புற்று மண்

வைத்தீச்சுரன் கோயிலில் புற்றுமண் சிறப்பாகும். அதனை குறித்துக் காளமேகம் பாடுகிறார். தம்மை மதியாத சம்பந்தாண்டான் மீது காளமேகம் வசைபாட, அதனால் இவருக்கு நோய் வந்தடைந்தததாம். அந் நோயினின்றும் வைத்தீசர் கோயிற் புற்றுமண்ணை உண்டு இவர் விடுபட்டாராம். அப்போது அதனைச் சிறப்பித்துப் பாடியது இது என்பது வரலாறு.

நேரிசை வெண்பா

மண்டலத்தி னாளும் வயித்தியராய்த் தாமிருந்தும்
கண்டவினை தீர்க்கின்றார் கண்டீரோ - தொண்டர்
விருந்தைப்பார்த் துண்டருளும் வேளூரென் னாதர்
மருந்தைப்பார்த் தாற்சுத்த மண். 120

- கவி காளமேகம்

இந்த உலகிலே எந்நாளும் மருத்துவராகவே தாம் வீற்றிருந்த போதிலும், தம் கழுத்திலே அமைந்த கறையாகிய நோயினை அவர் தீர்த்துக்கொள்வதனை எவரேனும் கண்டிருக்கிறீர்களோ? கண்டது கிடையாதே!

தொண்டர்கள் படைக்கின்ற விருந்துகளை எதிர்பார்த்து, அவற்றை உண்டு அருளுகின்ற, வேளூரிலிருக்கும் என்னுடைய தலைவரின் மருந்தைக் கவனித்துப் பார்த்தால், அது வெறும் மண் என்பதையாவது யாரும் அறிவீர்களோ?

பெருமானை இகழ்வது போலப் புகழ்கிறார் கண்டவினை தீர்க்கின்றார்’ என்பதனை, “ஆன்மாவுக்கு நோயாக கண்ட இருவினையையும் போக்குகின்றார்” எனவும், தொண்டரின் காணிக்கையினை ஏற்று உதவுபவர் எனவும், புற்று மண்ணே சிறந்த மருந்தாகுமெனவும் கொள்ள வேண்டும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Jun-20, 7:55 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 17

புதிய படைப்புகள்

மேலே