4 அவளுடன் பேசும்போது

____________________

"நகரவேயில்லை நிலவும் கவிதையும்" என்ற குறுஞ்செய்தி பார்த்ததும் நான் அவள் வீட்டுக்கு கிளம்பினேன்.

நாய்குட்டிகளை குளிப்பாட்டி கொண்டிருந்தாள். "வீட்டுக்கு மனிதர்கள் வந்து உள்ளனரா" என்று அவள் கேட்டது புரியவில்லை.

"யார்...எந்த மனிதர்? வருகை என்றால்..."

அவள் சிரித்தாள்.

"நீங்கள்தான் எந்த பண்டிகையும் கொண்டாடுவது இல்லை.
பொங்கலுக்கு உங்கள் வீட்டுக்காவது உறவினர் யாரும் வந்தனரா என்று கேட்டேன். நீங்கள்தான் யாரேனும் அண்ணா என்று அன்போடு அழைத்தாலும் புனைஉறவுகள் மீது நம்பிக்கை இல்லை என்று சொல்லி விடுவீர்கள். அதுதான் மனிதர்கள் வந்தனரா என்று கேட்டேன்." என்றாள்.

குட்டிகள் குளித்து முடித்த நிலையில் அதில் ஒன்றை வாங்கி மெல்ல துவட்ட ஆரம்பித்தேன்.

நேற்று ஏன் நிலவு நகராது போனது?

"தூக்கமில்லை. இவன் கொஞ்சம் படுத்தி விட்டான். புத்தகம் வாசிக்க போனேன்.
அதுவும் புரிய ரொம்ப சிரமம்."

யார் எழுதியது?

தேவதேவனின் கவிதைகள்.

அதில் என்ன?

அந்த வாசிப்பில் எனக்கு எந்த அனுபவமும் கை கூடவில்லை.

எப்படி படித்தாய்? வாசித்தாயோ பள்ளிக்கூடத்து வாய்ப்பாடு போல.

இல்லை. நீங்கள் சொல்லியது போலவே. மனம் வாசிக்கும்போது நான் அதை கேட்டு கொண்டு இருந்தேன்.

வேறு?

நேற்று நான் சற்று நிதானத்தில் இல்லை. என் மனதில் கொஞ்சம் சஞ்சலம்...

அப்போது நீ ஆத்மாநாம் அல்லவா வாசிக்க வேண்டும். அல்லது வேறு ஏதேனும் நாவலோ கதைகளோ...

எனக்கு தோன்றவில்லை. ஸ்பரி. அந்த நள்ளிரவில் உங்களுக்கு போன் செய்ய விருப்பமும் இல்லை.

கவிதைகள் காட்டில் சஞ்சரிக்கும் பாஷை என்று சொல்லியிருந்தேன் அல்லவா?
அது குமிழிக்குள் இருக்கும் காற்றை நம்பும் மரணத்தை போன்றது. எந்த தருணத்தில் உனக்கு வசப்படுகிறதோ அப்பொழுது அந்த கவிதையாகவே நீ மாறி இருக்க வேண்டும்.

ஆனால் அவர் கொஞ்சம் எளிமைப்படுத்தி சொல்லவில்லை என்று தோன்றியது.
அவர் சொல்கிறார்...

"அதனாலென்ன?
மொழிபெயர்ப்பின்
மொழிபெயர்ப்புத்தானே முற்றான கவிதை"... என்று.

ஆமாம். இதோ இருக்கிறதே.

நான் அந்த பக்கத்தை பார்த்து கொண்டு இருந்தேன்.

"உணர்வை, உள்வாங்குதலை அப்படி சொல்கிறார்."

நீங்கள் இதை இப்படி சொல்கிறீர். அவர் என்ன சொல்வார்? அதுதான் வேண்டும் எனக்கு.

நீ என்ன குழந்தையா? ஒரு கவிதை வாசிக்கும்போது அது உன் உணர்வினில் எதை முழுவதும் விளைவிக்கிறது?
அதன் அர்த்தங்கள் முடிந்த அளவு நேர்பட கொள்ளாது போயின் பின் அதற்குள் இருக்கும் அரூபங்களில் நீ எவ்வளவு நெகிழ்கிறாயோ அவ்வளவும் அதன் அர்த்தம் என்று ஏன் கொள்ளக்கூடாது?

ஸ்பரி இது சுதந்திரமா? தப்பித்து கொள்வதா?

"சரி எந்தக்கவிதைக்கு யார் நோட்ஸ் போட்டு உள்ளனர்? ஏன் அப்படி வரவில்லை. இவர் கவிதைக்கு இதுதான் அர்த்தம்.

ஆகவே இப்படி புரிந்து கொள்ளுங்கள் என்று ஏதேனும் உள்ளதா?"

ஸ்பரி...

"நீ முடிந்த வரை கவிதைகள் படி. ஆனால் அதன் பின் புலங்கள் முக்கியம். ஷெல்லியா பைரனா பணிக்கரோ யாரை வேண்டுமானாலும் படிக்கலாம்.

முடிந்தளவு அந்த கவிஞரின் வாழ்க்கை, வாழ்ந்தவிதம், அவர் நாட்டின் அரசியல் நிலை சமூகம். இப்படி படிக்கும் தகவல்கள் இன்னும் அந்த கவிதையை வெளிச்சம் ஆக்குமே."

"எப்படியோ நான் இதுவெல்லாம் எழுத மாட்டேன். எனக்கு மொழி திரளவில்லை."

சற்று ஆழ்ந்த வாசிப்பில் இரு. ஒருவேளை பின்னால் எழுதக்கூடும்.

குட்டிகளுக்கு நாளை தடுப்பூசிகள் போடவேண்டுமோ? டாக்டர் கொடுத்த லாக் புக் இருக்கிறதா?

ஆம் ஸ்பரி. இருக்கிறது. நீங்கள் வீட்டுக்கு போகும்போது நானும் வருகிறேன். அம்மாவை பார்க்க வேண்டும்.

சரி என்றேன்.


🎵🎵🎵🎵🎵🎵

எழுதியவர் : ஸ்பரிசன் (25-Jun-20, 10:28 am)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 39

மேலே