உன்னிலும் அதிகம்

காளமேகம் திருக் கண்ணபுரத்தில் இருந்தபோது நடந்த நிகழ்ச்சி இது தெருவில் செல்லும்போது மழை பெய்யத் தொடங் கிற்று. அருகிலிருந்த பெருமாள் கோயிலில் சற்று ஒதுங்கிக் கொள்ள விரைகிறார் காளமேகம். அந்தக் கோயில் நம்பியாரோ இவைர உள்ளேவிட விரும்பவில்லை. கதவை அடைத்துத் தாளிடுகிறார். அப்போது, 'பெருமாளே! உன்னிலுமோ நான் அதிகம் என்று சொல்வது போலப் பாடியது இது.

நேரிசை வெண்பா

கண்ணபுர மாலே கடவுளிலும் நீயதிகம்
உன்னிலுமோ யானதிக மொன்றுகேள் - முன்னமே
உன்பிறப்போ பத்தாம் உயர்சிவனுக் கொன்றுமில்லை
என்பிறப்பெண் ணத்தொலையா தே. 137

- கவி காளமேகம்

பொருளுரை:

“கண்ணபுரப் பெருமானே! கடவுளாகிய சிவபெருமானைக் காட்டினும் நீ பெரியவன் தான், உன்னைக் காட்டிலுமோ யானே பெரியவன். ஒரு செய்தி மட்டும் கேட்பாயாக. உன்னுடைய பிறப்போ முன்னாளிலே பத்து மட்டுமே யாகும். உயர்வுடைய சிவனுக்குப் பிறப்பு ஒன்றுமே கிடையாது. ஆனால் என் பிறப்பு எவ்வளவு தெரியுமா? எண்ணத் தொலையாத அளவினது! இதையாவது அறிந்து கொள்’

'காளமேகம் நுழைந்தால் பெருமாள் கோயிலின் புனிதம் கெட்டுவிடும் என்று கருதிக் கதவடைத்த நம்பியாரை வெட்கமுறச் செய்வதற்குக் கவிஞர் இப்படிப் பாடினார் என்று கொள்ள வேண்டும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Jun-20, 6:42 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
Tanglish : unnilum atigam
பார்வை : 31

சிறந்த கட்டுரைகள்

மேலே