பொறாமைப் பழிநிலையைப் புல்லா தொழிக - பொறாமை, தருமதீபிகை 622

நேரிசை வெண்பா

பொறுமை உயர்வு; பொறாமை இழிவு;
சிறுமை பலவும் செறிந்து – மறுமைநலம்
இல்லா தொழியுமே; ஈனப் பழிநிலையைப்
புல்லா தொழிக புறம். 622

- பொறாமை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

பொறுமை உயர்நலம் உடையது; பொறாமை இழிவான ஈனங்கள் பலவும் நிறைந்தது; பழி பாவங்கள் படிந்தது; இம்மை மறுமைகளைக் கெடுப்பது, அப்புன்மையை ஒழித்து நன்மையை நாடி ஒழுகுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

பிறர் செய்கிற இடர்களைப் பொறுத்துக் கொள்ளுதல் பொறுமை என வந்தது. பொறுத்கல் சகித்தல் மன்னித்தல் என்னும் மானச கருமங்களால் பொறுமையின் மருமங்களை உணர்ந்து கொள்ளலாம்.

இது அரிய பெரிய நீர்மை. தன்னையுடையானைப் பெரிய மகான் ஆக்கும் பெருமகிமையுடையது. புகழும் புண்ணியமும் விளைத்தலால் பொறுமை யாண்டும் கண்ணியமாய் மதிக்கப்பட்டுத் தெய்வ நீர்மையாய்ச் சீர்மை பெற்றுள்ளது.

“To forgive is divine.” (Pope)

பொறுப்பது தெய்வத் தன்மை” எனப் போப் என்னும் ஆங்கிலக் கவிஞர் இங்ஙனம் பாடியிருக்கிறார். பொறுமையாளர் திவ்விய மகிமைகளை அடைந்து கொள்ளுகின்றனர்.

’பொறுத்தார் அரசாள்வார்; பொங்கினார் போய்மாள்வார்’. என்பது இந்நாட்டில் வழங்கி வரும் பழமொழி. பொறுமையால் விளையும் பெருமேன்மைகளை இது காட்டியுள்ளது.

பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ்.” 156 பொறையுடைமை; பொறுமையாளர்க்குப் பெரிய புகழ் உண்டாம் என வள்ளுவர் இங்ஙனம் அருளியிருக்கிறார். சகித்தல் அரிய செயல் ஆதலால் அது புகழ் தவம் புண்ணியம் என்று போற்ற வந்தது.

நேரிசை வெண்பா

கறுத்தாற்றித் தம்மைக் கடியசெய் தாரைப்
பொறுத்தாற்றிச் சேறல் புகழால் - ஒறுத்தாற்றின்
வான்ஓங்கு மால்வரை வெற்ப! பயன்இன்றே
தான்நோன் றிடவரும் சால்பு. 19 - பழமொழி நானூறு

நேரிசை வெண்பா

கல்லெறிந் தன்ன கயர்வாய் இன்னாச்சொல்
எல்லாருங் காணப் பொறுத்துய்ப்பர் - ஒல்லை
இடுநீற்றால் பைஅவிந்த நாகம்போல் தத்தம்
குடிமையான் வாதிக்கப் பட்டு. 66

- சினமின்மை, நாலடியார்

நேரிசை வெண்பா

எள்ளிப் பிறருரைக்கும் இன்னாச்சொல் தன்னெஞ்சில்
கொள்ளிவைத் தாற்போற் கொடிதெனினும் - மெள்ள
அறிவென்னு நீரால் அவித்தொழுக லாற்றின்
பிறிதொன்று வேண்டா தவம். 81 அறநெறிச்சாரம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா மா காய் அரையடிக்கு)

வெறுப்ப ஒருவன் காரணத்தால்
..மிக்க மடத்தால் புரிபிழையைப்
பொறுப்பின் அதுவே பேரறமாம்;
..புகழும் நிறையும் மிகவளரும்
கறுப்பொன் றறியா அறிவினர்கள்
..கருத்தில் மகிழ்ச்சி யுளவாகும்;
ஒறுப்பின் வருவ(து) ஒன்றில்லை;
..அதனால் பொறுமை உயிர்த்துணையாம்.

- விநாயக புராணம்

நேரிசை வெண்பா

அன்னமனையாய் குயிலுக்கு ஆனவழகு யின்னிசையே
கன்னல் மொழியார்க்குக் கற்பாமே - மன்னுகலை
கற்றோர்க்(கு) அழகு கருணையே ஆசைசமயக்(கு)
அற்றோர்க்(கு) அழகுபொறை யாம். 66 நீதி வெண்பா

நேரிசை வெண்பா

அற்றவுறுப் பெல்லாம் அறுவையி னால்மறைப்ப
மற்றொருவர் காணா மறையுமால் - வெற்றி
அறையார் கழலாய்! அவமாய வெல்லாம்
பொறையான் மறைக்குமேல் போம். - பெருந்தேவனார்

'முன்னம் பொறுத்தீர் இன்னம் பொறும்.” தருமன்

'பொறை ஆடவர்க்குப் பூண்.’ - வீமன்

பொறைக் கயிற்றில் புகழை அசைப்பர் - சிவப்பிரகாசர்

"புயத்துறை வலியரேனும் பொறையொடும் பொருந்தி வாழ்தல்
சயத்துறை, அறனும் அஃதே,” 1

'பெருமையும் வண்மை தானும் பேரெழில் ஆண்மைதானும்
ஒருமையின் உணர நோக்கின் பொறையின(து) ஊற்றமன்றே. - இராமன்

பொறுமையைக் குறித்து வந்துள்ள இவை ஈண்டு ஊன்றி உணரவுரியன.

