மழைக் குருவி

ஒரு மழைக்கால
விடுமுறை நாளின்
காலை நேரம்...
கதவருகே நின்றபடி...
கையில் தேநீருடன் நான்..

சந்தோசமாய் சிதறும்...
சாரல் மழைத் துளிகளில்..
சில...
தைரியமாய்...
என் முகம் தொட்டு போகின்றன..

திடீரென...
எங்கிருந்தோ வந்த
சிட்டுக்குருவி ஒன்று...
என்னை கடந்து உள்ளே சென்று...
ஓடாமல் கிடக்கும்
மின் விசிறியின்
மேலே அமர்ந்தது..

கீச்கீச் என்று கத்தியபடி
குதுகலத்துடன்
கூடு கட்டத் துவங்கியது..

வெளியே பறப்பதும்
அலகில் எதையோ
அழுத்தியபடி
உள்ளே வருவதுமாய்
வேகவேகமாய்- அதற்கான
வீட்டை கட்டுகிறது..

அழைப்புக் குரலில்
கவனம் சிதற
வெளியே
மழையில் நனைந்தபடி
மின் விசிறி பழுது பார்ப்பவன்
நைந்து போன சட்டையில் முகம் துடைத்தபடி..

குடும்ப சூழலோ..!
விடா மழையிலும்
வேலை பார்கிறான்...

சிறுகுருவிக்காக...
பழுது பார்க்கத் தோன்றவில்லை..

பழுது பார்ப்பவரை..
திருப்பி அனுப்ப
மனமுமில்லை.!

என்ன செய்யலாம்...?
அவன்
செய்யாத வேலைக்கு
கூலி வாங்கவும் தயாராயில்லை.!

என்ன செய்யலாம்...?

என்ன நினைத்ததோ...
இரண்டு முறை
எங்களை சுற்றிய
சிட்டு குருவி
எதுவோ புரிந்தது போல்
பறந்தோடிப் போனது...

வெறித்து பார்கிறேன்... வெளியே...
இப்போது...
மழையின் சாரல்...
மகிழ்ச்சியைத் தரவில்லை.!!!


-----------------------------------------------

எழுதியவர் : மருத கருப்பு (7-Jun-20, 10:05 am)
சேர்த்தது : மருத கருப்பு
Tanglish : koodu
பார்வை : 173

மேலே