முத்தக் காலம் 1

முத்தக் காலம் - கவிதை – செவல்குளம் செல்வராசு

குவிகம் இலக்கிய மாத இதழில் ஏப்ரல் 2020 பிரசுரமான கவிதைகள்


1. நம் முதல் திருமண நாளன்று
காலையில் ஒரு பந்தயம் வைத்தாய்
அன்று பகல் முழுவதும்

என் பெயரை

நீ எத்தனைமுறை அழைக்கிறாயோ

அத்தனை முத்தங்கள்

இரவில் நான் தரவேண்டும் என்றாய்



நான் வெற்றி பெற்றால்

நீ நூறு முத்தங்கள் தருவதாகவும்

தோல்வியுற்றால் அபராதமாய்

நான் ஐம்பது முத்தங்கள் தர வேண்டும்

என்றும் நிர்ணயித்தாய்

மொத்தத்தில் அன்றிரவு

முத்தத்தில் நிறைந்தது


2. பனிப்பொழிவு துவங்கியிருந்த

ஓர் மார்கழி அந்தியில் சொன்னாய்

“ஒரு பந்தயம்”

“சொல் இப்போதே தயார்”

“எலுமிச்சை ஒன்றை

நெற்றியில் இருந்து கால் பெருவிரல் வரை

உடம்பை விட்டு எடுக்காமல்

உருட்டிக் கொண்டே வரவேண்டும்”

“இதில் என்ன சிரமம்”

உருட்டுவது கைகளால் அல்ல

இதழ்களால் மட்டுமே

தோற்றால் தோற்ற இடத்தில்

முத்தமிட வேண்டும் நான் ஏற்கும் வரை”

“வென்றால்”

“இன்னுமொரு வாய்ப்புக் கொடுப்பேன்

நீ தோல்வியடைய”

3. வெட்கப்பட அறிந்திராத வயதில்

நீ பட்டாம் பூச்சி ரசித்திருந்த

நம் விளையாட்டுப் பொழுதில்

நீ கவனிக்காததைப் பயன்படுத்தி

கன்னத்தில் முத்தமிட்டேன்

அழுதவாறே வீட்டிற்கு ஓடினாய்

மறுநாள் காலையில் தான்

தோப்புக்கரணத் தண்டணை கொடுத்துவிட்டு

எனக்குக் கோலம் போடக் கற்றுக்கொடுத்தாய்

இன்றும் கோலங்கள் பார்க்கையில்

நீர் சுரக்கிறது கண்களில்...

எழுதியவர் : செவல்குளம் செல்வராசு (7-Jun-20, 12:30 pm)
பார்வை : 735

மேலே