சுற்றுச்சூழல் காப்போம் == உலக சுற்றுச்சூழல் தினமின்று

***********************************************
மலைநின்று தவழ்ந்துவரும் தண்ணீர்
-மரமெமக்கு பரிசளிக்கும் கண்ணீர்.
விலைகொடுத்துக் கேளாமல் கிட்டும்
-வெகுமதியே வீசுகின்றக் காற்று
இலைமறைவில் கனியவிட்டு நாவில்
-இனிக்கவிடும் பழமனைத்தும் பூவில்
தலைமறைவாய் இருக்கவிட்டி யற்கை
-தந்ததுண்டும் வனமழிப்போம் நாமே!
**
நடுவதற்கு இடமிருந்தும் வீணாய்
-நம்நிலத்தைப் பாழ்படுத்தி வைப்போம்
கெடுவதற்கு மட்டுமென வெண்ணி
-கேவலமாய் மரம்வெட்டிச் சாய்ப்போம்
சுடும்வெய்யில் காலத்தில் நிற்கச்
-சுகமான நிழல்தேடிச் செல்வோம்
படுந்துன்ப மத்தனைக்கும் நாமே
-படுகுழியை வெட்டிவிட்டுப் பாய்ந்தோம்
**
சுற்றாடல் அழுக்காகும் வண்ணம்
-சுவைப்பதையே வீதிதனில் வீசக்
கற்றாராய் நாமிருந்து மண்ணில்
-கால்நடைகள் தனைவிஞ்சி விட்டோம்
மாற்றாரைக் குறைசொல்லிச் சொல்லி
-மனமகிழ்ச்சிக் கொள்ளுகின்ற நாமும்
சுற்றாடல் சற்றேனும் காத்தால்
-சுவாசிக்க லாம்தூயக் காற்று.
**
மெய்யன் நடராஜ்
-

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (5-Jun-20, 12:13 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 94

மேலே