் விவசாயவிளை பொருட்களின் விலை சந்திரமண்டலத்தையும் தாண்டியது. உள்நாட்டில் தாராளமாக விளைந்து வந்த பொருட்களையும் நாம் வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டி வந்தது. நம் நாட்டுப் பொருட்களே வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப் பட்டால் அதற்கு நம்நாட்டில் பலத்த ஆதரவு கிட்டிற்று.

பொருட்கள் கொஞ்சம் பழையது ஆனாலும் அதை முன்பு போல் ரிப்பேர் அல்லது மறு சுழற்சி (recycle) செய்து பயன் படுத்திக்கொண்டிராமல் குப்பையில் தூக்கி எறிந்தனர். இதனால் நாட்டிலும் ரோட்டிலும் குப்பைகள் பெருகின. அவற்றை சீர்படுத்தி அப்புறப்படுத்த போதிய இடமின்மையால் ஊர்பூராவும் குப்பை மேடுகளாயின. மேலும் e வேஸ்டுகள் எனப்படும் எலக்ட்ரானிக் குப்பைகள் அதிகரித்தன. பொது மக்கள் யாரும் அதைப் பற்றிக் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை.

வாகனங்கள் அதிகரித்ததால் காற்று மாசு அடைந்து அதனால் பல நுரையீரல் பிரச்சினைகள் சம்மந்தப்பட்ட வியாதிகள் தோன்றின. மக்கள் அதைப் பற்றிக்குறை சொன்னார்களே ஒழிய அவர்கள் அதைத் தவிர்க்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. பலரும் காற்று மாசிலிருந்து தப்ப முகமூடி போல் முககவசம் அணிந்து கொண்டார்கள். இதனால் பல தீவிர வாதிகளைக் கண்டு பிடிக்க முடியாமல் போனது. அதே சமயம் பெண்களின் முக அடையாளம் சரியாகத் தெரியாததால் அவர்கள் முகத்தில் திராவகம் வீச வழி இல்லாமல் பல வாலிப வீரர்கள் நொந்து போயினர். மேலும் இதனால் பல ஒருதலைக் காதல் கொலைகளும் நாட்டில் வெகுவாகக் குறைந்து போயின.

வசதி வந்ததாலே நாட்டில் பல வசதி சார்ந்த நோய்கள் பல பரவின. ஒபிசிடி (obesity) எனப்படும் உடல்பருமன், டயாபெடிஸ் எனப்படும் சர்க்கரை வியாதி போன்றவை அதிகரித்தன. இதனால் பல திருடர்களும் வேகமாக ஓடமுடியாமல் தடுக்கி விழுந்து போலீஸிடம் மாட்டிக் கொண்டனர். நாட்டில் பலருக்கும் தொப்பை விழுந்து விட்டால் போலீஸாரைக் கிண்டல் செய்யும் தொப்பை ஜோக்குகளும் குறைந்து போயின.
எவ்வளவு வசதி வந்தும் மக்கள் தங்கள் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ள வில்லை.


நடு ரோட்டில் துப்புதல், குப்பையைக் கொட்டுதல் இன்ன பிற காரியங்கள் எந்தக் குறையுமில்லாமல் நடந்தேறின. வழக்கம்போல் சட்டத்தை மதிக்காமல், சாலை விதிகளையும் மதிக்காமல் இருந்ததால் போலீஸுக்கு நல்ல வரும்படி. விபத்துக்களும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அதிகரித்தன. வேலைக்குப் போய சம்பாதிப்பதைவிட பணம் பறித்தல், அதற்காகக் கொலை செய்தல் போன்றவை சுலபமாக இருப்பதால் இத்தகைய குற்றங்கள. நாளுக்கு நாள் அதிகரித்தன.
அரசாங்க ஊழல்கள் முன்புபோல் லட்சம் கோடிகளாக இல்லாமல் இப்போது கோடி கோடிகளாக வளர்ந்துவிட்டன.

