பெரும்பொருள் கீழோர் உறப்பெறினும் ஈயார் உவந்து - புன்மை, தருமதீபிகை 620

நேரிசை வெண்பா

ஆலைக் கரும்புபோல் அல்லலிடைப் பட்டாலும்
மேலைக் குடிப்பிறந்த மேலோர்கள் - சாலப்
பிறர்க்கிதமே செய்வர்; பெரும்பொருள் கீழோர்
உறப்பெறினும் ஈயார் உவந்து. 620

- புன்மை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

தாம் அல்லல் பல அடைந்தாலும் மேன்மக்கள் பிறர்க்கு நல்ல இதங்களைச் செய்வார்; செல்வம் மிகப் பெற்றாலும் கீழ்மக்கள் யாருக்கும் யாதும் உதவி செய்யார் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

இனிய தன்மைகளையுடையவர் நல்ல தண்ணீர்போல் எல்லார்க்கும் இன்பம் பயந்து வருதலால் மேலோர் என ஞாலம் அவரை உவந்து போற்றி வருகிறது. தன்னுள்ளே சீலம் செறிந்த பொழுது வெளியே சீர்மைகள் சுரந்து மேன்மைகள் பெருகி வருகின்றன.

உடல், பொருள் எவற்றினும் உயிர் உயர்ந்தது. இந்த ஆன்மாவைப் பழுது படுத்தாமல் எந்த மனிதன் புனிதமாய்ப் பேணி வருகின்றானோ அவன் பெரிய மகான் என உயர்ந்து திகழ்கிறான். தான் இனியனாகவே எவ்வழியும் யாண்டும் அவன் இன்பமாய் இனிது இயங்குகின்றான்.

மதுரமான இனிய சாரம் கரும்பில் அமைந்துள்ளது, அவ்வாறே புனிதமான நல்ல நீர்மைகள் மேலோரிடம் அமைந்திருக்கின்றன. கரும்பை எப்படிக் கசக்கிப் பிழிந்தாலும் இனிய சுவையே தரும்; மேலோர் அல்லல் பல அடைந்தாலும் யாண்டும் நல்லதே செய்வர்.

ஆலைக் கரும்பு என்றது அல்லல் நிலையின் எல்லை தெரிய வந்தது. துன்பச் சூழலில் துடித்திருந்தாலும் மேலோர் இனியராய் இன்பமே புரிவர் என்பதை உவமை நன்கு உணர்த்தி நின்றது.

இன்னிசை வெண்பா

கடித்துக் கரும்பினைக் கண்தகர நூறி
இடித்துநீர் கொள்ளினும் இன்சுவைத்தே யாகும்;
வடுப்பட வைதிறந்தக் கண்ணுங் குடிப்பிறந்தார்
கூறார்தம் வாயிற் சிதைந்து. 156

மேன்மக்கள், நாலடியார்

நல்ல குடிப்பிறந்தவரை அல்லல் உறுத்தினும் அவர் வாயால் பொல்லாத சொல்லைச் சொல்லார் என இது உணர்த்தியுள்ளது. நல்லோர்க்குக் கரும்பை இதில் உவமை காட்டியுள்ளமை கருதியுணர வுரியது.

பிறர்க்கு இதமே செய்வர். உயர்ந்த குடிப்பிறந்தவரது இயற்கை நிலைமையை இது விளக்கியுள்ளது. ஒருவன் உயர்ந்தவன். என்பதற்கு அடையாளம் உள்ளம் புனிதமாய் இனிமை சுரந்திருப்பதேயாம்.

நல்ல நீர்மையாளன் எவ்வழியும் யார்க்கும் நலமே புரிந்து வருதலால் புகழும் புண்ணியமும் பொலிந்து அவன் ஒளிமிகுந்து நிலவுகின்றான். அல்லலுறினும் நல்லதே செய்தலால் அவன் பிறந்த குடி உயர்ந்ததென உலகம் உவந்து புகழ நேர்ந்தது.

நேரிசை வெண்பா

ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந் நாளுமவ்வா(று)
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் - ஏற்றவர்க்கு
நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லையென மாட்டார் இசைந்து. 9 நல்வழி

நதியில் நீர்ப் பெருக்கு வற்றி மணலாயிருந்தாலும் ஊற்று நீரால் உயிர்களை அது ஊட்டியருளுகிறது; அதுபோல் பொருள் வருவாய் குன்றி வறுமையுற்றிருந்தாலும் நல்ல குடியில் பிறந்தவர் தம்மிடம் வந்தவர்க்கு உதவியே செய்வர் என ஒளவையார் இவ்வாறு உணர்த்தியுள்ளார்.

உதவி புரிவது உயர் பிறப்பாகின்றது. வழிவழியாகவே கெழுதகைமை புரிந்து விழுமிய நீர்மையில் விளைந்து வருவது மேன்மைக் குடியாய் விளங்கி நின்றது.

நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகைஎன்ப வாய்மைக் குடிக்கு. 953 குடிமை

உண்மையான உயர் குடிக்கு உரிய நான்கு அடையாளங்களைத் வள்ளுவர் இங்ஙனம் குறித்திருக்கிறார் வந்தவரை முகம் மலர்ந்து உபசரித்தலும், இயன்றதை ஈதலும், இன்சொல் இசைத்தலும், யாரையும் இகழ்ந்து பேசாமையும் ஆகிய இந்த நீர்மைகள் அமைந்திருப்பவர் உயர்ந்த குடியில் பிறந்த சிறந்த மேன்மக்களாய்ச் சீர் பெற்றுள்ளனர்.

தம்மை உயர்ந்த குலத்தவராய் எண்ணிக் கொள்ளுபவர் இந்த நான்கு தன்மைகளும் தம்பால் உள்ளனவா? என்று உரிமையோடு பரிசோதனை செய்து ஓர்ந்து உணர்ந்து கொள்ள வேண்டும். உணராமல் களிப்பது ஊனமேயாம்.

மேலோர்களுடைய செயல் இயல்கள் அதிசய நிலைகளில் பெருகி வருதலால் எவரும் அவரைத் துதிசெய்து வருகின்றார்.

குமணன் ஒரு குறுநில மன்னன்; பெருந்தன்மையாளன்; நல்ல கொடையாளி, யாருக்கும் இல்லை என்னாமல் ஈந்து வந்த இவன் தம்பியால் அல்லல் அடைந்து அரசை இழந்து போய் அடவியை அடைந்தான், துறவிபோல் வறிய நிலையில் அங்கே தனியே வாழ்ந்து வந்தான். ஒருநாள் பெருந்தலைச்சாத்தனார் என்னும் புலவர் இவனை வந்து கண்டார். அவரைக் கண்டதும் ஏதேனும் கொடுக்க வேண்டுமே! என்று கருதினான். கையில் யாதும் இல்லாமையை எண்ணி உள்ளம் நொந்தான். தன் தலையைக் கொய்து கொண்டு வருவார்க்கு ஆயிரம் பொன் தருவதாகப் பகைமை கொண்டவன் உறுதி செய்திருந்தானாதலால் அதனை நினைந்து, உள்ளம் உவந்து, உதவி செய்ய விரைந்தான், புலவரை நோக்கினான்.

கலி விருத்தம்
(விளம் விளம் விளம் மா)

அந்தநாள் வந்திலீர் அருங்கவிப் புலவீர்!
இந்தநாள் வந்துநீர் நொந்தெனை அடைந்தீர்
தலைதனைக் கொண்டுபோய்த் தம்பிகைக் கொடுத்து
விலைதனைக் கொண்டுநும் வெறுமைநோய் களைக!

என்று இங்ஙனம் சொல்லிக் கொண்டே தன் தலையைச் சாய்த்துக் கொலை செய்யக் கொடுத்தான். புலவர் அலறி அழுதார், கண்ணீர் மார்பில் வழிந்தோட இப்புண்ணியனைப் போற்றி யிருத்திவிட்டு இளையவனிடம் சென்று நிலைமையை உணர்த்திப் பழையபடி இவனை அரசனாக்கி வைத்துவிட்டு அவர் அகன்று போனார். இவனது உபகார நீர்மை வியனாய் விளங்கி நின்றது.

ஆலைக் கரும்புபோல் அல்லலிடைப் பட்டாலும் மேலைக் குடிப்பிறந்தார் சாலவும் பிறர்க்கு உதவி செய்வார் என்பதை உலகம் இவர்பால் உணர்ந்து மகிழ்ந்தது.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)

இல்லாத நிலைமையிலும் தன்பால்வந்(து) இரந்தவருக்(கு)
இல்லை என்று
சொல்லாமல் தலைகொடுத்துத் தலைக்கொடையான் எனக்குமணன்
தோன்றி நின்றான்
மல்லாரும் மலையளவு வளமுறினும் அரைக்காசும்
வழங்கா(து) அந்தோ
கல்லான மனமுடைய பொல்லாதார் இக்காலம்
கலித்தார் அம்மா!'

பண்டிருந்த வண்மையையும் இன்றிருக்கும் புன்மையையும் எதிரே எடுத்துக்காட்டி இது பரிவூட்டியுள்ளது. வறிய நிலையிலும் குமணன் அரிய வள்ளலாய்ப் பெரிய மகிமை பெற்றான்; உயர்வு இழிவுகளின் நிலைமை தெரிய நெடிய செல்வம் இருந்தாலும் யாதும் உதவாமல் புல்லர் அவலமடைந்திருப்பர் என்றது.

‘புன்மை யாளர் புறப்பொருள் எய்தினும்
நன்மை காணலர் நாசமே காணுவார்’ என்றதனால் அவரது நீசநிலை தெளிவாம்.

புல்லனாயிழிந்து புலையுறாதே; நல்லவனாயுயர்ந்து நலம் பல பெறுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Jun-20, 2:25 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 236

மேலே