ஒத்த பிறரின் உயர்வு நலங்காணின் பிழைபேசி நிற்கின்ற பேதைமை - பொறாமை, தருமதீபிகை 621

நேரிசை வெண்பா

ஒத்த பிறரின் உயர்வு நலங்காணின்
சித்தங் கனன்று சிறுமையாய் – நித்தம்
பிழைபேசி நிற்கின்ற பேதைமைபோல் தீமை
உழையேதும் இல்லை உணர். 621

- பொறாமை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

பிறருடைய உயர் நிலைகளைக் கண்டு உள்ளம் பொறாமல் கனன்று பிழை பேசி நிற்றல் கொடிய மடமையாம்; இந்தத் தீமைபோல் தீயது வேறு யாதும் இல்லை என்கிறார் கவிராஜ பண்டிதர்; இது பொறாமையின் புலைநிலையை உணர்த்துகின்றது.

குணமும் குற்றமும் மனிதனிடம் மருவியிருக்கின்றன. குணம் நல்லது, குற்றம் தீயது. குணத்தால் இன்பமும் புகழும் வருகின்றன; குற்றத்தால் துன்பமும் பழியும் தொடர்கின்றன. அமுதம்போல் குணம் எவ்வழியும் மகிழ்ச்சி தந்து மாண்புறுத்துகிறது; குற்றம் நஞ்சுபோல் யாண்டும் நாசமே செய்கிறது. தனக்கு நேருகின்ற அழிவுகளை அறியாமல் இழிவுகளில் இழிந்து ஈனமாய் மனிதன் அழிந்து போகிறான்.

உயிர்க்கு இனியதை ஒருவி இன்னாமையை மருவி இன்னலுழப்பது மாய மயக்கமாய் மன்னி வருகிறது. தீயவை தீயினும் தீயன என்று தூயவர் உணர்த்தியுள்ளனர். அந்த உண்மையை யாதும் உணராமல் புன்மையைத் தோய்ந்து புலையாடி அழிவது நிலையான நெடிய வியப்பாய் நிலவியுள்ளது.

பொறுமை நல்லது; புண்ணியம் உடையது.
பொறாமை தீயது; பாவம் படிந்தது.

பொறுமை இனிய நீர்மையாய் இன்பம் தருகிறது; பொறாமை கொடிய தீமையாய்த் துன்பம் புரிகிறது. தன்னையுடையானைச் சிறுமைப்படுத்தி இருமையும் கெடுத்து விடுமாதலால் பொறாமை எவ்வளவு தீயது என்பது எளிது தெளிவாம்.

இட்டுள்ள பெயரே அதன் புலைப்புன்மையை வெளிப்படுத்தி யுள்ளது. பிறருடைய செல்வம் முதலிய நிலைகளைக் கண்டு உள்ளம் பொறாமல் அழன்று எள்ளல் புரிந்து நிற்கும் இழிநிலைக்குப் பொறாமை என்று பெயர்.

மனிதனுடைய நல்ல உள்ளத்தைத் தீயது ஆக்கிப் பொல்லாத அழுக்காய் நீசப்படுத்தி வருதலால் பொறாமைக்கு அழுக்காறு என்று ஒரு பேரும் வந்தது. உற்ற பெயரால் அதன் ஊனமும் ஈனமும் உணரலாகும்.

நோனாமை வக்கிரம் அழுக்காறு அவ்வியம்
கூரம் என்பது பொறாமையின் கூற்றே. - பிங்கலந்தை

பொறாமைக்கு உரிய பரியாய நாமங்களைப் பிங்கல முனிவர் இங்ஙனம் கூறியிருக்கிறார். கூரம், வக்கிரம் என்பன கூர்ந்து உணரவுரியன. நெஞ்சம் புழுங்கி எரிந்து வஞ்சமாய் மாறுபடும் நிலைகளை விளக்கியுள்ளன.

’ஒத்த பிறரின் உயர்வு நலம்காணின்
சித்தம் கனன்று சிறுமையாய்’ என்றது பொறாமையின் உருவநிலையை உணர்த்தி நின்றது.

தன்னுடைய நலங்களையே கருதி வருவது மனிதனிடம் இயல்பாய் மருவியுள்ளது. தன்னைவிடப் பிறன் உயர் நிலையை அடைந்தான் என்று காணும் பொழுது தன்க்கு ஏதோ சிறுமை நேர்ந்ததாகக் கருதி மறுகுகிறான். அந்த மாய மயக்கம் தீய இயக்கமாய்த் திரண்டு வருகிறது. உள்ளம் பொறாத அப்புன்மை பொறாமையாய்ப் பொங்கி எழுகின்றது. அதனால் பழிமொழிகளும் அழிகேடுகளும் விளைந்து மனித சமுதாயத்தில் எவ்வழியும் இழிதுயரங்கள் பெருகி ஈனங்கள் விரிந்து நிற்கின்றன.

கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

அன்னியற்(கு) அறிவுரு(வு) ஆக்கம் கண்டுகே(டு)
உன்னிஉட் பொறாமையாம் உருவி னேனுடன்
தன்னிலுட் புழுங்குமத் தன்மை யேவடி(வு)
என்னுமென் அசூயையை யாவர் வெல்வரே? 1

கூனிசொல் கொடுமையால் கோளி ழைத்துவெங்
கானிடை இராமனைக் கடத்தி விட்டதும்;
ஆனியுற் றிடுஞ்சுயோ தனன்பண்(டு) ஐவரை
மானிலத் தினில்பல வஞ்சம் செய்ததும்; 2

அந்தரத் தமரரில் அவனி மாந்தரில்
தந்தவப் பயனவ ரவர்க்குத் தக்கது
வந்தடுத் ததுவென மனம்கொ ளாதுளே
வெந்தவப் பொறாமையை யாவர் வெல்வரே. 3

யானுமென் அசூயையாம் இனிய தேவியும்
வானும்மண் ணுலகுமே வவ்வி யாரையும்
ஊனுமுள் ளுயிருமுப் புறையும் பாண்டம்போல்
தானுகச் செயிலெவ்வா றுறும்சந் தோடமே? 4 – மெய்ஞ்ஞான விளக்கம்

மோகன் என்னும் மன்னன் எதிரே நின்று மச்சரன் இவ்வாறு பேசியிருக்கிறான். மச்சரம் - பொறாமை. நான் இருக்கும் வரையும் இந்த உலகத்தில் ஒரு பயலும் சந்தோடமாயிருக்க முடியாது; எல்லாரும் என் வசப்பட்டு இழிந்து கிடத்தலால் எவரும் உயர்ந்த நல்லோராய் வெளிவர முடியாது என அவன் உரைத்திருக்கும் நிலைகளை ஈண்டு ஊன்றி உணர வேண்டும்,

உள்ளே பொறாமை கொண்டவன் உப்பு வைத்த பாண்டம் போல் இழிந்து ஒழிவான் என்றதனால் பொறாமையாளரது அழிநிலையும் அவலமும் அறியலாகும்.

புன்மை, பொறாமை, பொய்மை ஆகிய இத்தீமைகள் இந்த நாட்டு மக்களை ஈனப்படுத்தியிருத்தல் போல் வேறு எந்த நாட்டையும் கெடுக்கவில்லை.

நீசத்தனங்களை ஆசையோடு தழுவி நாளும் நாசம் அடைந்து வருகின்றனர். இழிவையும் அழிவையும் வழுவாது தருவதை நழுவாமல் கெழுமி நாசமுறுவது அதிசய வியப்பாயுள்ளது.

பஞ்சுட் பொதிந்த படுதீ பொறாமையுன்
நெஞ்சுட் புகினோ நினை.

இந்த உவமையை ஓர்ந்து சிந்திக்க வேண்டும். பஞ்சுப் பொதியுள் புகுந்த தீ சிறிதாயிருந்தாலும் அதனை அடியோடு எரித்துவிடும், அவ்வாறே நெஞ்சுள் புகுந்த பொறாமையும் மனிதனை நாசமாக்கி விடுமாதலால் அந்த நீசத்தின் நிலைமையை நினைந்து பாராமல் இழிந்து புலையுறுகின்றனர்.

பொறாமையில் இத் தென்னாடு மிகவும் முன்னேறியுள்ளது; அதன் அழி பயனை அனுபவித்தும் வருகிறது; வந்தும் விழி திறந்து பாராமல் பழி குருடாய்ப் பாழ்பட்டு உழலுகின்றது. தனக்கு நீசத்தையும் நாசத்தையும் தருவதை மனிதன் நேசித்து வருவது நித்திய விசித்திரமாய் இருக்கிறது.

பொறாமையுடையவர் எவராயினும் அவர் இழி மக்களாகவே கருதப்படுகின்றனர். புலைப்புன்மை எவரையும் புலைப்படுத்தி விடுதலால் புல்லர் நீசர் என அவர் எள்ளலடைந்தே இழிகின்றனர்.

பொறாமையாளரை இன்னவராக எண்ணிக் கொள்ள வேண்டும் என இனந்துலக்கியுள்ள இது மனங் கொள்ளத்தக்கது. எவன் நெஞ்சில் அழுக்காறு உள்ளதோ அவன் இழுக்கு மிகவுடைய இழிமகனே எனத் தெளிந்தருளியது விழித்து நோக்கவுரியது.

பழியான பொறாமையைப் பற்றினவர் எவ்வழியும் இழிநிலையாளராய் ஈனமுறுகின்றனர். மேன்மையான மனிதன் கீழ்மையில் இழியவே பான்மை சிதைந்து பழியடைய நேர்ந்தான்.

ஈனப் பொறாமையுனை ஈனனெனச் செய்யுமே
ஊனம் ஒழிக வுடன்.

இந்த ஞான மொழியை நயந்து தெளிக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Jun-20, 5:30 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 32

சிறந்த கட்டுரைகள்

மேலே