வரதரின் யானை வாகனம்

காஞ்சியிலே, வரதராசப் பெருமான் யானை வாகனத்தே திருவீதிஉலா வருகிறார்.அந்தக் காட்சியை இப்படி வருணிக்கிறார் காளமேகம்

ஒருமா என்பது ஒன்றில் இருபதிலொரு பங்கு. அதனை அமைத்து அழகாகச் செய்யுள் இயலுகின்றது.

நேரிசை வெண்பா

எட்டொருமா எண்காணி மீதே இருந்தகலைப்
பட்டொருமா நான்மாவிற் பாய்ந்ததே - சிட்ட(ர்)தொழும்
தேவாதி தேவன் திருவத்தி பூர்வரதன்
மாவேறி வீதிவரக் கண்டு. 134

- கவி காளமேகம்

பொருளுரை:

அவன் மாவேறி வீதியிலே வந்தான். அதைக் கண்டு ஒருமா நான்மாவிற் பாய்ந்தது என்று சொல்லுகிறார். இதன் பொருள்.

எட்டு ஒருமா எண் காணி மீதே இருந்த (எட்டு ஒருமா+இரண்டுமா (எண் காணி) = பத்துமா - அரை) ஒரு நங்கையின் அரையின் மீது இருந்த ஆடையாகிய பட்டானது தூய்மையான ஒழுக்கமுடைய பெரியார்கள் தொழுது போற்றும் தேவர்களுக்குள் ஆதிதேவனும் திரு அத்திகிரி என்னுமிடத்தே வீற்றிருப்போனுமான வரதராசப் பெருமான் யானையாகிய விலங்கின் மேலாக அமர்ந்து திருவீதியிலே உலாவரக் கண்டு (ஒருமா - நான்மா = ஐந்துமா - காலில்) அரையி னின்றும் நழுவிக் காலில் வீழ்ந்ததே!

பெருமான் திருவீதி உலாவரக் கண்டு அவன் அழகிலே மயங்கிய ஒரு நங்கை தன் இடையிற் பட்டுத் தளர்ந்து சோரக் காதல் மயக்கத்தினளாகி நின்றாள் என்பது கருத்து.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Jun-20, 9:46 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 38

சிறந்த கட்டுரைகள்

மேலே