கோபமெனும் தீயோன் குடிபுகுந்தால் பாபம் விளையும் பழியுமாம் - கோபம், தருமதீபிகை 631

நேரிசை வெண்பா

கோபமெனும் தீயோன் குடிபுகுந்தால் அப்பொழுதே
பாபம் விளையும் பழியுமாம் - தாபமிகக்
கூட்டுமவன் கூடுமுன்னே கொன்றிடுக; நின்றிடநீ
நீட்டினுனைக் கொல்வன் நினை. 631

- கோபம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

கோபம் என்னும் தீயவன் உன்னிடம் குடிபுகுந்தால் அப்பொழுதே பாபமும் பழியும் விளையும், படு துயரங்களும் பெருகும்; அத்தீயவனைக் தலையெடாதபடி தொலைத்து விடுக; தலை எடுத்தால் கொலையை விளைத்து விடுவான் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல் கோபம் கொலை பாதகன் என்கின்றது.

குணமும் குற்றமும் மனிதனைப் பற்றி நிற்கின்றன. வழி முறையே தொடர்ந்து வந்திருக்கின்றன. குணம் நல்லது; குற்றம் தீயது. பழகிய அளவு எவையும் படிந்து வருகின்றன.

உயிர்க்கு இனிமையாய் நன்மை தருவது குணம் என வந்தது. கொடுமையாய்த் தீமை புரிவது குற்றம் என நேர்ந்தது. நல்ல மணத்தால் மலர் மாண்புறுதல் போல் இனிய குணத்தால் மனிதன் மகிமை பெறுகிறான். குணம் குன்றிய அளவு அவன் குன்றி நிற்கிறான். உயிரைக் குறுகச் செய்து துயரில் ஆழ்த்துவது குற்றமாகும். இத்தகைய குற்றங்களுள் கோபம் மிகவும் கொடியது. கொடுத்துயரங்களை யுடையது.

அதனால் விளையும் தீமைகளை நினைந்து தெளிந்து கொள்ள கோபத்தைத் தீயோன் என்.று உயர் திணையில் குறித்தது. 'கோபம் பாவம் பழி' என்பது பழமொழி. பழியும் பாவமும் கோபத்தால் விளையும் என்பதை இது தெளிவாக்கியுள்ளது.

விருப்பு வெறுப்புகள் சீவ சுபாவங்களாய் அமைந்திருக்கின்றன. தன் விருப்பத்திற்கு மாறு நேர்ந்தபோது அங்கே கோபம் உண்டாகின்றது. உணர்ச்சியும் இச்சையும் உடையவனாதலால் மனிதனிடமிருந்து முனிவு மூண்டு எழுகின்றது.

இந்தக் கோபத்தை மேலோங்க விடாமல் அடக்கினவன் ஆன்ற அமைதியாளனாய் மேன்மை பெறுகின்றான். அடக்க முடியாதவன் அல்லல் பல அடைந்து தாழ்வுறுகின்றான்.

கோபம் தீயதாதலால் அது எவ்வழியும் வெவ்விய துயரங்களையே விளைத்து விடுகின்றது. மனம் கனன்று முனைந்து வருதலால் கோபத்திற்கு முனிவு என்று ஒரு பெயரும் வந்தது.

முனிவும் செயிரும் சீற்றமும் வியர்ப்பும்
சினமென் கிளவி தெரிக்கும் காலே;
கறுவம் கோபம் கலாம்மறம் குரோதம்
வெகுளி என்பர் வேரமும் ஆகும். - பிங்கலந்தை

கோபத்தின் பரியாய நாமங்களாய் இவை வந்துள்ளன.

மனிதனுடைய உள்ளத்திலிருந்து கொதித்து எழுகின்ற துடிப்புகளை இந்தப் பெயர்களின் குறிப்புகளால் உணர்ந்து கொள்கிறோம். உருவ நாமங்கள் உலகறிய வந்தன.

ஆசை எப்படி மனிதனிடம் படிந்திருக்கிறதோ அப்படியே கோபமும் தொடர்ந்திருக்கிறது; இந்கத் தீய தொடர்புகளிலிருந்து விலகினவர் தூயராய் உயர்கின்றார்; விலகாதவர் மாய மயக்கங்களை யுடையராய் மறுகி உழல்கின்றார்.

உடம்பில் தொடர்ந்து படிகிற அழுக்கை நீரால் கழுவி நாளும் சுத்தம் செய்து வருதல் போல் உள்ளத்தில் எழுகிற மாசுகளை நீர்மையால் ஒழித்து வருபவர் சீர்மை பெற்றுச் சிறந்து விளங்குகின்றார். புனிதம் புண்ணியம் புரிகின்றது.

மனத்தில் சினம் மூளும் பொழுது அமைதியான மதி நலத்தால் அதனை விரைந்து அடக்கிவிட வேண்டும். அவ்வாறு அடக்காது நீளவிடின் அல்லல் பல விளைந்து விடும்.