சித்த சாந்தியை அருளி மனிதனை உத்தம நிலையில் உயர்த்தி வருதலால் பொறுமைக்கு அளவிடலரிய பெருமைகள் உரிமைகளாயமைந்துள்ளன. பொறுமையாளன் புண்ணியவானாகிறான்,

To be so moral when he shall endure. - Shakespeare

'பொறுக்கும் பொழுதுதான் மனிதன் புனிதன் ஆகிறான்’ மானச தத்துவங்களை உய்த்துணர்ந்த மேலோர்கள் உள்ளப் பொறையை யாண்டும் வியந்து போற்றியுள்ளனர். பொறை ஏற நிறை ஏறுகிறது.

இத்தகைய பொறுமை அமுதத்தை மருவினவர் உயர்ந்து உய்தி பெறுகின்றார்; இழந்தவர் எவ்வழியும் இழிந்தவராய் வருந்துகின்றார். மான மனிதருக்கு விளையும் ஈனங்களை எண்ணி பொறாமை இழிவு என அதனை இங்ஙனம் இகழ்ந்தது; எந்த மனையுள் ஆமை புகுந்ததோ அந்த வீடு விளங்காது; எந்த மனத்துள் பொறாமை புகுந்ததோ அந்த மனிதன் விளங்க மாட்டான்.

'இழிபொறாமை அழிவே தரும் எனச் சீன தேசத்தில் இப்படி ஒரு பழமொழி வழங்கி வருகிறது. இதனை ஞான நோக்கோடு நாம் பார்க்க வேண்டும்.

தனக்கே கேடு தருவதை நாடிக் கொள்வதால் பொறாமையாளன் முழு மடையன் ஆகின்றான். தன் கேட்டுக்குத் தானே காரணன் என்பதை உணர்ந்தும் திருந்தாமல் இழித்துபடுவது ஈனப் பழக்கமாய் முடிந்துள்ளது.

Envy is ignorance. - Emerson

'அசூயைப் படுவது அறிவிலிகள் செயல்' என எமர்சன் என்னும் அமெரிக்க அறிஞர் கூறியுள்ளார். தனது அழிவு நிலையை உணராமல் பொறாமையை மனிதன் கொண்டு மகிழ்கிறான், இது ஒரு மாய மயக்கமாய் மருவி வருகிறது. தன் உயிர்க்கு யாண்டும் பெருந்துயரமான இழி பொறாமையை விழைந்து உவந்து கொள்வது வியப்பாயுள்ளது. நஞ்சு குடித்தவன் நாசமுறுதல் போல் பொறாமை பிடித்தவன் நீசம் உறுகின்றான், அந்த நீச நிலையால் மனித சமுதாயம் நாசமடைந்து போகிறது.

புல்லி நின்றால் அழிவுறுதல் கருதி ஈனப் பழிநிலையைப் புல்லாது ஒழிக. என்றது. ஈனன்; கீழோன்; இழிபழியாளன்; என மனிதனைப் பாழ் படுத்தித் தாழ்த்தி வருதலால் பொறாமை கொடிய நீசமாய் முடிவு செய்யப்பட்டது.
உள்ளத்தைக் கீழ்மையாக்கி ஊனப்படுத்துகிற அந்த ஈனத்தையுடைய மனிதன் அதோகதியையே அடைகிறான். பொறாமையால் மனம் கெடவே மனிதன் கெட்டவனாகின்றான்; கேடுகள் விளைந்து வாழ்வு முழுவதும் பாழாய் வழி வழியே இழிவும் அழிவும் பெருகி வருகின்றன. போங்காலம் புகுந்த போதுதான் பொறாமை புகும் என்பது முதுமொழி.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

மாங்கனி வாயிற் கவ்வி
= மரத்திடை யிருக்கு மந்தி
பாங்கர்நீர் நிழலை வேறோர்
= பழமுணுங் குரங்கென் றெண்ணித்
தாங்கரு மவாவிற் றாவிச்
= சலத்திடை யிறந்த தொப்ப
நீங்கரும் பொறாமை யுள்ளோர்
= நிலத்திடைக் கெடுவர் நெஞ்சே. 1 பொறாமை, நீதி நூல் 303
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

ஒரு மந்தி மாம்பழத்தை வாயில் கவ்விக் கொண்டு மரக் கிளையில் இருந்தது. கீழே பெருகியிருந்த நீர் நிலையைப் பார்த்தது; தன் சாயல் தெரிந்தது; ஒரு குரங்கு பழம் தின்னுகிறதே! என்று பொறாமை கொண்டது; அதன்மேல் சினந்து பாய்ந்தது; நீருள் மூழ்கி மாய்ந்தது, பொறாமையுடையவர் தாமாகவே இப்படி மாண்டு மடிவார் என இது உணர்த்தியுள்ளது.

உள்ளத்தில் பொறாமை புகுந்தபொழுது அந்த மனிதன் இழிந்தவனுகின்றான், எவ்வழியும் அல்லலே அடைகின்றான், சிறுமையும் துன்பமும் தருகின்ற அத்தீமையை மருவாமல் தன்னைக் காத்துக் கொண்டவனே பெருமையும் இன்பமும் பெற்றவன் ஆகின்றான். புன்மையான பொறாமை புலைத் துன்பங்களை விளைத்து விடுமாதலால் அதனை ஒழித்து ஒழுகுபவன் உயர் மகிமைகள் பெறுகின்றான்.

பொறாமை புலைநரகம் ஆகும் அதனை
உறாமை உயர்வாம் உயிர்க்கு.

உயர்நிலை தெரிந்து உறுதி நலம் பெறுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Jun-20, 10:11 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 34

சிறந்த கட்டுரைகள்

மேலே