புறப்பட்ட வேடிக்கை

சிவபெருமானின் நகர்வலத்தைக் கண்டகாளமேகம் அதனை நிந்திப்பதுபோல இப்படிப் போற்றுகின்றார்.

கட்டளைக் கலித்துறை

வாணியன் பாடிட வண்ணான் சுமக்க வடுக(ன்)செட்டி
சேணியன் போற்றக் கடற்பள்ளி முன்றொழத் தீங்கரும்பைக்
கோணியன் வாழ்த்தக் கருமான் றுகிறனைக் கொண்டணிந்த
வேணிய னானவன் தட்டான் புறப்பட்ட வேடி(க்)கையே! 138

- கவி காளமேகம்

பொருளுரை:
:
"பிரமன் மறை முழக்கம் செய்து வரவும், வெண்ணிற எருதான நந்தி சுமந்துவரவும், வயிரவனும் முருகனும் இந்திரனும் போற்றி வரவும், திருப்பாற் கடலில் பள்ளி கொள்வோனான திருமால் தொழவும், இனிய கரும்பினையே வில்லாக வளைத்துக் கொள்வோனான மன்மதன் வாழ்த்து உரைக்கவும், யானைத் தோலை உரித்துக் கைக்கொண்டு அணிந்த சடாமுடியினை உடையவனும், எவருக்கும் காட்சிக்குத் தட்டுப்படாதவனுமான சிவபிரான் வெளியே உலாவரப் புறப்பட்டது ஒரு வேடிக்கையே”

பாட்டை நேராகவே 'வாணியன் பாட' என்றாற் போலப் பொருள்கொண்டால் நிந்தையா யிருப்பதும், நுட்பமாகக் கருதினால் பொருள் புலனாவதும் காண்க.

வாணியன் - கலை வாணியை உடையவன்; பிரமன்.

வண்ணான் வண்ணமுள்ள ஆன், நந்தி;

வடுகன் - வயிரவன் செட்டி - முருகன்;

கடற் பள்ளி - கடலிற்பள்ளி கொள்ளுகிற திருமால்,

கருமான் - யானை; தட்டான் - காட்சிக்குத் தட்டுப் படாதவன்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Jun-20, 7:54 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 41

சிறந்த கட்டுரைகள்

மேலே