கூடு முன்னே கொன்றிடுக என்றது கோபத்தை அடக்கும் குறிப்பை ஓர்ந்து கொள்ள வந்தது. தலையை நீட்டும் போதே சினத்தை அடக்கவில்லையானால் மனத்தைக் கவர்ந்து மாளாத் துயரங்களை அது விளைத்து விடுமாதலால் அவ்விளைவினை யுணர்ந்து விரைந்து செயல்படு.

’நீட்டின் உனைக் கொல்வன் நினை’ என்பதில் கோபத்தை நீளவிடின் அது உன்னைக் கொன்றே விடும். என்பது சிந்திக்கவுரியது. கடுத்து எழுந்த தீயை வளரவிடின் அடுத்திருந்த பொருள்களையெல்லாம் அடியோடு அது அழித்துவிடும்; உள்ளே மடுத்து மூண்ட கோபமும் முறுகியெழின் இனிய நன்மைகளையெல்லாம் கெடுத்து ஈனப்படுத்தி விடும்,

கலித்துறை
(மா விளம் விளம் விளம் மா)

சினத்தி னால்வரும் தீமையத் தீமைதீப் பிறப்பு
மனத்தின் நீடிய மருட்கையும் வறுமையும் நரகும்
அனைத்தும் நல்கிடும் ஆதலால் ஒருபொழு தயர்த்தும்
தனக்கு நல்லவன் வளர்ப்பனோ சீற்றமாம் தழலை.

- சேதுபுராணம்

கோபத்தால் விளையும் தீமைகளைக் குறித்துக் காட்டித் தன் உயிர்க்கு நன்மையை நாடுகின்றவன் அந்தக் கொடிய தீயை யாதும் கூடான் என இது உணர்த்தியுள்ளது. தன்னைக் கூடினவனை நீசத்தில் கூட்டி விடுதலால் அது நாசத் தீமை என நேர்ந்தது.

மனத்தில் சினத்தை வளர்த்து வருபவன் கோபி, மூர்க்கன் : கொடியன், பாவி எனப் பழியடைந்து பாழ்படுகின்றான், சினத்தை அடக்கி மனத்தைப் பண்படுத்தி வருபவன் மகாத்துமா என மகிமை பெற்று மாநிலம் போற்ற வருகின்றான்,

கோபம் சித்தத்தைப் பேதித்துச் சிறுமைப் படுத்தும் ஆதலால் அதனை அடக்கினவன் உத்தம சீலனாய் ஒளிமிகப் பெறுகின்றான். உள்ளம் நல்லதாய் உயர எல்லா மகிமைகளும் வருகின்றன

சாந்தசீலன், சன்மார்க்கன், சத்துவன் என்னும் பெயர்கள் எல்லாம் சித்த சாந்தியைப் பெற்றவர்களுக்கே சிறப்புரிமைகளாய் வந்துள்ளன. சினத்தை அடக்கிய நீர்மையாளரே இத்தகைய சீர்மைகளில் சிறந்து திகழ்கின்றார்.

கோபம் மூளும்போது சிறிது அமைதியாயிருந்து சிரித்துவிடின் அது சிதைந்து போகின்றது. தம்முடைய நகையையும் உவகையையும், கொல்ல வருகின்ற கோபத்தை மெல்லச் சிரித்து வெல்லும் நீரரே மேலான வீரராய் விளங்கியுள்ளனர்.

குறள் வெண்செந்துறை

எரியான கோபம் எழுபோதின் ஆறி இனிதாய கூறி எதிரே
சிரியா(து) இரார்கள் பெரியோர்கள்; சீற நினைவார்கள் வேறு சிலரே. – அஞ்ஞவதைப் பரணி

தீய கோபம் மீறி எழும்பொழுது இனியராய் ஆறியிருப்பவர் பெரியோர், சீறி எழுபவர் சிறியோர் என இது உணர்த்தியுள்ளது.

பெருமை சிறுமைகளுக்கு அடையாளங்களாய் வந்துள்ள இது ஆய்ந்து நோக்கத் தக்கது. அரிய செய்கை பெரியராக்குகிறது; எளிய மையல் சிறியராக்கி விடுகிறது. சிறுமையை வென்றவர் பெருமையில் உயர்கின்றார்.

மிகையாஎன் பொறைப்படைக்கு விருந்தாக்கி விடுகின்றேன்
பகைபாவம் கொடுமைகொலை படையுடைய கோபனையே.

விவேக மன்னன் முன் நின்று சாந்தன் இவ்வாறு கூறியிருக்கிறான். பகையும் பாவமும் கொடுமையும் கொலையும் படைகளாக உடையவன் என்றதனால் கோபனது கொடிய நெடிய தீமைகளை உணர்ந்து கொள்ளுகிறோம்.

கோபம் மிகவும் தீயது; அதனைச் சேராமல் பேணிச் சீர்மையுடன் வாழுக. அவ் வாழ்வு மகிழ்வு சுரந்து மகிமை நிறையும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Jun-20, 5:36 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 39

மேலே