பலருடைய வாழ்க்கைத்தரமும் உயர்ந்து விட்டதால் எல்லோரும் அதிகமாகத் தண்ணீரைப் பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர். இதனால் தண்ணீர்த் தட்டுப்பாடு தோன்றியது. ஒரு குடம் தண்ணீர் ரூ 50/- லிருந்து ரூ 100-/ வரையிலும் விற்கலாயிற்று. இதனால் தண்ணீர் லாரிகளின் போக்கு வரத்து அதிகமாகியது. அதே நேரத்தில் சாக்கடைகள் நிரம்பி வழிய ஆரம்பித்தன. இதனால் நாட்டில் டெங்கு போன்ற பல இது வரையிலும் கேள்விப் பட்டிராத பல நோய்கள் தோன்றி நாட்டின் ஜனத்தொகையைக் குறைக்க உதவின.

வேலை அற்றோர் விலைவாசியை சமாளிக்கமுடியாமல் விவசாயிகளுடன் போட்டி போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொள்ள ஆரம்பித்தனர். ஒரு சிலர் வெட்கத்தைத் துறந்து பிச்சை எடுக்கவும் துணிந்தனர். குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்ய முன்வரும் வேலை இல்லாப் பட்டதாரிகளையும் மற்றவர்களையும் வேலையிலிருப்போர் கடுமையாக எதிர்த்தனர்.

இவ்வளவு வசதி வந்தும் அரசாங்க அலுவலர்கள் அனைவரும் சம்பள உயர்வு போதாது என்று கோரி ஸ்டிரைக் செய்தனர். இதற்குக் கம்யூனிஸ்டுகள் உட்பட அனைத்து எதிர்கட்சிகளும் அவர்களை ஆதரித்து அகில இந்திய தர்ணாவில் ஈடுபட்டு பல பஸ்களையும் கார்களையும் எரித்து பல கடைகளையும் உடைத்து பல கோடி நஷ்டம் ஏற்படும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தி தங்கள் போராட்டம் வெற்றி, வெற்றி என்று பறைசாற்றினார்கள். பாங்குகளும் வழக்கம் போல மாதம் ஒரு முறையோ அல்லது இரு முறையோ ஸ்டிரைக்கில் ஈடுபட்டு மகிழ்ந்தார்கள். அவர்களுக்குச் சற்றும் சலிக்காமல் பஸ், ரயில் ஊழியர்களும் அவ்வப்பேது ஸ்டைரைக் செய்து மக்களை மகிழ்வித்தார்கள். ……………”


“என்னங்க, இன்னுமா எழுந்திருக்கலை?” என்று என் தலையில் தண்ணீர் கொட்டாத குறையாக என்னை என் மனைவி எழுப்ப “விடிஞ்சி ரொம்ப நேரம் ஆச்சா? அடடா நான்
இத்தனை நேரம் கண்டதும் கனவா?” என்று பேப்பரில் “பே கமிஷன்” பற்றிய எதிர்பார்ப்பில் தூங்கிவிட்ட நான் “ நல்ல பே கமிஷன்” என்று சொல்லியபடி எழுந்தேன். “ஏங்க, இன்னிய பேப்ர்லே பே கமிஷன் அறிவிப்பு வந்து இருக்கே. உங்களுக்கு எவ்வளவு சம்பளம் கூட வரும்?”என்று என்னைக் கேட்டாள் அவள். “என்ன ? பே கமிஷன் அறிக்கை வெளியாகி விட்டதா?” என்று என் கனவையும் மறந்து மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தேன். எனக்குத் தெரியும், இந்த சந்தோஷம் இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான் என்று. இருந்தாலும் என்ன? இப்போதைக்கு சந்தோஷம்தானே.

பேப்பரைப் பிரித்துப் பார்த்தேன் மத்திய ஊழியர்களுக்கு இந்த பே கமிஷனின் அறிக்கை திருப்தி தருவதாக இல்லை என்றும் இதை எதிர்த்து ஸ்டிரைக் செய்யப்போவதாகவும் அதை ஒரு எதிர் கட்சி ஆதரிப்பதாகவும் போட்டிருந்தது.

எழுதியவர் : ரா.குருசுவாமி ( ராகு) (2-Jun-20, 9:44 am)
சேர்த்தது : ரா குருசுவாமி
Tanglish : sambala uyarvu
பார்வை : 16

மேலே